விலகாத வெள்ளித் திரை – 3 – லதா சரவணன்

 விலகாத வெள்ளித் திரை – 3 – லதா சரவணன்

எப்படியாவது படம் பார்க்கப்போகவேண்டும் என்று மனதில் வேட்கை யாரைக் கேட்பது மெல்ல அம்மாவிடம் வந்தான், கம்பரிசியில் சமைத்த கஞ்சில் மோரையும் பழையகஞ்சியையும் சேர்த்து ஊறுகாய் வட்டிலையும் தன் பக்கம் நகர்த்தி வைத்த தாயிடம், “அம்மா நம்ம முதலியார் தியேட்டர்லே ஒரு படம் ஓடுதாம். நானும் போய் பார்க்கட்டா ?!” என்றான் கண்ணன்

“படம் பார்க்குறே வயசாடா கண்ணா உனக்கு விளையாடுறீயா ? அதுக்கு அரையணாக்கு மேல ஆகுமே அது இருந்தா மூணுநாலு நாளைக்கு நாம அரிசிச்சோறு சாப்பிடலாமே…?!”

“அதான் நேத்து இரண்டு ரூவா வந்துதே ?!”

“வந்திட்டா அதுக்கேத்த பலகாரம் செய்ய பொருள் வாங்கினோமே அதுக்கு காசு திருப்ப வேணாமா ?! செட்டியாருக்கு ஏற்கனவே ஒருரூவா பாக்கி மீதி ஒரு ரூவாயில உனக்கும் உன் தம்பி தங்கைக்கும் ஒரு சீட்டித்துணி வாங்கலான்னு இருக்கேன். சினிமா எல்லாம் நமக்கு அதிகன்டா கண்ணா வேலையைப் பாரு வாத்தியாரு எதுக்கோ கூப்பிட்டாறாம் என்னன்னு கேட்டுட்டு அப்படியே அவரு அரையணா தரணும் மறக்காம வாங்கிட்டு வா……..சரியா….?” அம்மாவின் பதில் ஏமாற்றம் தந்தாலும் ஒரு ரூவாயை எடுத்துக் கொண்டு, வாங்கியப் பொருளுக்கு தாரை வார்த்தான் மீதி ஒரு ரூபா எங்கே என்று அன்னையிடம் கேட்க பயமாகவும், தயக்கமாகவும் இருந்தது.கண்ணன் போகும் போது வாத்தியார் எங்கேயோ கிளம்பிக்கொண்டு இருந்தார். “வாடா கண்ணா என்னாச்சு இத்தனை தூரம் ?”

“அய்யா வெளியே தெருவ போகும்போது வந்திட்டேனோ அம்மா கூப்பிட்டதா சொன்னாங்க.?”

“ஆமாண்டா இந்த முதலியார் கொட்டகைக்கு தான் போறேன். அங்கே பலகாரக்கடை போடப் போறதா சொன்னாங்க நல்லா ருசியா பலகாரம் செய்ய யாராவது தெரியுமான்னு கேட்டாங்க. அதான் உங்களைக் கை காமிப்போன்னு நினைச்சேன்.”

“அப்போ நீங்க கொட்டகைக்கு சினிமா பாக்கப்போறீங்களா ?”

“ஆமாண்டா கொட்டகைக்கு தான் நாளைக்குத்தான் காட்சி தொடங்குது. ஆனா இன்னைக்கு அழைப்பு கொடுத்தாங்க நீயும் வர்றீயா ?” வாத்தியாரின் கேள்வியில் விழிகளை விரித்தான் கண்ணன். சந்தோஷமாய் தலையாட்டினான். வாத்தியாருடன் செல்வதால் ஏக போக வரவேற்பு கிடைத்தது கண்ணனுக்கு மரபென்ஞ்சில் அவர் அமர்ந்திருக்க அவன் மண்தரையில் மணல் வீடுகளைக் கட்டிக் கொண்டே படத்தைப் பார்த்தவன். சொல்லவொண்ணா நினைப்போடு வாத்தியாரின் சைக்கிளிலேயே வீட்டுக்கு வந்திறங்கினான். அம்மா வாசலிலேயே வாத்தியார் விவரங்களைச் சொல்லி நகரவும் கம்பங்கஞ்சியை தட்டில் விட்டு மகனிடம் நீட்ட, “அம்மா…?!”என்று இழுத்தான் கண்ணன்.

“என்னடா ? அதான் சினிமா பார்த்திட்டியே அப்பறம் என்ன ?”

“இல்லைம்மா அதிலே ஒரு அம்மா அவங்க வீட்டுக்காரரும் இறந்துடறாரு பாவம்மா அந்தம்மா எவ்வளோ கஷ்டப்படறாங்க ? நான் உன்னை அப்படி கஷ்டப்பட விடமாட்டேன்மா.” தன்னைக் கட்டிக்கொண்டு அழும் மகனை அன்போடு தழுவிக்கொண்டார் பத்மா.

“ஆம்பிளைப் பிள்ளை அழக்கூடாதுடா என் வம்சத்தை விளங்க வைக்க பிறந்தவன்டா இங்க பாரு உனக்கு செட்டியார் கடையிலே சட்டைத்துணி வாங்கியிருக்கேன்.” தன் முன் கடைபரப்பி வைத்திருந்த உடைகளைப் பார்த்தவன் ஆசையோடு வருடிவிட்டு அந்த உடையினை அணிந்து கொள்ளப்போகும் நேரத்தை ரசனையாய் நினைத்தபடியே நின்றிருந்தான்.

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...