வெற்றியுடன் ஐபிஎல் தொடரை ஆரம்பித்தது சி.எஸ்.கே..!
ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில், முதல் போட்டியிலேயே பெங்களுரு அணியை வீழ்த்தி வெற்றியுடன் சென்னை அணி நடப்பு சீசனை தொடங்கியுள்ளது.
ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில் சென்னையில் நடைபெற்ற முதல் போட்டியில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. கடந்த ஆண்டு சென்னை அணி சாம்பியன் பட்டம் வென்றதன் அடிப்படையில் முதல் போட்டி சென்னையில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் டூப்ளசிஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக அவரும் விராட் கோலியும் களம் இறங்கி ஓரளவு நல்ல தொடக்கத்தை அணிக்கு கொடுத்தனர். இருவரும் முதல் விக்கெட்டிற்கு 41 ரன்கள் சேர்த்தனர். டூப்ளசிஸ் 35 ரன்னிலும், அடுத்து வந்த ரஜத் பட்டிதார், கிளென் மேக்ஸ்வெல் ரன் ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தனர். விராட் கோலி 21 ரன்கள் எடுத்து வெளியேறினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேமரூன் கிரீன் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். 11.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்த ஆர்சிபி அணி 78 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறியது.
இதைத் தொடர்ந்து தினேஷ் கார்த்திக்குடன் இணைந்து இளம் வீரர் அனுஜ் ராவத் பொறுப்பாக விளையாடி ரன்களை சேர்த்தார். 26 பந்துகளை எதிர்கொண்ட தினேஷ் கார்த்திக் 2 சிக்சர் 3 பவுண்டரியுடன் 38 ரன்களும், அனுஜ் ராவத் 25 பந்துகளில் 3 சிக்சர் 4 பவுண்டரியுடன் 48 ரன்களும் எடுத்தனர். சென்னை அணி தரப்பில் முஸ்தபிசுர் ரகுமான் 4 முக்கிய விக்கெட்டுகளை சாய்த்தார்.
174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சற்று சவாலான இலக்கை நோக்கி சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் களம் இறங்கினர். கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 15 ரன்களும், ரச்சின் ரவிந்திரா 37 ரன்களும் எடுத்து நல்ல தொடக்கத்தை சென்னை அணிக்கு கொடுத்தனர். அடுத்து வந்த ரஹானே 27 ரன்களும், டேரில் மிட்செல் 22 ரன்களும் சேர்க்க, சென்னை அணியின் வெற்றி இலகுவானது.
12.3 ஓவர்களில் சென்னை அணி 110 ரன்கள் எடுத்திருந்தபோது 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இதன்பின்னர் இணைந்த ஷிவம் துபே – ஜடேஜா இணை பொறுப்புடன் விளையாடி அணியை வெற்றி பெறச் செய்தது. துபே 28 பந்துகளில் 1 சிக்சர் 4 பவுண்டரியுடன் 34 ரன்களும், ஜடேஜா 17 பந்துகளில் 1 சிக்சருடன் 25 ரன்களும் எடுத்து கடைசி வரை களத்தில் நின்றனர். 18.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்திருந்தபோது சென்னை அணி வெற்றி இலக்கை எட்டியது.