மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்..! 

 மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்..! 

எலும்பு முறிவு அறுவை சிகிச்சைக்கு பிறகு சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று வீடு திரும்பியுள்ளார்.

கடந்த 25-ம் தேதி மதிமுகவின் கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர் வெற்றிவேலின் மகள் திருமண விழாவில் பங்கேற்பதற்காக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திருநெல்வேலி சென்றார்.  அப்போது எதிர்பாராத விதமாக வீட்டில் கால் தடுமாறி விழுந்ததில், அவரது வலது தோளில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதன்பேரில், கடந்த 27ம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.  இதனிடையே, அவரது மகன் துரை வைகோ, “சிறிய அறுவை சிகிச்சைக்கு பிறகு அவர் உடல் நலம் பெறுவார். வேறு அச்சம் கொள்கிற வகையில் எதுவும் இல்லை” எனத் தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து, மருத்துவமனையில் இருந்தபடியே வீடியோ ஒன்றை வைகோ வெளியிட்டிருந்தார்.  அதில், “நான் ஏறத்தாழ 7,000 கிலோ மீட்டர் நடந்திருக்கிறேன்.  ஆனால், கீழே விழுந்ததில்லை.  இப்போது நான்கு நாட்களுக்கு முன்பு, நெல்லைக்குச் சென்ற இடத்தில் தங்கியிருந்த வீட்டின் படிகளின் வழியாக ஏறாமல் பக்கத்தில் இருக்கக்கூடிய திண்ணையில் ஏறினேன்.  அப்படியே இடது புறமாக சாய்ந்து விட்டேன்.

இடது தோள்பட்டையின் கிண்ணம் உடைந்து இருக்கிறது. அதோடு அந்த எலும்பும் கீறி இருக்கிறது. உடனே மருத்துவரிடம் காண்பிக்க உடனே நீங்கள் சென்னைக்கு போக வேண்டும், அங்கே நீங்கள் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்தனர். இந்நிலையில் இன்று அறுவை சிகிச்சை நடைபெற உள்ளது. நான் நலமுடன் இருக்கிறேன், மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம்” என்று பேசியிருந்தார்.

இதனையடுத்து, அன்று மாலை வைகோவிற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து அவர் ஏழு நாட்களாக மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வந்தார்.  இந்நிலையில், அவருடைய உடல்நலனில் முன்னேற்றம் தென்பட்டதை அடுத்து,  மருத்துவமனையில் இருந்து இன்று வீடு திரும்பியுள்ளார்.

தொடர்ந்து, அவர் அடுத்த 10 நாட்கள் மருத்துவ கண்காணிப்பில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதன் காரணமாக,  அடுத்த 10 நாட்களுக்கு நிர்வாகிகள் யாரும் வைகோவை நேரில் சந்திக்க வர வேண்டாம் என மதிமுக தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...