நடிகர் சிம்பு நடிக்க உள்ள அடுத்த மூன்று படங்களின் அறிவிப்புகள் அவரது பிறந்த நாளில் வெளியாக உள்ளது.
நடிகர் சிம்புவிற்கு ‘மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல’ என 3 படங்களும் ஹாட்ரிக் ஹிட் அடித்தன. இதற்கிடையே, இவர் இயக்குனர் மணிரத்னம் – கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகியுள்ள ‘தக் லைப்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளியாக உள்ளது.
சிம்பு அடுத்ததாக, ‘ஓ மை கடவுளே’, ‘டிராகன்’ போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்திலும், தேசிங்கு ராஜா இயக்கத்திலும் நடிக்க உள்ளார். இந்த படங்கள் தொடர்பான அறிவிப்புகள் ஏற்கனவே வெளியாகி விட்டன. ஆனால் படப்பிடிப்பு பணிகள் தொடங்காமல் உள்ளன. இதற்கிடையில் சிம்பு பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் மற்றொரு படத்தில் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்தநிலையில் நடிகர் சிம்பு தனது எக்ஸ் தள பக்கத்தில் “அப்டேட்! அப்டேட்! அப்டேட்!” என பதிவிட்டுள்ளார். அதனை தொடர்ந்து தனது அடுத்த மூன்று படங்களின் அப்டேட்டுகள் அவரது பிறந்தநாளான பிப்ரவரி 3-ந் தேதி வெளியாகும் என்ற மற்றொரு பதிவையும் வெளியிட்டுள்ளார். இந்த பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. சிம்புவின் அடுத்த மூன்று படங்கள் குறித்த அறிவிப்பை எதிர்பார்த்து ரசிகர்கள் உற்சாகத்தில் காத்துக் கொண்டுள்ளனர்.