“வலி மிகுந்த வெற்றி” – சிவகார்த்திகேயன் உருக்கம்.! | சதீஸ்
அயலான் படத்தின் முதல் நாள் முதல் காட்சி வெளியானதை தொடர்ந்து அதுகுறித்து உருக்கமான பதிவு ஒன்றை சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கே.ஜே.ஆர். நிறுவனம் சார்பில் தயாரான ‘அயலான்’ திரைப்படம் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கடந்த 2019-ம் ஆண்டு இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கும் ‘எம்.எஸ் சேலஞ்ச்’ என்ற திரைப்பட விளம்பர நிறுவனத்திற்கும் தொழில்ரீதியாக ஒப்பந்தங்கள் போடப்பட்டது. அதன்படி, கே.ஆர்.ஜே தயாரிப்பு நிறுவனத்துக்காக பணியாற்றியதற்கு விளம்பர நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய ஒன்றரை கோடி ரூபாய் தொகையை தயாரிப்பு நிறுவனம் செலுத்தவில்லை.
பின்னர், சிவகார்த்திகேயன் நடித்த ‘டாக்டர்’ படம் வெளியான நேரத்தில் 50 லட்சம் வழங்கப்பட்ட நிலையில், மீதமுள்ள ஒரு கோடி ரூபாயை அயலான் படம் வெளியாவதற்கு முன்னர் வழங்குவதாக கே.ஜே.ஆர் தயாரிப்பு நிறுவனம் சார்பில் உறுதி அளித்தது. ஆனால், பணத்தை திரும்ப கொடுக்காமல் படம் இன்று வெளியாகும் என அறிவிப்பு வெளியானதையடுத்து, எம். எஸ் சேலஞ்ச் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கு நேற்று நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரருக்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்த வேண்டும் என அறிவுறுத்திய நீதிபதி, அவ்வாறு பணம் திரும்ப செலுத்தாவிட்டால் அயலான் திரைப்படத்திற்கு ஏற்கனவே விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க முடியாது என தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து எம்.எஸ் சேலஞ்ச் விளம்பர நிறுவனத்திற்கு பட தயாரிப்பு நிறுவனம் 50 லட்சம் ரூபாய் திரும்ப செலுத்தியது. மீதமுள்ள 50 லட்சம் ரூபாய் ஏப்ரல் 10-ம் தேதிக்குள் செலுத்துவதாகவும் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. பின்னர், இந்த உத்தரவாதத்தை மீண்டும் நீதிபதியிடம் தாக்கல் செய்ததையடுத்து அயலான் திரைப்படத்திற்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்கி நீதிபதி உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து அயலான் திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி இன்று திரையரங்குகளில் வெளியானது. திரைப்படம் வெளியானதைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் ரசிகர்கள் திரையரங்கு முன்பு உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது..
“ ஒவ்வொரு வெற்றியாளனுக்கு பின்னாலும் ஒரு வலி மிகுந்த கதை உள்ளது. ஒவ்வொரு வலி மிகுந்த கதைக்கு பிறகும் ஒரு வெற்றிகரமான முடிவு இருக்கும். வலியை ஏற்றுக் கொண்டு வெற்றியை கொண்டாட தயாராவோம்” என குறிப்பிட்டுள்ளார்.