விதிகளை மீறினால் 2 ஆண்டுகள் சிறை – தேர்தல் ஆணையம் உத்தரவு..!

 விதிகளை மீறினால் 2 ஆண்டுகள் சிறை – தேர்தல் ஆணையம் உத்தரவு..!

தமிழ்நாட்டில் இன்று மாலை 6 மணி முதல் நாளை மறுநாள் மாலை வாக்குப்பதிவு முடியும்வரை பொதுக்கூட்டம், ஊர்வலம், ஊடகங்கள், சமூக வலைதளங்கள், பொழுதுபோக்கு நிகழ்ச்சி என எந்த வகையிலும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள கூடாது என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு அறிவுறுத்தியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது. நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதும் ஒரே கட்டமாக நாளை மறுநாள் (ஏப். 19) 40 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இறுதிகட்ட வாக்குப்பதிவு ஜூன் 1-ம் தேதி நடைபெறும் நிலையில், ஜூன் 4-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

நாளை மறுநாள் தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கடந்த 2 வாரங்களுக்கு மேலாக அனல்பறக்க நடந்துவந்த பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் முடிவடைகிறது. இதுதொடர்பாக வேட்பாளர்கள், அரசியல் கட்சிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு வெளியிட்ட செய்திக்குறிப்பில்,

“தமிழ்நாட்டின் 39 மக்களவை தொகுதிகளில் பொதுத் தேர்தல் மற்றும் விளவங்கோடு சட்டப்பேரவை தொகுதிஇடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ம் தேதி காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். இதையொட்டி, ஏப்ரல் 17-ம் தேதி (இன்று) மாலை 6 மணி முதல் வாக்குப்பதிவு முடியும் வரை, மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி விதிமுறைகள் அமலில் இருக்கும். அந்த காலகட்டத்தில் தேர்தல் தொடர்பான எந்த ஒரு பொதுக்கூட்டத்தையோ, ஊர்வலத்தையோ யாரும் ஒருங்கிணைக்கவோ, நடத்தவோ, அதில் பங்கேற்கவோ கூடாது.

திரைப்படம், தொலைக்காட்சி, பண்பலை (எஃப்எம்) வானொலி, வாட்ஸ்அப், முகநூல், எக்ஸ் போன்ற சாதனங்கள் வாயிலாக எந்த ஒரு தேர்தல் விவகாரத்தையும் மக்களின் பார்வைக்கு வைக்க கூடாது. குறுஞ்செய்தி, இணையம் உள்ளிட்ட மின்னணு வடிவிலான அனைத்து தகவல் தொடர்பையும் இது உள்ளடக்கும்.

பொதுமக்களில் எந்த ஒரு நபரையும் ஈர்க்கும் வகையில் இசை நிகழ்ச்சி, திரையரங்க செயல்பாடு, கேளிக்கை, பொழுதுபோக்கு நிகழ்ச்சியை நடத்துவது, ஏற்பாடு செய்வதன் மூலம் எந்த ஒரு தேர்தல் விவகாரத்தையும் யாரும் பிரச்சாரம் செய்ய கூடாது. மேற்கண்ட 3 விதிமுறைகள் எந்த விதத்தில் மீறப்பட்டாலும், மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி 2 ஆண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இவை இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.

ஏப்ரல் 17-ம் தேதி (இன்று) மாலை 6 மணிக்கு மேல், தொகுதிக்கு வெளியில் இருந்து அழைத்து வரப்பட்ட அனைத்து அரசியல் கட்சி நிர்வாகிகள், கட்சி பணியாளர்கள் உட்பட தொகுதி வாக்காளர்கள் இல்லாத அனைவரும் அத்தொகுதியைவிட்டு வெளியேற வேண்டும். வேட்பாளர்களுக்கு வழங்கப்பட்ட நட்சத்திர பேச்சாளர்கள் உள்ளிட்ட வாகன அனுமதிகள் இன்று மாலை 6 மணி முதல் செல்லாது.

வாக்குப்பதிவு நாளில் ஒவ்வொரு வேட்பாளரும் அந்த தொகுதி முழுவதும் அவரது சொந்த பயன்பாட்டுக்கான ஒரு வாகனம், தேர்தல் முகவரின் பயன்பாட்டுக்காக தொகுதிக்கு ஒரு வாகனம் மற்றும் மக்களவை தொகுதியில் அடங்கியுள்ள ஒவ்வொரு சட்டப்பேரவை தொகுதிக்காக தேர்தல் முகவர், அவரது பணியாளர்கள் அல்லது கட்சி பயன்பாட்டுக்காக ஒரு வாகனம் ஆகியவை பயன்படுத்த அனுமதி அளிக்கப்படும்.

வாக்காளரை அழைத்து வரவும், வாக்குச்சாவடியில் இருந்து திரும்ப அழைத்து செல்லவும் வேட்பாளர் அல்லது அவரது முகவரின் வாகனத்தை வாடகைக்கு எடுக்கவோ, வாங்கவோ, பயன்படுத்தவோ எந்த ஒரு வேட்பாளரும் அனுமதிக்க கூடாது.அவ்வாறு செய்வது மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி தண்டனைக்குரிய முறைகேடான செயல் ஆகும்”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...