பாஸ்போர்ட் இணையதள சேவையானது இரண்டு நாட்கள் இயங்காது..!
தொழில்நுட்ப பராமரிப்பு பணி காரணமாக பாஸ்போர்ட் இணையதள சேவையானது நாளை மறுநாள் (அக்.7) காலை வரை இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளியுறவு அமைச்சகத்தின் கீழ், நாடு முழுவதும் பாஸ்போர்ட் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க அல்லது பாஸ்போர்ட்டை புதுப்பிக்க, மையங்களில் அப்பாயின்மெண்ட்டை பதிவு செய்ய பாஸ்போர்ட் சேவா போர்ட்டல் passportindia.gov.in பயன்படுத்தப்படுகிறது. பாஸ்போர்ட் சேவா இணையதளத்தில் பதிவு செய்து அப்பாயின்மெண்ட் பெற்றுள்ள நாளில் விண்ணப்பதாரர்கள் பாஸ்போர்ட் சேவை மையங்களுக்குச் சென்று ஆவணங்களை வழங்கவேண்டும்.
இந்த முறை கடந்த 2010 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த சூழலில், நேற்று (அக்.4) நேற்று இரவு 8 மணி முதல் பாஸ்போர்ட் இணையதளம் இயங்கவில்லை. இந்த நிலையில், தொழில்நுட்ப பராமரிப்பு பணி காரணமாக பாஸ்போர்ட் இணையதள சேவையானது நாளை மறுநாள் (அக்.7) காலை வரை இயங்காது என சென்னை மண்டல கடவுச்சீட்டு அதிகாரி தெரிவித்துள்ளாா்.
இது தொடர்பாக சென்னை மண்டல கடவுச்சீட்டு அதிகாரி தெரிவித்துள்ளதாவது,
“பாஸ்போர்ட் சேவை இணையதளத்தில் (www.passportindia.gov.in) தொழில்நுட்ப பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதன் காரணமாக இந்த இணையதளம் நாளை மறுநாள் (அக்.7) காலை 6 மணி வரை இயங்காது. இந்த குறிப்பிட்ட காலக்கட்டத்தில் பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள், இணையதளத்தை பயன்படுத்த முடியாது என்பதோடு, தங்களது நேர ஒதுக்கீடு, சந்தேகங்களுக்கு, பராமரிப்பு பணி முடிந்த பிறகு அணுகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.”
இவ்வாறு சென்னை மண்டல கடவுச்சீட்டு அதிகாரி தெரிவித்துள்ளார்.