புழல் ரசாயன கிடங்கில் பயங்கர தீ விபத்து | சதீஸ்

 புழல் ரசாயன கிடங்கில் பயங்கர தீ விபத்து | சதீஸ்

சென்னையை அடுத்த புழல் பகுதியில் உள்ள தனியார் ரசாயன சேமிப்பு கிடங்கில் நள்ளிரவு 12 மணி அளவில்  பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்கும் முயற்சியில் பல மணி நேரமாக தீயணைப்பு துறையினர் போராடி வருகின்றனர்.

சென்னை அடுத்துள்ள புழல் பகுதி வள்ளுவர் நகரில் செயல்பட்டு வரும் பிரபல தனியாருக்கு சொந்தமான sea shelter warehouse சேமிப்பு கிடங்கில் பயங்கரமான தீ விபத்து ஏற்பட்டுள்ளது.  நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டது. கிட்டத்தட்ட 9 மணி நேரத்திற்கு மேலாக தீயானது கொழுந்து விட்டு எரிந்து வருகிறது.

முன்னதாக சேமிப்பு கிடங்கில் தனியாருக்கு சொந்தமான கெமிக்கல் சேமிப்பு குடோனியில் இருந்து முதலில் தீ பரவத் தொடங்கி உள்ளது. இதனைத் தொடர்ந்து அந்த கிடங்கு முழுவதுமாக தீப்பற்றி எரிந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர். சேமிப்பு கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டதை பார்த்த இந்த பகுதி பொதுமக்கள் உடனடியாக காவல்துறை மற்றும் தீயணைப்பு மீட்புத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்து உடனடியாக அங்கு விரைந்த செங்குன்றம் தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க முயன்றுள்ளனர். ஆனால், தீயின் பரவல் அதிகரித்த சென்றுள்ளது.

இதனையடுத்து கூடுதலாக அருகே இருந்த தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கூடுதல் தீயணைப்பு வாகனங்கள் கொண்டுவரப்பட்டன. குறிப்பாக மாதவரம் வ.உ.சி. நகர், வியாசர்பாடி, ஆவடி, எழும்பூர், அம்பத்தூர் தொழிற்பேட்டை தீயணைப்பு துறையினர் என பல பகுதி தீயணைப்பு நிலையங்களில் இருந்து 15 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன.

கூடுதலாக 6 டேங்கர் லாரிகளில் தண்ணீர் கொண்டு வரப்பட்டு முழு வீச்சில் தீயை அணைக்க கூடிய பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். மேலும், தீ விபத்து ஏற்பட்ட உடனே உள்ளே இருந்த ஊழியர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டதாகவும் தீயணைப்பு துறையினர் தெரிவிக்கின்றனர். கிட்டத்தட்ட 9 மணி நேரத்திற்கு மேலாக தீயை அணைப்பதற்காக சுமார் 100க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து தீயை அணைக்க அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகின்றனர்.

தீ விபத்து ஏற்பட்டு இருக்கக்கூடிய சேமிப்பு கிடங்கில் பல நிறுவனங்களுக்கு சொந்தமான பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்ததாகவும், குறிப்பாக, மருத்துவத்திற்கு பயன்படுத்தக்கூடிய ரசாயனங்கள்,  வீட்டு உபயோக பொருட்கள், வாகன பாகங்கள், வாகன டயர்கள், பிளாஸ்டிக் பொருட்கள் என டன் கணக்கில் பொருட்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்ததாகவும் தற்பொழுது எதிர்பாராத இந்த தீ விபத்தினால், கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டிருந்த அனைத்து பொருட்களும் தீயில் கருகி நாசமாக்கி உள்ளது.

இந்நிலையில்,  தீ விபத்து ஏற்பட்டு இருக்கக்கூடிய பகுதியை சுற்றி பல குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பயங்கர தீ விபத்தினால் இந்த பகுதி முழுவதுமாகவே கரும்புகையால் சூழ்ந்துள்ளது. அதனால் பொதுமக்களும் பாதுகாப்பான பகுதிகளுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த பகுதியில் ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், நள்ளிரவில் ஏற்பட்ட இந்த திடீர் பயங்கர தீ விபத்தினால் புழல் சுற்றுவட்டார பகுதியில் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...