உதகை மண்டல வனப்பகுதியில் காட்டுத் தீ..!
உதகையில் புகழ் பெற்ற சுற்றுலா தலமாக திகழும் தொட்டபெட்டா காட்சி முனைக்கு
செல்லும் மலை பாதையை ஒட்டி அமைந்துள்ள வனப்பகுதியில் காட்டுத் தீ ஏற்பட்டது.
மலைப் பிரதேசமான நீலகிரி மாவட்டம் 55 சதவீதம் வனப்பகுதியை கொண்டுள்ளது.
இங்குள்ள வனப்பகுதிகளில் அரிய வகை மரங்கள், செடிகள், மூலிகை தாவரங்கள் உள்ளன. மேலும் இவை பறவை இனங்கள், வனவிலங்குகளின் வசிப்பிடமாக உள்ளது.
இந்த நிலையில் வெயிலின் காரணமாக நீலகிரி மாவட்டத்தில் செடி கொடிகள் கருகியும், மரங்கள் காய்ந்தும் காணப்படுகிறது.
இதனால் வனப்பகுதிகளில் ஆங்காங்கே காட்டுத் தீ ஏற்பட்டு வருகின்றன. அதேபோல் உதகையில் அமைந்துள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக திகழும் தொட்டபெட்டா காட்சி முனைக்கு செல்லும் அடர்ந்த மலை பாதையை ஒட்டி அமைந்துள்ள வனப்பகுதியில் திடீரென காட்டுத் தீ ஏற்பட்டது.
இதனையறிந்த வனத்துறையினர், உதகை தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்பு துறையினர், வனத்துறையினருடன் இணைந்து தண்ணீரை பாய்ச்சி அடித்து வனப்பகுதியில் ஏற்பட்ட தீயை அணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி வனப்பகுதியில் ஏற்பட்ட தீயை
அணைத்தனர். இதனால் தொட்டபெட்டா மலைப்பாதையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தீயணைப்புத் துறை மற்றும் வனத்துறையினர் துரிதமாக செயல்பட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.