7 ஆண்டுகளுக்கு முன் மாயமான இந்திய விமானம் கண்டுபிடிப்பு..! | சதீஸ்

 7 ஆண்டுகளுக்கு முன் மாயமான இந்திய விமானம் கண்டுபிடிப்பு..! | சதீஸ்

சென்னையில் இருந்து அந்தமானுக்கு சென்றபோது மாயமான விமானத்தின் பாகங்கள் 7 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டது.

கடந்த 2016-ம் ஆண்டு ஜூலை 22-ம் தேதி சென்னையை அடுத்த தாம்பரம் விமானப்படை தளத்தில் இருந்து அந்தமானின் போர்ட் பிளேயர் நோக்கி காலை 8.30 மணியளவில் விமான படைக்கு சொந்தமான ஏ.என்.32 விமானம் புறப்பட்டது.

அந்த விமானத்தில் விமான ஊழியர்கள் 6 பேர், விமானப்படை ஊழியர்கள் 11 பேர், ராணுவ வீரர்கள் 2 பேர், கடற்படை வீரர், கப்பல் மாலுமி, கப்பல் படை ஊழியர்கள் 8 பேர் உட்பட 29 பேர் இந்த விமானத்தில் சென்றுள்ளனர். விமானம் புறப்பட்டு சென்ற 15 நிமிடத்தில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது.

ரேடாரின் பார்வையில் இருந்தும் விமானம் மாயமானது.  சென்னையில் இருந்து கிழக்கே 370 கிலோமீட்டர் தொலைவில் வங்காள விரிகுடா கடலுக்கு மேலே நடுவானில் 23 ஆயிரம் அடி உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது விமானம் திடீரென மாயமானது.  மாயமான விமானத்தை கண்டுபிடிக்க அப்போதைய பாதுகாப்புத்துறை மந்திரி மனோகர் பாரிக்கர் உத்தரவிட்டார்.

இதையடுத்து மாயமான விமானத்தை தேடும் பணியில் இந்திய விமானப்படை விமானங்கள், கடற்படை கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டன. சென்னையில் இருந்து 145 மைல் தொலைவில் விமானம் மாயமானதாக கூறப்பட்ட நிலையில் அப்பகுதியில் தீவிர தேடுதல் பணிகள் நடைபெற்றன.

தேடுதல் பணியில் அதிக அளவில் விமானங்கள்,  கப்பல்கள் ஈடுபடுத்தப்பட்டநிலையில் நாட்டின் மிகப்பெரிய அளவிலான தேடுதல் பணியாக அது பார்க்கப்பட்டது.  இரண்டு மாதங்களாக தேடுதல் பணிகள் தீவிரமாக நடைபெற்றது.   ஆனாலும், மாயமான விமானத்தின் நிலை குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இதனை தொடர்ந்து 2016-ம் ஆண்டு செப்டம்பர் 15-ம் தேதி விமானத்தை தேடும் பணியை நிறுத்திவிட்டதாக விமானப்படை அறிவித்தது.  மேலும், விமானத்தில் பயணித்த 29 பேரும் உயிரிழந்ததுவிட்டதாகவும் விமானப்படை அறிவித்தது.

இந்த நிலையில் 2016-ம் ஆண்டு மாயமான ஏ.என்.32 விமானத்தின் பாகங்கள் 7 ஆண்டுகளுக்கு பின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதான மத்திய அரசு அறிவித்துள்ளது.
சென்னைக்கு அருகே கடலில் 310 கிலோமீட்டர் தொலைவில் 3.40 கிலோமீட்டர் ஆழத்தில் மாயமான விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சோனார் கருவி மூலம் மாயமான விமானத்தின் பாகங்கள் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...