திக் திக் தீபிகா….,இரண்டாவது அத்தியாயம்
முன்னுரை
கவிஞர் கிஷோர் தன் பணக்கார காதலியான தீபிகாவின் பிறந்த அவளை சந்திக்க செல்லப் போகிறேன். அதற்கு என்ன பரிசுப்பொருள் வாங்கவேண்டும் என்று யோசிக்கிறான்
இனி………
——————-
தீபிகாவுக்கு நீ என்ன பரிசு தரப்போறே ?
அசோக்தான் கேட்டான். கிஷோரையும் அவன் காதலையும் ஆதரிக்கும் ஒரே ஜீவன் இவன்தான்
என்னத்தடா தருவேன் ? இழப்பதற்கு எங்களிடம் எதுவும் இல்லை கைவிலங்கைத் தவிரன்னு சொன்னார் காரல் மார்க்ஸ். அதுமாதிரி கொடுப்பதற்கு என்னிடம் எதுவுமில்லை, இதயத்தைத் தவிர, இதுதான் என் நிலை.
தன் இயலாமையைப் பற்றி சொன்ன விதம் கூட ரொம்பவும் அழகாக இருந்தது.
டேய் கிஷோர் ஏண்டா விரக்தியாப் பேசறே டோண்ட் ஒர்ரீமா… இந்தா என்னோட வாட்ச். இதை வச்சிக் கொஞ்சம் பணம் புரட்டு ஏதாச்சம் வாங்கிட்டுப் போ,வெறுங்கையயோட போய் நிக்காதே.
சீச்சீ வேணான்டா இருக்கிற வாட்சையும் எனக்காக கழட்டாதே…
டேய் இந்த பார்மாலிட்டீஸை எல்லாம் தூக்கிக் குப்பையில போடு, இந்தா வாட்ச், எடுத்துக்க நல்ல ஒரு காதலனா நடந்துக்க…
கழற்றி வாட்சைக் கிஷோரின் கைகளுக்குள் வைத்து, தோளைத் தட்டிக் கொடுத்தான் அசோக்.
தேவையறிந்து தானாய் வந்து உதவுகிற குணம் யாருக்கு வரும் ? அதிலும் அடுத்தவன் காதலுக்கு யார் வாட்ச் கழற்றுவார்கள் ?
நீ இருப்பதே கஷ்டத்தில் இந்த லட்சணத்தில் காதல் ஒரு கேடா என்று கேட்காத சிநேகம்.
உன்னை நேசிக்கிற ஜீவனை, நீயும் தைரியமா நேசி என்று உபதேசம் பண்ணுகிற அபூர்வமான சிநேகம்.
கிஷோர் அசோக்கின் கையைப் பற்றி கொஞ்சம் வலுவாய் அழுத்தினான். அந்த அழுத்தத்தில் இறுகிய நட்பின் பிரதிபலிப்பு இருந்தது.