என் செய்வாய் மானிடா? | ஸ்ரீநிரா
வெறுமை சூழ
இருக்கிறது
முழு உலகம்
எது செய்தாலும்
உரைக்கவில்லை
வார்த்தைகள் பிரிந்து
எழுத்துக்களாகி
தாள்களை விட்டு
வெளியேறுகின்றன
இசைக் கலைஞன்
அபஸ்வரமாக
ஒலிக்கிறான்
பேனாவிலிருந்து
உயிரில்லாத
பொய்யெழுத்துகள்
வெளி வருகின்றன
வறண்டு போன நாக்கும்
பிளவுபட்ட உதடுகளும்
ஒத்துழைக்க மறுக்கின்றன
தோட்டத்தில் பூமரங்கள்
தலை கவிழ்ந்து
துஞ்சி விடுகின்றன
காற்றும் ஈரம் இழந்து
கையறு நிலையில்
பொசுக்குகிறது
வானம்
கரு முகில்களைத்
துறவு பூண்டு
பாழாய் நிற்கிறது
பாதைகள்
முறுக்கிக் கொண்டு
திமிறி நீள்கின்றன
நிலவு
தேய்ந்து போன
முக்காடு ஒன்றைத்
தரித்துக்கொள்கிறது
கொத்துக் கொத்தாய்
மனிதன் வீழ
புரியாமல் தவிக்கின்றன
பிற உயிர்கள்
மாறாமல் இருப்பது
மனித மனத்தின்
வக்கிரங்கள் மட்டுமே
சாளரத்திற்கு வெளியே
பூமிப்பரப்பைப்
பார்க்கவே
பயந்து வருகிறது
என்ன செய்து
என்
காலத்தை நான்
குளிரூற்றுவேன்?