நாளையுடன் “தேர்தல் பரப்புரை நிறைவு”
தமிழ்நாட்டில் மக்களவைத் தோ்தல் பிரச்சாரம் நாளை மாலை 6 மணியுடன் நிறைவு பெறுவதாக தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தாா்.
தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல் ஒரே கட்டமாக வரும் 19-ம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெறுகிறது. இன்னும் தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. இதனால், தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்த நிலையில், தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“தேர்தல் விதிமீறலில் ஈடுபடுபவர்கள் மீது சி-விஜில் எனும் செயலியில் புகாா் அளிக்கலாம். அந்த செயலியில் இதுவரை 4,169 புகாா்கள் வந்தன. அவற்றில் 3,350 புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டன. 383 புகாா்களுக்கு போதிய ஆதாரம் இல்லாததால் கைவிடப்பட்டன. மீதமுள்ள 34 புகார்கள் மட்டுமே தீா்க்கப்படாமல் உள்ளன.
தமிழ்நாடு முழுவதும் கடந்த 1-ஆம் தேதி முதல் பூத் ஸ்லிப் எனும் வாக்குச்சாவடி அடையாளச் சீட்டுகள் விநியோகம் செய்யப்பட்டன. இதுவரை 92.80 சதவீதம் அடையாளச் சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. மீதமுள்ள சீட்டுகள் இன்னும் ஓரிரு நாள்களில் கொடுக்கப்படும்.
பாா்வை மாற்றுத்திறனாளிகளும் தங்களது வாக்குகளைச் செலுத்த தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அவா்கள் வாக்கு செலுத்த ஏதுவாக மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பிரெய்லி வசதி உள்ளது. அதன்மூலம், அவர்கள் வாக்களிக்கலாம். தமிழ்நாடு முழுவதும் நாளை மாலை 6 மணியுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவு பெறுகிறது.
வாக்குப் பதிவு நிறைவடையும் தேதிக்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக பிரசாரம் முடிவடையும். பிரசாரம் ஓய்ந்த பிறகு யாரும் எந்த வகையிலும் வாக்கு சேகரிக்க கூடாது. வாக்காளா்கள் ஏதேனும் புகாா் தெரிவிக்க விரும்பினால், 1950 என்ற எண்ணைத் தொடா்பு கொள்ளலாம். இந்த எண்ணுக்கு முன்னதாக மாவட்டத்துக்கான ‘எஸ்டிடி’ தொலைபேசி எண்ணைப் பதிவிட்டு அழைக்க வேண்டும்.
மக்களவைத் தேர்தலுக்கான 1 லட்சத்து 59 ஆயிரத்து 100 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும், 82,014 கட்டுப்பாட்டு கருவிகளும், 88,783 விவிபேட் (வாக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரம்) இயந்திரங்கள் அனைத்தும் தயாா் நிலையில் உள்ளன.
விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ காலமானதைத் தொடா்ந்து, அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொகுதியில் இடைத்தோ்தல் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.”
இவ்வாறு தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தெரிவித்தார்.