நாளை தேர்தல் பரப்புரையைத் தொடங்கும் முதல்வர்..!
மக்களவை தேர்தலை ஒட்டி, திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் நாளை முதல் தனது பரப்புரைப் பயணத்தை தொடங்குகிறார்.
திருச்சி மற்றும் பெரம்பலூரில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை பரப்புரை செய்கிறார். அதன் தொடர்ச்சியாக, சனிக்கிழமை தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினத்தில், இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மு.க.ஸ்டாலின் வாக்கு சேகரிக்க உள்ளார். வரும் திங்கட்கிழமை, கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பரப்புரை மேற்கொள்கிறார். வரும் 26ஆம் தேதி தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம், 27ஆம் தேதி தென்காசி மற்றும் விருதுநகர், மார்ச் 29ஆம் தேதி, தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி, 30ஆம் தேதி சேலம் என பரப்புரை செய்யவுள்ளார்.
வரும் 31ஆம் தேதி ஈரோடு, நாமக்கல், கரூரில் வாக்கு சேகரிக்கும் முதலமைச்சர், ஏப்ரல் 2 ஆம் தேதி வேலூர் மற்றும் அரக்கோணத்தில் பரப்புரையை மேற்கொள்கிறார். ஏப்ரல் 3ஆம் தேதி திருவண்ணாமலை மற்றும் ஆரணி, ஏப்ரல் 5 ஆம் தேதி கடலூர் மற்றும் விழுப்புரத்தில் வாக்கு சேகரிக்க உள்ளார். ஏப்ரல் 6 ஆம் தேதி சிதம்பரம் மற்றும் மயிலாடுதுறையில் பரப்புரை மேற்கொள்ளும் மு.க.ஸ்டாலின், 7 ஆம் தேதி புதுச்சேரியில் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு கோருகிறார். அதனை தொடர்ந்து, ஏப்ரல் 9 ஆம் தேதி மதுரை, சிவகங்கையிலும், ஏப்ரல் 10 ஆம் தேதி தேனி, திண்டுக்கல்லிலும் ஏப்ரல் 12 ஆம் தேதி திருப்பூர், நீலகிரியிலும் 13 ஆம் தேதி கோவை மற்றும் பொள்ளாச்சியிலும் ஏப்ரல் 15 ஆம் தேதி திருவள்ளூர், வடசென்னையிலும், 16 ஆம் தேதி காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூரிலும் பரப்புரை செய்ய உள்ளார்.
ஏப்ரல் 17 ஆம் தேதி தென்சென்னை மற்றும் மத்திய சென்னையில் தனது பரப்புரையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவு செய்ய உள்ளார். தேர்தல் பரப்புரைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செல்லும் போது, காலத்தின் அருமை கருதி, கட்சியினர் வேறு எவ்வித நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்ய வேண்டாம் என திமுக தலைமை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.