சிற்பிக்குச்சிலை செய்யும்வழிபாடு
சிற்பிக்குச்
சிலை செய்யும்
வழிபாடு
(கவிக்கோ நினைவஞ்சலி)
*
இது
நீர் ஊட்டிய
நிலத்திற்கு
மரமொன்று செலுத்தும்
மலரஞ்சலி.
கரை சேர்க்கும்
கலங்கரை விளக்குக்கு
கலமொன்று செலுத்தும்
கவிதாஞ்சலி.
சீராட்டி வளர்த்த அன்னைக்குச்
சேய் ஒன்று பாடும் தாலாட்டு.
கண் திறந்த சிற்பிக்குச்
சிலை செய்யும்
வழிபாடு .
*
அவர் பால்வீதியில் இருந்து வந்தார்
மீண்டும் பால்வீதிக்கே
திரும்பி விட்டார்.
‘உன் கண்ணால் தூங்கிக் கொள்கிறேன்’ என
உரிமையோடு கேட்டவர்
தன் கண்ணை மூடித்
தனியே தூங்கிவிட்டார்.
‘இது சிறகுகளின் நேரம்’ என்றார்
அது ஒரு ரகசியக் குறிப்பு.
நமக்கது புரியவில்லை
சிறகடித்துப் பறந்துவிட்டார்.
அவர் செய்த ‘ஆலாபனை’
தத்துவ தரிசனம்.
அவர் நீட்டிய ‘சுட்டு விரல்’
சமுதாயக் கரிசனம்.
‘பித்தனாய்” வந்த
சித்தன் அவர்.
இப்போது எங்கள்
‘நேயர் விருப்பம்’ நின்றுவிட்டது.
ஆனால்
‘மரணம் முற்றுப்புள்ளி அல்ல’ என்றவர் போதித்ததால்
ஆறுதல் அடைகிறோம்.
சிலேடை என்ற பெயரில்
சொற்களின் மேலாடையை விலக்கிக் காட்டியவர் அல்ல அவர்.
சிலேடையால் சொற்களைத் திறந்து
அர்த்தங்களின் கருவறைக்கு
அழைத்துச் சென்றார்
அதன் அபூர்வமான அழகுகளை தரிசிக்க வைத்தார் .
மரபு புதுமை இரண்டையும் இணைத்துக்
கவிதையில்
இரட்டை மாட்டு வண்டி ஓட்டினார்.
அதனால்
மாட்டு வண்டி ஓடிய
மண் சாலை
தங்கத் தமிழ் பவனி வரும்
தேரோடும் வீதி ஆனது.
*
நீண்ட நதியாகவும்
உயர்ந்த அருவியாகவும்
ஆழங்காண முடியாத
சமுத்திரமாகவும்
மாறி மாறி
தோற்றம் காட்டிய
மழை அவர் .
விண்ணுக்கும் மண்ணுக்கும்
விஸ்வரூபம் எடுக்கும்
விதைகள் அவர் சொற்கள்.
அடையாளங்களைப் பார்த்து
அன்பு செலுத்தியவர் அல்ல
என்றும் எங்கும்
புறம் காணாதவர் கவிக்கோ.
அகம் பார்த்து மட்டுமே அளவிடுவார் ஆளை.
முகம் தாண்டிப் பார்க்கும்
கவிதைக் கண்கள் அவருடையது .
ஆம்…
அவர் பார்த்த பார்வை
ஞானியின் பார்வை.
அவர் பயணித்த பாதை
‘பறவையின் பாதை’.
*
அவர்
எழுதிய கவிதைகளின்
எண்ணிக்கையை விட
அவர் உருவாக்கிய
கவிஞர்களின்
எண்ணிக்கை அதிகம்.
அவரே ஒரு காவியம்
அந்தக் காவியத்தின்
நடமாடும் எழுத்துக்கள்தான்
இன்று பல கவிஞர்கள் .
*
அய்யா…
‘இறந்ததால் பிறந்தவன்’
நீங்கள்
பிறந்ததால் இறப்பவர்கள்
நாங்கள்.
உங்கள் சூட்சும மொழியை
எங்களுக்கும் சொல்லிக் கொடுங்கள்.
அப்போதுதான்
உங்கள் ‘ தேவகானம்’ எங்களுக்குப் புரியும்.
*
நினைவுகள்
இருக்கும் வரை
மனிதர்க்கு மறைவேது?
சொற்கள்
உயிர்த்திருக்கும் வரை
கவிஞனுக்கு
இறப்பேது?
*
நீங்களே சொன்னது போல் உடலும் ‘ சொந்த சிறை’ தானே…
உடல் மூலம் சந்தித்த நாம்
இனி உடல் தாண்டிச் சந்திப்போம்.
*
வெற்றுக் கண்களுக்குத் தெரியாது நம் காதல்
உங்களைப் பார்ப்பதற்கு முன்பே
உங்களைச் சந்தித்துவிட்டேன்
நீங்கள் பிரிந்து சென்ற பிறகும்
உங்களை விட்டு விலகவில்லை.
*
பிருந்தா சாரதி