நீயெனதின்னுயிர் – 12 – ஷெண்பா

 நீயெனதின்னுயிர் – 12 – ஷெண்பா

ஹாஸ்டல் மொத்தமும் ஆரவாரமும், அமர்க்களமுமாக இருந்தது. தங்களது படிப்பை நல்லபடியாக முடித்த திருப்தியுடன், தங்களது குடும்பத்தினரை மீண்டும் பார்க்கப் போகும் சந்தோஷமும் இருந்தாலும், அனைவரின் மனத்திலும் தோழிகளைப் பிரியப் போகும் கவலையில் கண்கள் கசிந்தன.

தோழிகளிடமும், ஹாஸ்டல் வாடர்ன், வேலை செய்பவர்கள் என அனைவரிடமும் பிரியா விடைபெற்றுக் கிளம்பிய மாணவிகள், பேருந்து நிலையத்திற்கும், இரயில் நிலையத்திற்கும் கல்லூரியின் வாகனத்திலேயே அனுப்பி வைக்கப்பட்டனர்.

பொழுது மெல்லப் புலர ஆரம்பித்தது. அந்த விடியலைப் போலவே தங்களது வாழ்க்கையும், புத்துணர்ச்சியுடன் மலரும் என்ற நம்பிக்கையுடன், அவரவர் செல்ல வேண்டிய பேருந்தில் சென்று அமர்ந்தனர்.

புனேவிலிருந்து புறப்பட்டு விட்டதாகத் தந்தைக்குக் குறுந்தகவலை அனுப்பிவிட்டு கைப் பேசியை அணைத்தவள், வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.

பேருந்து மெல்ல நகர ஆரம்பித்தது. தன் தாய்வீட்டை விட்டுப் பிரியும் மணப்பெண்ணைப் போல, வைஷாலி யின் இதயம் கனத்தது. விழிகளில் அரும்பிய நீரைக் கட்டுப்படுத்த இமைகளை மூடி அணையாக்கினாள். அவளது நினைவுகள் ஒவ்வொன்றாய் மேலெழுந்து குதியாட்டம் போட்டது.

நினைவு தெரிந்த நாள் முதலாய் வளர்ந்த ஊரை விட்டுச் செல்வது சங்கடமாக இருந்தது. கூடவே இதயத்தில் ஒளிந்திருந்த காதல் உணர்வுகள் தலை தூக்கியது. ‘அவனை, இனி எப்போது பார்ப்போம்?’ என்ற ஏக்கம் எழ, வேதனையில் தொண்டை அடைத்தது.

மனத்தில் மலர்ந்திருந்த நேச உணர்வுகள், ‘நீ மீண்டும் இங்கே தானே வரப்போகிறாய்’ என்று எடுத்துரைக்க, அந்த இனிய நினைவுகளில் மூழ்கியவளின் அனுமதி இல்லாமலேயே, மூடிய விழிகளுக்குள் அழையாமலேயே வந்து நின்றான் அவளுக்கு வழித்துணையாக.

வாசலிலேயே காரை நிறுத்திவிட்டு, தந்தையும், மகளும் சப்தமில்லாமல் வாசலில் வந்து நின்றனர். உதட்டில் விரல் வைத்து, “ஷ்!” என்றவள், மொபைலில் வீட்டு எண்ணை அழுத்தினாள்.

“ருத்ரா! இந்தத் துணியை அக்காவோட ரூமில் வச்சிடு” என்று வேலைக்காரப் பெண்ணிடம் சொல்லிக் கொண்டே போனை எடுத்தவர், “சொல்லு வைஷூ! தயாராகியாச்சா…? எல்லாத்தையும் பத்திரமா எடுத்து வச்சிட்டியா? அரைமணி நேரம் முன்னாலேயே ஸ்டேஷனுக்கு வந்திடு” என்றார்.

“அம்மா! நான் சொல்றதைக் கொஞ்சம் கேளுங்க… வந்து…”

“என்னடி…! ஊருக்கு வராமலிருக்க, புதுசா ஏதாவது கதை சொல்லப்போறியா? ஏற்கெனவே எக்சாம் முடிஞ்சதும் ஃப்ரெண்ட்ஸ் கூட ரெண்டு நாள் இருந்துட்டு வரேன்னு சொன்ன… சரின்னு விட்டா, இப்போ என்ன செய்யப் போற?” என்று கோபத்துடன் கத்தினார்.

சிரிப்பை அடக்கிக்கொண்டு, “இல்லம்மா… நான் இப்போ…” என்று இழுத்தாள்.

“இப்போ என்னடி… இழுக்காமல் சொல்லித் தொலையேன்!” மகள் வராத ஏமாற்றம், ஆத்திரமாக அவரது பேச்சில் வெளிப்பட்டது.

“என்னம்மா நீங்க? சொல்ல வர்றதைக் கேட்காம… வந்து கதவைத் திறங்க. எவ்வளவு நேரம்தான் வாசலிலேயே நிக்கறது?” என்று வேண்டுமென்றே கத்தினாள்.

முதலில் அவள் சொன்னதைப் புரிந்து கொள்ளாத தேவிகா… அது புரிந்ததும், “என்னது…! வாசலில் நிக்கிறியா? உண்மையாவா?” என்று கேள்வியை அடுக்கியபடியே ஓடோடி வந்து கதவைத் திறந்தார்.

“அம்மா!” என்ற சந்தோஷக் கூச்சலுடன், அன்னையின் கழுத்தைக் கட்டிக்கொண்டு கன்னத்தில் முத்தமிட்டவள், அவரை வாசலுக்கு இழுத்து, தோள்களைப் பற்றிக் குதூகலத்துடன் சுற்றினாள்.

“கடவுளே!” என்று சலித்துக்கொண்ட தேவிகா, “ஏய்! நில்லுடி… நானென்ன வயசுப் பொண்ணா? உனக்குச் சரிசமமா ரங்கராட்டினம் சுத்த…” என்று அஸ்ஸுபுஸ்ஸென மூச்சு வாங்கியவர், வராண்டாவிலிருந்த சோஃபாவில் ஓய்ந்து போய் அமர்ந்தார்.

“என் செல்ல அம்மா! இப்போ நம்பறீங்களா?” என்றவள், அன்னையின் கன்னத்தைப் பற்றி ஆட்டினாள்.

அவளை முறைத்த தேவிகா, “ஆமாம், இன்னைக்கு நைட் டிரெயின்ல தானே வர்றதா சொன்ன… எதுக்குக் காலையில கிளம்பி வந்த? அட்லீஸ்ட்… வந்தவ, எனக்குப் ஃபோன் செய்து சொல்லணும்னு அறிவாவது வேணாம்? எங்க பார்த்தாலும் ஆக்சிடெண்ட், அது இதுன்னு நடக்குது… இதுல, பஸ்ல இத்தனைத் தூரம் தனியா வந்திருக்க!” எனச் சப்தமிட, அலுப்புடன் வீட்டினுள் நுழைந்தாள் வைஷாலி.

“நான் ஒருத்தி பேசிட்டிருக்கேன் கொஞ்சமாவது மரியாதை இருக்கா இந்தப் பொண்ணுக்கு? எல்லாம் நீங்க கொடுக்கற செல்லம்!” சோஃபாவில் ஓரமாக அமர்ந்து மகளின் கலாட்டாவை ரசித்துக்கொண்டிருந்த கணவருக்கு, ஒரு மண்டகப்படியை அளித்துவிட்டு மகளைத் தேடிச் சென்றார்.

“ஹாய் ருத்! சௌக்கியமா?” என்று விசாரித்தவள், தண்ணீரை எடுத்து அருந்தினாள்.

அந்த வேலைக்காரப் பெண் பதில் சொல்லும் முன் அங்கே வந்த தேவிகா, “நீ போய் வேலையைப் பார்” என்று அவளைச் சமையலறைக்கு அனுப்பிவிட்டு, மகளிடம் திரும்பினார்.

“வைஷூ…!” என்று ஆரம்பித்தவரை, இமைக்காமல் பார்த்தாள்.

“ஹுப்ஸ்!” என்றவள், “அம்மா! நமக்கு எது நடக்கணும்னு இருக்கோ, அது நடந்தே தீரும்; சும்மா புலம்பாதீங்கம்மா…” என்று கெஞ்சலாகச் சொன்னவள், “ரொம்ப நாள் கழித்து உங்க கையால சாப்பிடப் போறேன்னு சந்தோஷமா வந்திருக்கேன். பசிக்குதும்மா…” என்று பரிதாபமாக முகத்தை வைத்துக் கொண்டு, அன்னையின் தோளில் சாய்ந்து கொஞ்சலாகப் பேசினாள்.

மகளது பசியறிந்ததும், அவரது கோபமெல்லாம் பறந்தோடி விட்டது. “நீ நாளைக்குத் தானே வரேன்னு ஸ்பெஷலா எதுவும் சமைக்கலையேடி கண்ணம்மா! ஒரு அரைமணி நேரம் பொறுத்துக்கோ… உனக்குப் பிடிச்ச தால் ஃப்ரையும், கோபி மஞ்சூரியனும் தயார் பண்ணிடுறேன்” என்றபடி சமையலறைக்கு ஓடினார்.

“அதுக்குள்ள நான் ஒரு குளியல் போட்டுட்டு வந்திடுறேம்மா…” என்று குரல் கொடுத்தவள், தனது பெட்டியை எடுத்துக்கொண்டு அறைக்குள் நுழைந்தாள்.

குளித்துவிட்டுத் தலையைத் துடைத்துக்கொண்டே வந்தவள், போனை எடுத்து ஆராய்ந்தாள். ‘அட! சீமாக்கா ஃபோன் செய்திருக்காங்களே…’ என்று எண்ணிக் கொண்டே, சீமாவை அழைத்தாள்.

“என்னம்மா, வீட்டுக்குப் போனதும் அம்மாவோட முந்தானையைப் பிடிச்சிட்டு சுத்திட்டு இருக்கியா? ஃபோன் செய்தால்கூட எடுக்க மாட்டேங்கறீங்க…” என்று வழக்கம் போல, தன் பல்லவியை ஆரம்பித்தாள் சீமா.

“அதெல்லாம் ஒண்ணுமில்லை. அலுப்பு போகக் குளிச்சிட்டு வந்தேன். நானே ஃபோன் செய்யணும்னு தான் இருந்தேன்…” என்றாள்.

“என்னவோம்மா… நம்பறேன்! வேற வழி? நீ பத்திரமா போய்ச் சேர்ந்தியா, இல்லையான்னு கூடக் கேட்கலை யான்னு… ஒருத்தன் ஃபோன் பண்ணி என் உயிரை எடுத்தான். அதான் இப்போவே செய்தேன். இல்லைனா, ஈவ்னிங் தான் ஃபோன் செய்திருப்பேன். பொண்ணுங்களைப் பத்தி இந்த ஆண்களுக்கு என்ன தெரியும்? அவங்களை மாதிரியே கேட்கற கேள்விக்குப் பதில் சொல்றவங்களா நாம? நிறுத்தி, நிதானமா, காலைல எழுந்ததுல இருந்து வீடு வந்து சேர்ந்தது வரைக்கும், அம்மாவிடம் கதையளந்து முடிச்சாதானே நமக்குத் திருப்தி!”

”அதென்னவோ உண்மைதான். ஆனா, நான் இன்னும் கதையை ஆரம்பிக்கவேயில்லை. சாப்பிட்டுட்டு நிதானமா வேலையில் இறங்கணும். நான் இல்லாமல் முழுசா ஒரு வருஷம் சந்தோஷமா இருந்தாங்க. இத்தனை நாள் ஏன் வரலை வரலைன்னு என்னைத் துளைச்சாங்க இல்ல…, இன்னைக்கு அதுக்குத் தண்டனை கொடுத்தே ஆகணும். நான் உங்ககிட்ட ஈவ்னிங் நிதானமா பேசறேன். உங்களை விசாரிச்சவரிடம், பத்திரமா வந்து சேர்ந்துட்டேன்னு சொல்லுங்க. நான் அப்புறமா மெயில் அனுப்பறேன்” என்றவள் போனை அணைத்தாள்.

மஞ்சள் நிற லாங் ஸ்கர்ட்டும், கறுப்பு நிற டாப்சுமாக, கையில் ஒரு கவருடன், பாடல் ஒன்றை முணுமுணுத்தபடி டைனிங் ஹாலில் வந்தமர்ந்தாள். “இந்தா ருத்! உனக்கு சல்வார் வாங்கிட்டு வந்தேன். பிடிச்சிருக்கான்னு சொல்லு…” என்றவள், வேலைக்காரப் பெண்ணிடம் கவரைக் கொடுத்தாள்.

சந்தோஷத்துடன் உடையை இப்படியும் அப்படியு மாகப் பார்த்துக்கொண்டே, “தீதீ! ரொம்ப நல்லா இருக்கு. தேங்க்ஸ்!” என்றாள் ருத்ரா.

புன்னகைத்தவள், “ஃபோன்ல பேசும் போது, மேத்ஸ் ஏதோ சரியா புரியலைன்னு சொன்னேல்ல, அப்புறமா புக்ஸைக் கொண்டு வா, சொல்லித் தரேன். இப்போ நீ கிளம்பு… நாளைக்கு வந்தா போதும்” என்று அவளை அனுப்பி வைத்தாள். உணவைத் தானே மூவருக்குமாக பரிமாறினாள்.

தேவிகா, மகளைப் பெருமையுடன் பார்த்தார். மனத்திற்குள், சட்டென மகள் பெரியவளாகி விட்டது போன்ற எண்ணமொன்று எழுந்தது. அவளுக்குச் செய்ய வேண்டிய கடமை நினைவில் வர, மனத்திற்குள் சிறு வேதனை பரவியது.

(தொடரும்)

அத்தியாயம் – 1 | அத்தியாயம் – 2 | அத்தியாயம் – 3 | அத்தியாயம் – 4 | அத்தியாயம் – 5 | அத்தியாயம் – 6 | அத்தியாயம் – 7 | அத்தியாயம் – 8 | அத்தியாயம் – 9 | அத்தியாயம் – 10 | அத்தியாயம் – 11 |அத்தியாயம் – 12 |

கமலகண்ணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...