டெல்லியில் விவசாயிகள் போராட்டம் : துணை இராணுவம் குவிப்பு..!

 டெல்லியில் விவசாயிகள் போராட்டம் : துணை இராணுவம் குவிப்பு..!

பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் இன்று டெல்லி நோக்கி பேரணி செல்கின்றனர். இவர்களை தடுக்க 114 கம்பெனி துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டிருக்கின்றனர். அதேபோல டெல்லியில் நுழைவதற்கும், வெளியேறுவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில், விவசாயிகளின் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் செய்யப்படும் என பாஜக வாக்குறுதி கொடுத்திருந்தது. இந்நிலையில் இந்த வாக்குறுதியை நிறைவேற்ற, குறைந்தபட்ச ஆதார விலையை உறுதி செய்யும் வகையில் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும், சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரைகளை அமல்படுத்துதல், விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம், விவசாயக் கடன் தள்ளுபடி, போலீஸ் வழக்குகளைத் திரும்பப் பெறுதல் மற்றும் லக்கிம்பூர் கெரி வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டும் என்று கோரி விவசாயிகள் டெல்லியை நோக்கி பேரணியை தொடங்கியுள்ளனர்.

இந்த பேரணி காரணமாக டெல்லியில் கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டெல்லி முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. சம்யுக்தா கிசான் மோர்ச்சா மற்றும் கிசான் மஸ்தூர் மோர்ச்சா ஆகிய சங்கங்கள் இந்த பேரணிக்கு அழைப்பு விடுத்துள்ளன. இதனையேற்று சுமார் 200 விவசாய சங்கங்கள் பேரணிக்கு ஆணி திரண்டுள்ளன. தோராயமாக இந்த பேரணியில் 20,000 விவசாயிகள், 2,500 டிராக்டர்களுடன் பங்கேற்பார்கள் என்று சொல்லப்படுகிறது.

எனவே இவர்கள் டெல்லியில் நுழைவதை தடுக்க தீவிர தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 114 கம்பெனி துணை ராணுவப்படையினர் விவசாயிகளை தடுக்கும் பணியில் களமிறக்கப்பட்டிருக்கிறார்கள். ஒரு கம்பெனியில் குறைந்தபட்சம் 100 முதல் அதிகபட்சமா 250 வீரர்கள் வரை இருப்பார்கள். இது தவிர ஹரியான, டெல்லி போலீசாரும் களமிறக்கப்பட்டிருக்கிறார்கள். உத்தரப் பிரதேசம், ஹரியானா மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் இருந்து ஏராளமான விவசாயிகள் டெல்லிக்குள் நுழைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சண்டிகரில் இருந்து டெல்லிக்கு வரும் பயணிகள் பஞ்ச்குலா, பர்வாலா, சாஹா, ஷஹபாத், குருக்ஷேத்ரா வழியாக அல்லது பஞ்ச்குலா, பர்வாலா, யமுனாநகர் (NH-344), லட்வா, இந்திரி வழியாக கர்னால் வழியாக டெல்லியை அடைய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.டெல்லியிலிருந்து சண்டிகருக்கு செல்ல இதே வழியை பின்பற்றவும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். மற்ற பாதைகள் முற்றிலுமாக அடைக்கப்பட்டிருக்கின்றன.

மேற்குறிப்பிட்ட பாதைகளை தவிர மற்ற பாதைகள் சிமென்ட் தடுப்பு கொண்டு அடைக்கப்பட்டிருக்கிறது. முள் வேலிகள், சாலையில் இரும்பு கம்பிகளை முற்கள் போன்று பதித்து விவசாயிகளின் வருகையை போலீசார் தடுத்து வருகின்றனர். மறுபுறம் சோஷியல் மீடியாக்களில் இந்த பேரணி குறித்து தவறான கருத்துக்களை பரப்புவோர் மீதும், வன்முறையை தூண்டும் விதமாக கருத்துகளை பரப்புவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் கடந்த 2020ம் ஆண்டு விவசாயிகள் தொடர் போராட்டத்தை நடத்தியிருந்தனர். இதனால் இந்த சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெறுவதாக அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...