இலக்கு இரண்டு கோடி உறுப்பினர்கள் ; தமிழக வெற்றிக் கழகம்..!
தமிழக வெற்றிக் கழகத்தில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் உட்கட்சிக் கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று சென்னையில் நடைபெற்றது. கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
தமிழக வெற்றிக் கழகத்தின் உள்கட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் உறுப்பினர் சேர்க்கை முகாம்கள் மாநிலம் முழுவதும் மாவட்ட மற்றும் சட்டமன்றத் தொகுதிகள் வாரியாக நடத்தப்பட வேண்டும்.
விரைவில் முதற்கட்டமாக மகளிர் தலைமையிலான உறுப்பினர் சேர்க்கை அணி நிர்வாகிகள் அறிவிக்கப்பட உள்ளனர்.
உறுப்பினர் சேர்க்கை அணியுடன் இணைந்து, புதியதாக நியமிக்கப்பட இருக்கும் மாவட்டப் பொறுப்பாளர்கள், சட்டமன்றத் தொகுதிப் பொறுப்பாளர்கள் ஆகியோர் முழு அளவில் உறுப்பினர் சேர்க்கைக்கான ஒருங்கிணைப்புப் பணிகளில் ஈடுபட வேண்டும்.
தமிழக வெற்றிக் கழகத்தால் நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டு வரும் சிறப்புச் செயலி வாயிலாக உறுப்பினர் சேர்க்கை முகாம்களை மாவட்ட, மாநகர, நகர, பேரூர், ஒன்றிய, ஊராட்சி, வார்டுவாரியாக முழுவீச்சில் நடத்தி, புதிய உறுப்பினர்களைச் சேர்க்க வேண்டும்
2 கோடி உறுப்பினர்கள் என்று இலக்கு நிர்ணயித்து, உறுப்பினர் சேர்க்கைப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.