தமிழ்நாட்டில் 1403 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல் – தேர்தல் ஆணையம்
வரும் மக்களவை தேர்தலில், தமிழ்நாட்டில், போட்டியிடுவதற்கு ஆயிரத்து 403 பேர் வேட்புமனு தாக்கல் செய்ததாக தேர்த்ல ஆணையர் சத்திய பிரதா சாஹூ அறிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், ஆயிரத்து 403 பேர் தேர்தலில் போட்டியிட ஆயிரத்து 749 வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதில் அதிகபட்சமாக கரூரில் 62 பேரும், குறைந்தபட்சமாக நாகை தொகுதியில் 13 பேரும் போட்டியிடுகின்றனர். இந்நிலையில், கடந்த 2021 தேர்தலை விட, தற்போது தபால் வாக்குகளை செலுத்துவதற்கு அதிகம் பேர் பதிவு செய்திருப்பதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
பொது தேர்தல் 2024 கையேட்டை வெளியிட்டு பேசிய அவர், 85 வயதிற்கு மேற்பட்ட முதியவர்களில் வீட்டில் இருந்தே வாக்களிக்க 4 லட்சம் பேர் பதிவு செய்திருப்பதாக கூறியுள்ளார். மேலும், சமூக வலைதளங்களில் வெறுப்பு பேச்சை பரப்புபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க தேர்தல் அதிகாரிகளுக்கு பயிற்சி மற்றும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என்றார். இந்நிலையில், வேட்பாளர்கள் தாக்கல் செய்துள்ள வேட்புமனுக்கள் இன்று பரிசீலிக்கப்பட உள்ளன. இதனை தொடர்ந்து, வரும் சனிக்கிழமை வரை வேட்புமனுக்களை திரும்ப பெறுவதற்கு அவகாசம் உள்ளது. அன்றைய தினம் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும்.