தர்க்கசாஸ்திரம் – 2 | ஆரூர் தமிழ்நாடன்
அத்தியாயம் -2
ஜோதிடர் ஏற்படுத்திய திகில்!
——————————————-
காட்டன் புடவையில் பளீரென வெளியே புறப்பட்ட அகிலாவை அடுக்களையில் இருந்தபடியே ரசித்தார் அம்மா காவேரி.
ஒரே வாரிசு. தங்களின் ஒரே உயிர்ச்சொத்து. எனவே அப்பா ஞானவேலுக்கும் அம்மா காவேரிக்கும் அகிலாதான்
உயிர்.
நல்ல உயரமாய், உயரத்திற்கேற்ற பருமனாய், எழுமிச்சை நிறத்தோடு காட்சி தரும் தன் மகள் அகிலாவை ஒரு வருடம் கூட நிற்கவைத்து இமைக்காமல் பார்த்துக்கொண்டே இருக்கலாம்
போலிருந்தது காவேரிக்கு.
கருவண்டுக் கண்கள். நேரிய நாசி. கதுப்பான கன்னங்கள். ஆரஞ்சுச் சுளை உதடுகள். சங்குக் கழுத்து. மொத்தத்தில் அகிலா அழகும் கம்பீரமும் கலந்த இனிய கலவை. எந்த உடைக்கும் பொருந்துகிற மாதிரி அப்படியொரு தேகவாகு. மிகச் சரியாக 24 வருடம் 3 மாதம் 2 நாட்களுக்கு முன்பு பிறந்தவள் அகிலா. எம்.ஏ., எம்.ஃபில் படித்துவிட்டு கல்லூரி ஒன்றில் விரிவுரையாளராக பணிபுரியும் அவள் முனைவர் பட்ட ஆய்வையும் மேற்கொண்டிருக்கிறாள்.
அம்மா காவேரிக்கு திருவாரூர்தான் சொந்த ஊர். அங்கேயே ஒரு பொருத்தமான மாப்பிள்ளையை அகிலாவுக்காகப் பிடித்துவிடவேண்டும் என்று அவருக்கு ஆசை. ஏனெனில்
அவருக்கு ஊர்ப்பாசம் அதிகம். ‘திருவாரூரில் பிறக்க முக்தி என்று யாராவது சொன்னால் போதும் பூரித்துப் போய்விடுவார். கர்நாடக இசையில் நல்ல தேர்ச்சி உண்டு. பாலம் டீச்சரிடம் கொஞ்சநாள் வயலின் கூட கற்றுக்கொண்டார். இருந்தபோதும் தன் குருநாதர் ஜெயராமய்யரிடம் கற்றுக்கொண்ட வீணை மீதுதான் அதீத காதல் காவேரிக்கு.
இசை மும்மூர்த்திகளான தியாகையர், முத்துசாமி தீட்சிதர், சியாமா
சாஸ்த்திரிகள் ஆகியோர் பிறந்த ஊரில் பிறந்திருக்கிறோம் என்கிற பெருமிதத்துடன் வீணையை மிருதுவாக மீட்டியபடியே அழகிய குரலில் பாடுவார். குரலும் அப்படியொரு வசீகரக் குரல். காவேரியின் கணவர் ஞானவேலோ தஞ்சாவூர்க்காரர்.
உறவுவழியில் பெண்கேட்டு வந்த ஞானவேல், அப்போது காவேரி, ஹம்சத்வனியில் பாடிய…
‘ரகு நாயக நீ பாத யுக
ராஜூவமுல நே விட ஜாலஸ்ரீ
ரகு நாயக…’-என்ற தியாகையரின் கீர்த்தனையில் மயங்கி தலையாட்டியவர்தான்.
இன்னும் தலையாட்டிக்கொண்டிருக்கிறார். திருமணத்திற்குப் பிறகு
தமிழிசைப் பாடலகளை பாடச்சொல்லிக் கேட்டு ரசிப்பார் ஞானவேல். இதற்காக புரட்சிக் கவிஞர் பாரதிதாசன், கவிஞர் முடியரசன், கவியரசர் பொன்னிவளவன், உவமைக்கவிஞர் சுரதா, வாணிதாசன் என்று தொடங்கி வைரமுத்து, மேத்தா, அப்துல் ரகுமான், ஈரோடு தமிழன்பன், காசி.ஆனந்தன் வரையிலான புத்தகங்களை வாங்கிக் கொடுத்திருக்கிறார் மனைவிக்கு. கவிஞர்களின் புதுக் கவிதைகளைக் கூட, கர்நாடக இசைக்குள் அமர்த்தும் வல்லமை காவேரிக்கு இருந்தது.
பொறியாளரான அப்பா ஞானவேலுக்கு, கவிதைகள் என்றால் கொள்ளைப் பிரியம். வாலிப வயதில் தஞ்சை பிரகாஷ் போன்றவர்களோடு இலக்கியத்தில் ஐக்கியமானவர் இவர். இரவு நேரங்களில் ஓய்வு கிடைக்கும் போதெல்லாம், தான் படித்த கவிதைகள், நாவல்கள் பற்றி மணிக் கணக்கில் மகள் அகிலாவோடு கதையடித்துக்கொண்டிருப்பார். இருவரின் விவாதங்களையும் மெளனமாகக் கேட்டு ரசித்துக்கொண்டிருக்கும் காவேரிதான்… ஒரு கட்டத்தில் ‘அப்பாவும் மகளும் பேச ஆரம்பிச்சா நேரம் போறதே தெரியாதே. போதும் போதும் தூங்குங்க. மத்ததை நாளைக்குப் பேசிக்கலாம்’ என இவர்களின் பேச்சுக்கு பிரேக் பிடிப்பார்.
இப்போதும் தஞ்சாவூர் திருவாரூர் பகுதியில் இருந்து தென்றல் சந்திரசேகர், சிவ ஒளி ஜெயகாந்தன், சுகன், பேராசிரியர் மருதவாணன், மானா பாஸ்கரன், கனகராஜ், விஜயராகவன், நீதிதாசன், ஆவரானி ஆனந்தன், தத்துவஞானி இந்திரஜித்,டாக்டர் குபேந்திரன் என இலக்கியவாதிகள் யார் சென்னைக்கு வந்தாலும் தன்வீட்டு மாடியறையில் தங்கவைத்து நேரம்காலம் மறந்து இலக்கியம் பேசிக்கொண்டே இருப்பார் ஞானவேல்.
அவர்கள் அவரிடமிருந்து விடைபெறுவதுதான் கஷ்டமான காரியமாக இருக்கும். இவர்களின்விவாதங்களில் சில நேரம் அகிலாவும் கலந்துகொள்வாள். இப்படி இலக்கிய ரசனையோடு நாட்களை நகர்த்திக்கொண்டிருக்கும் ஞானவேலுக்கு, தனது தஞ்சாவூரில் இருந்துதான் அகிலாவுக்கு மாப்பிள்ளையைத் தேர்ந்தெடுக்கவேண்டும் என்று ஆசை. ஜெயகாந்தனிடம் கூட.. ’அகிலாவுக்கு நல்ல வரனா இருந்தா சொல்லப்பா’ என்று சொல்லிக்கொண்டிருப்பார். ஆனால் அகிலாதான்
இன்னும் பிடிகொடுக்கவே இல்லை.
’திருமணத்துக்கு பொருத்தமான வயது இதுதண்டா’-என கடந்த இரண்டு வருடங்களாக நச்சரித்தும், ‘இப்போ அதுக்கு அவசரம் என்ன? எனக்காகப் பிறந்த அவன் யாரோ? எங்கிருக்கிறானோ? அவனை நான் பார்க்கும்வரை என்னை விட்டுவிடுங்கள்’ என கேஸுவலாகச் சொல்லி நழுவிவிடுவாள் அகிலா.
‘ஏம்மா உன் பெஸ்ட் ஃபிரண்டுன்னு எப்பவாவது வீட்டுக்கு அழைச்சிக்கிட்டு வருவியே தமிழ்ச்செல்வன்னு ஒரு தம்பியை, அவரை விரும்பறியா? அப்படி ஒரு எண்ணம் இருந்தா சொல்லும்மா. முடிச்சிடலாம்’ என ஒருநாள் இரவு அம்மா காவேரி
வாஞ்சையாய்க் கேட்க ‘ச்சே. அவர் பாவம்மா. அவருக்கு என்னை விட அழகா, என்னைவிட கொஞ்சம் புத்தி குறைவா ஒரு பொண்ணு இருந்தா போதும். நான் தேடற என் ஆள் வேறமாதிரி. வீணா மனசைப் போட்டுக் குழப்பிக்காம நீ போய் படுத்துத் தூங்கற வழியப் பாரும்மா. அப்பா உனக்காகக் காத்துக்கிட்டிருக்கார்’ என வெட்கப்படுத்தி அம்மாவை அனுப்பிவிட்டாள்.
நங்கநல்லூர் ஆஞ்சநேயர் கோயில் அருகே இருக்கும் நாடி ஜோதிடர்
திருச்சிற்றம்பலத்தின் மீது அளவுகடந்த நம்பிக்கை உள்ளவர் காவேரி. மகள் அகிலாவின் ஜாதக பலனைத் தெரிந்து கொள்வதற்காகப் போனவாரம் சந்தித்தார் காவேரி. சந்தனமும் சாம்பிராணியும் மணக்க… தூய வெள்ளை ஆடையில் ஆஜானுபாகுவாக நிஷ்டையில் அமர்ந்திருந்த ஜோதிடரை கைகூப்பி வணங்கினார் காவேரி. ‘நீங்க இன்னைக்கு வருவீங்கன்னு தெரியும்’ என்ற ஜோதிடர், குடும்பநலனை அன்போடு விசாரித்தார்.
‘கல்யாண தெசையைப் பாருங்க’ என்றபடி, காவேரி கொடுத்த அகிலாவின் ஜாதகநோட்டை வாங்கி ஜாதகத்தை ஆராய்ந்த அவர் ‘உங்க பொண்ணு ஜாதகத்தில் வித்தைக்கான
புதனின் ஆதிக்கம் அதிகம். புத்தி ஜீவியா இருப்பா. சரியான துணிச்சல்காரி. எல்லோரையும் வசீகரிக்கும் தன்மையும் அதிகம். ஆனா இப்ப உள்ள கிரக அமைப்பின் படி நான் அகிலாவுக்கு பலன் சொல்ல விரும்பலை’ என்றார் இறுக்கமாக.
இதைக் கேட்கும் போதே காவேரிக்கு பகீர் என்றது.
‘ஜோஸியர் ஐயா, நீங்க இப்படி சொல்றதைப் பார்த்தா பதட்டமா இருக்கு. அகிலாவுக்கு நேரம் சரியில்லையா? திருமணத்தில் ஏதேனும் தோஷம் இருக்கா? கஷ்ட நஷ்டங்கள் வருமா? எதா இருந்தாலும் உடைச்சிச் சொல்லுங்க. இல்லைன்னா எங்களால் நிம்மதியா இருக்கமுடியாது.’ என்று விழிகள் பளபளக்கக் கேட்க..
ஜோதிடர் திருச்சிற்றம்பலமோ ‘அம்மா நீங்க எத்தனை தடவை கேட்டாலும் இதுக்கு மேல் பதில் சொல்ல முடியாது. தைரியமா இருங்க. இன்னைல இருந்து ரெண்டு மாசத்துக்குப் பிறகு நீங்க முடிஞ்சா வந்துபாருங்க’ என்று கைகூப்பினார்.
கொடுத்த காணிக்கையையும் வாங்க மறுத்துவிட்டார். அங்கிருந்து கிளம்பும் போதே மயக்கம் வரும்போல் இருந்தது. மெதுவாய்க் போய் காரில் ஏறிக்கொண்டார்.
அப்போது வேகமாக ஓடிவந்த ஜோஸியரின் இளம்வயது உதவியாளரான பழனி ‘அம்மா, உங்க ஜாதக நோட்டை மறந்து விட்டுட்டுப் போறீங்க. இந்தாங்கம்மா’ என்று பவ்வியமாகக் கொடுக்க, அதை வாங்கி மார்போடு அணைத்துக்கொண்டார் காவேரி.
இதை தன் கணவர் ஞானவேலிடம் சொல்லி, அகிலாவுக்கு ஏதாவது ஆயிடுமோன்னு பயமா இருக்குங்க’ என இரவு முழுக்க அவர் அழ..
‘பயப்படாதே. நாம யாருக்கும் தீங்கு நினைச்சதில்லை. உபகாரம்தான் செஞ்சிருக்கோம். அகிலாவும் யாருக்கும் எந்த தீங்கும் செய்தவளில்லை. செடிகள், மலர்கள்ட்ட கூட அன்பு செலுத்தக் கூடியவள். எத்தனையோ அனாதை குழந்தைகளுக்கும் மாற்றுத் திறனாளிகளுக்கும் உதவியிருக்கிறாள்.
ஒவ்வொரு வருட பிறந்த நாளையும் அனாதைக் குழந்தைகளோட கொண்டாடற ரகம் அவள். அப்படிப்பட்டவளுக்கு எதுவும் நடக்காது. ஜோஸியர் வேறு எதையோ சொல்ல நினைச்சிருப்பார். அதாவது இடையில் அகிலாவின் மனதை யாராவது களவாடலாம்., அவளுக்குள்ளும் காதல் மலர் பூக்கலாம். இதைப் பற்றி எதுக்கு பெற்றவர்களிடம் நாம் சொல்லவேண்டும்னு கூட அவர் நினைச்சிருக்கலாம். எதையும் பாஸிட்டிவாகவே யோசிக்கனும்’ என ஆறுதல் சொன்னார்.
இந்த பீதியில் இருந்து விலகிவரவே காவேரிக்கு நான்கைந்து நாள் ஆனது. இதையெல்லாம் மனதிற்குள் அசைபோட்ட காவேரி, ‘திருப்பதியானே சீக்கிரம் அகிலாவை மணக்கோலத்தில் பார்க்க அருள்புரியடா. அவளுக்கு நடப்பதெல்லாம் நல்லதே நடக்கனும்’ என சாமி அறையை நோக்கி கைகூப்பினார். வாசலில் அகிலா
ஸ்கூட்டரை ஸ்டார்ட் செய்யும் சத்தம் கேட்டது.
வாசலுக்கு வந்து எட்டிப்பார்த்தார் காவேரி.
அப்போது வாக்கிங்கை முடித்துவிட்டு வியர்வை வழிய எதிரே வந்துகொண்டிருந்த ஞானவேல், தன் மகளிடம் ‘என்னம்மா, இந்த நேரத்திலேயே கிளம்பிட்டியா?’ என விசாரிப்பதும் அதற்கு ‘டாக்டரேட் சம்மந்தமா தமிழ்ச்செல்வனோடு ஒரு புரப்பஸரைப் பார்க்கப் போறேம்ப்பா’ என அகிலா பதில் சொல்வதும்.. ‘பார்த்து பத்திரமாப் போய்ட்டு வாம்மா’ என அவர் கரிசனமாய் சொல்வதும் காவேரியின் காதில் துல்லியமாகக் கேட்டது. தனக்குள் பெருமிதமாக புன்னகைத்துக்கொண்டார்.
அகிலாவோ, அந்த விளம்பரத் துறவி அறிவானந்தாவின் கூட்டத்திற்கு இன்று போயே ஆகவேண்டும் என எண்ணியபடியே உற்சாகப் பறவையாய் டூவீலரில் பறந்தாள்.
(தொடரும்)