இன்றுடன் விடை பெறும் அக்னி நட்சத்திரம்..!

 இன்றுடன் விடை பெறும் அக்னி நட்சத்திரம்..!

அக்னி நட்சத்திரம் இன்றுடன் விடை பெறும்நிலையில், தமிழகத்தில் மீண்டும் வெப்பம் அதிகரிக்கும் சூழல் உருவாகியிருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை, பிப்ரவரி மாதம் இறுதியிலிருந்தே வெயில் கொளுத்த துவங்கிவிட்டது.. இந்த வெப்பமானது, மார்ச் மாதத்தில் உச்சக்கட்டத்துக்கு சென்றுவிட்டது.. இந்த வருடம் கோடை வழக்கத்தைவிட அதிகமாகவே இருக்கும் என்று சென்னை வானிலை மையம் எச்சரிக்கையை வெளியிட்டவாறே இருந்தது.

இதனிடையே, கடந்த, 4ம் தேதி அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் ஆரம்பமானது.. இந்த கத்தரி வெயில் ஆரம்பித்ததிலிருந்து, தமிழகம் முழுதும் பெரும்பாலான இடங்களில், கோடை மழையே பெய்து வந்தது.. இதனால், 2 மாத வெப்பம் தணிந்து, தமிழகத்தின் பல மாவட்டங்கள் குளுமை அடைந்தன.. சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் வெப்பநிலை குறைந்தும் காணப்பட்டது.

இப்படிப்பட்ட சூழலில்தான், வங்கக் கடலில் ரெமல் புயல் உருவானது.. ஆனால், தமிழகத்துக்கு எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாத நிலையில், கரை கடந்து சென்றுவிட்டது புயல்.. அதுமட்டுமல்லாமல், தமிழக பகுதிகளில் உள்ள ஈரப்பதம் உறிஞ்சப்பட்டு, மறுபடியும் வெப்பநிலை அதிகரித்துள்ளது. நேற்றைய தினம் மட்டும் எடுத்துக் கொண்டால், தமிழகம், புதுச்சேரியில், 10 இடங்களில், 100 டிகிரி பாரன்ஹீட்டை வெப்பம் பதிவானது.

இதில் சென்னையில் 40.6 டிகிரி செல்சியஸ் பதிவாகியிருக்கிறது.. அதாவது தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக, 106 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் பதிவாகியுள்ளது. இதனால் சென்னைவாசிகள் பீதியில் உள்ளனர்.. வேலூர் 40, தஞ்சாவூர் 39, திருப்பத்தூர், திருச்சி, திருத்தணி, கடலூர், ஈரோடு, மதுரை விமான நிலையம் மற்றும் புதுச்சேரியில் 100 டிகிரி பாரன்ஹீட்டை ஒட்டி வெப்பநிலை நிலவியது.

இன்றைய தினம் அக்னி நட்சத்திரம் முடிவடைகிறது.. ஆனாலும், சென்னை உள்ளிட்ட வடக்கு மாவட்டங்களில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என்று அலர்ட் செய்யப்பட்டுள்ளது. இந்திய பெருங்கடலின் சூழல் மாறினால், இந்த வெப்பநிலை ஓரளவு குறையலாமே தவிர, தமிழகத்தின் வடக்கு கடலோரம் மற்றும் அதையொட்டிய உள் மாவட்டங்களில், ஜூன் வரையிலும் வெப்பம் அதிகரித்து காணப்படும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்திருக்கிறது.

இதனிடையே, தமிழகத்தில் இன்று 28ம் தேதி முதல் மே 30ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது” என்று தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...