பென் நெவிஸ் -மலை சிகரம் தொடர் /பகுதி (4)
பென் நெவிஸ் -மலை சிகரம் தொடர் /பகுதி (4)
வாழ்க்கையில் சில தருணங்கள் மகிழ்ச்சி என்பதுஎதிர்பாராத இன்ப அதிர்ச்சியின் விளைவாய் கிடைத்தால் அதை விவரிக்க வார்த்தைகள் வராது.ஆனால் மனது படும் இன்பம் அதற்கு இணையாக ஏதுமில்லையென்பதே உண்மை. அதிக பட்சம் நாம் கண்ணீரில் காட்டியிருப்போம் அவ்வளவே.
விக்கியும் சூரியையும் மனம் நினைத்து கொண்டே கால்களை பாதையில் பயணிக்க வைக்க, நல்ல நாட்களில் சற்று குரலை உயர்த்தி பேசினாலும் கேட்க நாராசமாய் இருக்கும் அந்த கட்டை குரலில் விக்கி அன்று கத்தி கூப்பாடு போட்டு நாங்களும் வந்துவிட்டோம் என்று மலைகளே காதை மூடிக்கொள்ளும் அளவுக்கு கத்தி சொன்னதும் மனதுக்கு இனிமையாகத்தான் இருந்தது.
ஆம், விக்கியும் சூரியும் எங்கள் கண்களில் காணும் தூரத்திற்குள் வந்து விட்டனர், நானோ மகிழ்ச்சியில் முரளியை கூப்பிட்டு காட்ட அவர்களும் பூரிப்பில் வேகமாய் அடிகளை வைத்து வந்தனர். என் இன்பத்திற்கு அளவில்லை அந்த தருணத்தில் அதை என்னால் விவரிக்க கூட முடியவில்லை, சற்றே அதிகமாக இருந்தாலும் அதை நான் தாய் சேய் ஈன்றெடுக்கும் தருணத்துக்கு ஓப்புவேன்.
ஏனெனில் மடியில் வேண்டுமானால் எனக்கு பாரமில்லாது இருக்கலாம்,ஆனால் மனம் முழுதும் உயிரைத் தின்னும் பாரம் சுரந்து கொண்டே இருந்தது. காலப்போக்கில் உயிரை தின்றிருந்தாலும் ஆச்சர்யமில்லை. அவர்கள் குழந்தைகள் இல்லாவிடிலும் கண்ணதிரே நிற்கதியாய் நின்றிருந்தால் அந்த நிலைமை யை என்றும் மனம் ஏற்றுக்கொண்டிருக்காது.
விக்கியிடம் கைக்கூப்பி நன்றி கூறினேன் , நாத்திகனும் நன்றி கூறிடும் தருணங்கள் போல நானும்.அது மனிதருக்கோ இல்லை கடவுள் போன்ற மனித மனதிற்கோ சென்று சேர்ந்தால் போதும் என்றே நினைப் பே தோன்றியது
நடையில் சற்று உற்சாகம் கொப்பளித்தது. அதன் பயனாய் தூரங்கள் எங்களை கடந்து சென்றது. வளைவு சுளிவான பாதையின் தொடக்கத்தை ஏறத்தாழ அடைந்தோம், ஏற்றத்தை போலவே முன்னின்று முரளியும் சூரியும் செல்ல நானும் விக்கியும் மேல நடந்தவற்றை பற்றி பேசி கொண்டு வந்தோம்.
பனி கள் இல்லா பாதையில் நடையை தொடர காலணியில் மாட்டியிருந்த இரும்பு சங்கிளி பாறைகளில் உரச கொடூர ஒலியை எழுப்பியது. முரளியும் சூரியும் அமர் ந்திருக்க நானும் விக்கியும் அவர்களை அடைந்து சற்றே அமர்ந்து காலணியில் மாட்டியிருந்த இரும்புச் சங்கிலி யை நீக்கி அதை தோள்ப்பையில் சேர்த்தோம்m இரண்டு நிமிட அரட்டை, அதில் கேலி , கிண்டல் என்று சிரிப்பில் முடித்து நடையை தொடர்ந்தோம்.
பொதுவாக ஏற்றம் என்பதுதான் கடினமாக இருக்கும், இறக்கத்தில் எளிதாக இறங்கி விடலாம் என்பது எழுதப்படாத புவியிர்ப்பு விதி. எனக்கோ இறக்கம் என்பதுதான் மிகப்பெரிய பயம்.அது சிறுவயது கொண்டே மனதிலும் மூளையிலும் பதிவான ஓன்று. எனவே அனைவரிடமும் நீங்கள் உங்கள் வேகத்தில் செல்லும் படி கூறிவிட்டு நான் ஆமை வேகத்தில் இறங்கிக் கொண்டிருந்தேன்.
விக்கி எனக்காக நான் அந்த மலை ஓரங்களில் நடந்து வரும்போதெல்லாம் நான் கண்ணில் படும்வரை காத்திருந்து நடந்தார், கனிவான மனதை புரிந்து கொண்டேன். நாங்கள் இடறி விழுந்த அருவியை கடந்தோம். அதில் இருந்து சுமாராக ஒரு மைல் தூரத்திற்கு ஏற்ற இறக்கமில்லாத சமவெளி. ஆதலால் மனம் இன்பம் கொண்டது. விரைவாய் இந்த தூரத்தையும் கடந்து விடலாமென.ஆனால் கதிரவன் ஓயும் நேரம் தொடங்க சமவெளியில் காற்றின் பலம் ஆளை தள்ளியது. என் வாழ்வில் அவ்வளவு பலமான காற்றை நடக்கையில் எதிர்கொண்டதில்லை.
அவ்வளவு நேரம் மலைகளை ஒட்டியே வந்தமை யால் காற்றின் வேகத்தை உணரவில்லை, இருந்தும் இந்த தடையையும் தாண்டித்தான் ஆகவேண்டுமெனவே எதிர்கொண்டு நடந்தேன். சில வேலைகளில் பலத்த காற்றுக்கு நின்றுவிட பலம் குறைந்த நேரங்களில் ஓட்டம் பிடித்து சமவெளியை கடந்தேன்.
நாங்கள் வந்த போது கண்ட அருவியை காணக் கிட்டியது. அதன் ஓட்டம் பார்க்க அழகு.அந்த அருவியின் ஓசை கேட்க ஆனந்தமாக இருந்தது. மலையின் பக்கவாட்டுகளில் நடந்திடவே காற்றின் வேகம் நன்றாகவே குறைந்திருந்தது.ஆனாலும் அவ்வப்போது காற்று அதன் பலத்தை காட்டிக்கொண்டுதான் இருந்தது.
கையுறையை நீக்கி கைப்பேசியால் இயற்கை அழகை ஓரிரு புகைப்படங்கள் எடுத்துகொண்டேன் அதனை பத்திரமாக வைத்த நானோ இடது கையுறையை தவறவிட்டேன். இரண்டு மூன்றடி தூரத்தில்தான் அது இருந்தது, எனவே அதை எடுத்து விடலாமென்று சற்று குணிந்தே கையை எக்கிட அடித்த பலத்த காற்றில் நான் பயத்தில் கிறங்கிப்போனேன் நிமரந்து பார்த்தால் கையுறை பாதாள த்தை நோக்கிப் பறந்து கொண்டிருந்தது.
மனம் கொஞ்சம் கலக்கம் கண்டது.அதன் பிறகு காற்றை குறைத்து மதிப்பிடக்கூடாது என்பது உணர்ந்து நடையை தொடர்ந்தேன். பாறைகள் அதன் குணத்திற்கு ஏற்றாற் போல் மேலும் கீழுமாய் சமமற்று இருக்க, இறங்குவது கூட மிக கடினமாய் இருந்தது. காற்றை கருத்தில் கொண்டு நான் கவனமாய் இறங்கி கொண்டிருக்க எனகாக விக்கி அடிக்கடி காத்துக்கொண்டிருப்பது மனதிற்கு கடினமாய் இருந்தது. எனவே அவரை அவர் வேகத்திற்கு செல்லும் படி கூறி நான் என் வேகத்திலேயே தொடர்ந்தேன்.
இந்த கடினங்களையும் வெகு எளிதில் கடந்து முரளியும் சூரியும் வெகு தூரம் கடந்து விட்டு இருந்தனர். அவர்கள் இளைப்பாற அமர்ந்திருக்க விக்கி அவர்களை அடைந்தார்.அதன் பின்போ விக்கியும் சூரியும் நடையை கட்ட முரளி எனக்காக காத்திருந்தார். நான் வரவே இருவரும் நடந்தோம். எனக்கு களைப்பு அதிகமானது. இருந்தும் மனம் ஓய்வு எடுக்க விரும்பவில்லை. ஏனெனில் ஆமை வேகத்தில் இறங்கினாலும் நிற்காது இலக்கை அடைய வேண்டும் என்பதே ஆசையும் லட்சியமும்.
முரளி என்னை முன்னே நடக்க சொல்லி பின்னே அவர் வந்து கொண்டிருந்தார்.நான் களைப்பாய் இருப்பதை உணர்ந்தவர் நான் மயங்கிவிழ வாய்ப்புள்ளதென்று எண்ணி பின்னே வந்தார் போலும், நானோ பல தரப்பட்ட எண்ணங்களுடன் நடையை தொடர்ந்து கொண்டி இருந்தேன். கால் வலியுடன் சேர்ந்து முதுகும் வலி கண்டது எனக்கு ஆனால் முடிக்கும் தூரம் கண் கண்ட தூரமானதால் வலியை தாங்கி நடந்தேன்.
கற்பாறை பாதை முடிந்து சாதரண பாதையை கால் கண்டு கொண்டது, எங்களுக்காக விக்கியும் சூரியும் காத்துக்கொண்டிருக்க நால்வரும் கடைசி அடிகளை ஒன்றாய் நடந்தோம்.
சுமார் ஒன்பது மணி நேரப் பயணத்திற்கு பிறகு எங்கு ஒன்றாக தொடங்கியமோ அங்கயே ஒன்றாக பயணத்தை முடித்தோம். மகிழ்சியின் உச்சத்தில் அனைவரும் இருந்தோம் அனைவரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொண்டோம், பேசி மகிழ்ந்து கொண்டோம். அனைவருக்கும் அந்த தருணத்தில் ஒற்றுமையாக இருந்த உணர்வு பசி மட்டுமே. அனைவரும் அந்த தோற்றத்துடனே அருகமாயில் அருகில் இருந்த இந்திய உணவகத்திற்கு சென்று அங்கு பல நிமிட காத்திருப்புக்கு பிறகு உணவருந்தி விட்டு நாங்கள் தங்கியிருந்த வீட்டை அடைந்தோம்.
நால்வருக்கும் கால் வலி பின்னி எடுத்தது, எனக்கு நிச்சயம் வெண்ணீரில் நீராடல் தேவைப்பட்டது அனைவரும் சிறு சிறு ஆரவாரத்திற்கு பிறகு உறங்கச் சென்றோம். மெத்தையில் படுத்த பின்பு என் காலை என்னால் உணர முடியவில்லை ஆனால் மனம் கொண்ட மகிழ்ச்சியை உணரமுடிந்தது.
நான் யாரும் செய்யாததை செய்யவில்லை. ஆனால் நான் செய்ய நினைத்ததை செய்து விட்டேன் என்ற ஒரு இன்பம். அதுவும் போக என் வாழ்வில் ஒரு சில பாடங்களையும், தன்னம்பிக்கையும் இந்த பயணம் எனக்கு கற்றுத்தந்தது.
நம் மனதை மகிழ்ச்சியாய் வைத்துக்கொண்டால் அதற்கான உணவை இது போன்று அவ்வப்போது கொடுத்துக்கொண்டால், வாழ்வில் சோகம் நீங்குமா எனக்கு தெரியாது ஆனால் ஏதோ ஒரு இனம் புரியா இன்பமும், தன்னம்பிக்கையும் பிறக்கும்.
அதுவே, இது போன்று எழுதவும் வைக்கும்…
நன்றி, சுபம். அரவிந்த் அண்ணாத் துரை