சென்னையில் தபால் வாக்கு இன்று முடிவடைகிறது..!
சென்னை மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் போலீஸார் தபால் வாக்கு செலுத்த இன்றே கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மக்களவை தேர்தலில் சென்னை மாவட்டத்தில் வட சென்னையில் 35, தென் சென்னையில் 41, மத்திய சென்னையில் 31 என மொத்தம் 107 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
சென்னை மாவட்டத்தில் மட்டுமே 4 ஆயிரத்து 538 போலீஸார், இதர மாவட்டங்களிலிருந்து 14 ஆயிரத்து 533 போலீஸார், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து 51 போலீஸார் என மொத்தம் 19 ஆயிரத்து 122 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
எனவே, மக்களவை தேர்தலில் சென்னை மாநகர போலீசார் அனைவரும் தபால் வாக்கு செலுத்த சென்னை மாவட்டத்துக்கு உட்பட்ட 3 தேர்தல் நடத்தும் அலுவலர்கள் அலுவலகத்தில் சிறப்பு தபால் வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அதன்படி கடந்த வியாழக்கிழமை முதல் இன்று சனிக்கிழமை வரை 3 நாட்கள் காலை 9 மமணி முதல் மாலை 5 மணி வரை போலீசார் தபால் வாக்கு செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, சென்னையில் போலீசார் தொடர்ந்து இந்த 3 நாட்களுமே தபால் வாக்கு செலுத்தி வருகிறார்கள்.
சென்னை வண்ணாரப்பேட்டை பேசின்பிரிட்ஜ் ரோட்டில் உள்ள வடசென்னை தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம், சென்னை அடையாறு, முத்துலட்சுமி சாலையில் உள்ள தென் சென்னை தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகம் மற்றும் சென்னை செனாய் நகர், புல்லா அவென்யூவில் உள்ள மத்திய சென்னை தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகத்தில் போலீசார் தங்களது வாக்குகளை செலுத்தி வருகிறார்கள்.
தபால் வாக்கு செலுத்த விண்ணப்பித்த அனைத்து போலீஸ் அதிகாரிகள், போலீசார் தகுந்த ஆவணங்கள் மற்றும் அடையாள அட்டையுடன் சென்று வாக்களிக்கும்படி பெருநகர சென்னைசென்னை மாநகராட்சி கேட்டுக் கொண்டிருக்கிறது. கடந்த 11-ம் தேதி முதல் விறுவிறுப்பாக தபால் வாக்குகளை போலீசார் செலுத்தி வரும்நிலையில், இந்த தபால் வாக்குப்பதிவு இன்று மாலை 5 மணிக்கு நிறைவடைகிறது. அதற்குள் தங்கள் வாக்குகளைச் செலுத்துமாறு மாவட்ட தேர்தல் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது… ஓட்டுப்போட இன்றே கடைசி நாள் என்பதால், போலீசாரும் தபால் வாக்குகளை பதிவு செய்துகொண்டிருக்கிறார்கள்.