“மைக்” சின்னத்தில் நாம் தமிழர் கட்சி போட்டி – சீமான் அறிவிப்பு
’மைக்’ சின்னத்தை நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்து வைத்தார்.
கடந்த 2019 மற்றும் 2021 ஆம் வருடத் தேர்தல்களில் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சிக்குக் கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டது. இம்முறை தேர்தல் ஆணையத்திடம் தாமதமாக விண்ணப்பித்ததால் தற்போதைய நாடாளுமன்றத் தேர்தலில் சீமான் கட்சிக்குக் கரும்பு விவசாயி சின்னம் கிடைக்கவில்லை.
எனவே நாடாளுமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு ‘மைக்’ சின்னத்தை ஒதுக்கீடு செய்து இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. வேறு ஒரு கட்சிக்குக் கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டதால் நாம் தமிழர் கட்சிக்கு மைக் சின்னம் ஒதுக்கப்பட்டது.
ஆனால் மைக் சின்னத்திற்கு பதிலாக வேறு சின்னம் ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்திடம் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் தேர்தல் ஆணையத்திடம் மின்னஞ்சல் வாயிலாகக் கோரிக்கை வைத்தனர். சீமான் படகு அல்லது பாய்மர படகு சின்னம் ஒதுக்கும்படி தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்தார்.
இதனிடையே, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் நாம் தமிழர் கட்சி மக்களவைத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் அறிக்கையினை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டார். இதில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். அதை அடுத்து, மைக்’ சின்னத்தை அறிமுகம் செய்து வைத்த நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
2024 நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. கடந்த காலங்களில் விவசாயி சின்னத்தில் போட்டியிட்டோம். எப்படியாவது அந்த சின்னத்தை வெற்றி பெற வேண்டும் என்று இறுதிவரை போராடினோம். சின்னத்தை இழந்தாலும் எண்ணத்தை இழந்து விடக்கூடாது என்று.
இதை விட சிறந்த சின்னம் இல்லை என்று முடிவு செய்து உள்ளோம். விவசாயி சின்னத்தையும் நான் கேட்கவில்லை மைக் சின்னத்தையும் நான் கேட்கவில்லை. தேர்தல் ஆணையம் தான் கொடுத்தது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தொடர்ந்து நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையையும் சீமான் வெளியிட்டார். அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:
விடுதலைப்புலிகள் இயக்கம் தடையை நீக்க நடவடிக்கை
- சின்னம் இல்லாத தேர்தல் நடைமுறை
- தொகுதி மேம்பாட்டு நிதியை நாடாளுமன்ற உறுப்பினர்கள் வீணடிப்பதை தடுக்க நடவடிக்கை
- தமிழை நீதிமன்ற வழக்காடு மொழியாக கொண்டு வருதல்.
- வடமாநிலத்தவர்கள் தமிழகத்திற்கு வேலைவாய்ப்புக்காக வருவதை நாம் தமிழர் கட்சி எதிர்க்கவில்லை, ஆனால் வாக்குரிமை பெற்று தமிழ்நாட்டிற்குள் அரசியலை தீர்மானிக்கும் அதிகாரம் பெறுவதை நாம் தமிழர் கட்சி எதிர்க்கிறது.
- உயர்கல்வியில் சேர நுழைவு தேர்வு முறையை நாம் தமிழர் கட்சி எதிர்க்கிறது.
- ஆட்சியாளர்கள், அரசு ஊழியர்கள் கட்டாயம் அரசு மருத்துவமனைகளில் தான் மருத்துவம் பெற வேண்டும் என சட்டம் இயற்ற நாம் தமிழர் கட்சி நடவடிக்கை எடுக்கும்.
- ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தொடர்புடைய எழுவருக்கான முழு விடுதலை