கண்டேன் இசைஞானியை….
கண்டேன் இசைஞானியை….
இளையராஜாவின் வயது , எண்பது வசந்தங்களைக் கடந்திருக்கிறது. அவருக்குத்தான் வயது எண்பத்தொன்று. அவரது இசைக்கு…
எப்போதும் காதலிக்கிற வயசு.
கனவு காண்கிற வயசு.
எல்லாரையும் ஆசீர்வதிக்கிற வயசு.
இந்த உலகத்தை ஆள்வதற்குச் செங்கோல் தேவையில்லை; ஒரு புல்லாங்குழல் போதும் என்று நிரூபித்தவர் அவர்.
இசையில் அவர் அமைத்திருக்கிற ராஜாங்கம்தான் உலகிலேயே அழகானது. அமைதியானது. அங்கே
“உன் மதமா என் மதமா
ஆண்டவன் எந்த மதம்?”
என்று ஒரு சித்தன் பாடிக்கொண்டிருக்கிறான். எல்லாரும் குழந்தைகளாக இருக்கிறார்கள். எல்லாரும் கடவுள்களாக இருக்கிறார்கள்.
“இந்த மண்ணில் மறைந்துகிடக்கும் பண்களை எல்லாம் நமக்குக் கண்டெடுத்துக் கொடுப்பதற்காக பூமிக்கு அனுப்பப்பட்ட தேவதூதன்தான் இளையராஜா” என்றார் ஜெயகாந்தன்.
அவர் ஞானியா, தேவதூதனா, கடவுளா?
ஆனால் யாருக்கும் அவர்
பதில் சொல்லவே இல்லை…
“பிச்சைப் பாத்திரம் ஏந்தி வந்தேன்
அய்யனே என் அய்யனே”
என்று எல்லோரையும் கடந்து போய்க்கொண்டே இருக்கிறார்.