கூடற்கலை

 கூடற்கலை

கூடற்கலை

ம்மில் பிரச்னை இல்லாதவர்களே இல்லை. உங்களுக்கு ஒரு பிரச்னை என்றால், எனக்கு வேறொன்று. அதன் அளவீடு, தன்மை ஆகியவை நாம் வாழும் முறைக்கேற்ப மாறுபடுமே தவிர, பிரச்னை இல்லாமலிருக்காது. அதிலிருந்து ஓரளவுக்குத் தப்பித்து, கொஞ்சமாவது நிம்மதியாக வாழ, அன்பு அவசியம். அன்பின் வடிவங்கள் பல. ஏன்… அது தாம்பத்ய உறவாகவும் இருக்கலாம். `தாம்பத்யத்தில் சரியாக இருப்பதும், அன்பு செலுத்துதல்தான்’ என்கிறது பாலியல் மருத்துவம்.

இரு இணைகளுக்கு இடையிலான உறவில் மகிழ்ச்சி நிலவுவதில் உடலுறவுக்கு முக்கியப் பங்கிருக்கிறது. இது தொடர்பாக பாலியல் மருத்துவர்கள் மேற்கொண்ட ஆய்வில், இரு காரணங்களைக் கண்டறிந்தார்கள்.

உறவு வலுப்பெற…

கணவன்/மனைவிக்கிடையே எந்தக் காரணத்துக்காகப் பிரச்னை ஏற்பட்டிருந்தாலும், அதைத் தவிர்த்துவிட்டு நல்ல உறவு பேணப்பட வேண்டும் என்பதற்காகக் கொள்ளும் உடலுறவு. இவர், இந்த உறவின் மூலம் தன் இணையிடம் நெருக்கத்தை அதிகரிக்க விரும்புபவர்.

மோதலைத் தவிர்க்க…

தினசரி வாழ்கையில் எதிர்மறையான விளைவுகளைத் தவிர்க்கவும், சண்டை, ஏமாற்றத்தைத் தவிர்க்கவும் வைத்துக்கொள்ளப்படும் உடலுறவு. அதே நேரத்தில் இத்தகைய உடலுறவுகொள்ளும் நபர்களின் ஆசை மற்றும் திருப்தி, அவரின் இணைக்குக் கிடைப்பதில்லை என்றும், இது தொடரும் பட்சத்தில் கட்டாயத்தின்பேரில் இணங்குபவருக்கு நாளடைவில் பாலுறவுமீது வெறுப்பும், அது குறித்த எதிர்மறை எண்ணங்களுமே ஏற்படும் என்பதும் ஆய்வில் தெரியவந்திருக்கிறது. சண்டையில்லாமல், சராசரியாக வாழும் தம்பதியர்களிடம் நடத்தப்பட்ட ஆய்விலும், இதே முடிவுகள் வெளியாகின.

`சரி… ஒருவருக்கு பூரண திருப்தியும், மற்றொருவருக்கு அத்தகைய சந்தோஷமும் கிடைக்காததால் உடலுறவுகொள்ளாமலேயே இருப்பது நல்லதா?’ இதற்கும் விடை சொல்கிறது அந்த ஆய்வு. தம்பதியினர் உடலுறவுகொள்ளாத நாள்களுடன் ஒப்பிடுகையில், என்ன காரணங்களுக்காக உறவுகொண்டிருந்தாலும், கொஞ்சமாவது அவர்கள் திருப்தி பெற்றார்கள் என்பதை அவர்களால் மறுக்க இயலவில்லை.

அன்பு செலுத்த கால நேரம் தேவையில்லை. அதைப்போல, உங்கள் தாம்பத்ய அன்பைச் செலுத்தவும் எந்த நிபந்தனைகளும் தேவையில்லை. அதே நேரத்தில், இணையால் உங்களுடன் உடல், மனரீதியாக கொஞ்சம்கூட இணங்க முடியாது என்ற சூழலில் அவர்களுடன் பலவந்தமாக உறவுகொள்ளக் கூடாது என்பதையும் நினைவில்கொள்ள வேண்டும். அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்வதும், அதை ஏற்றுக்கொண்டு செயல்படுவதும் முக்கியம்.

தங்கள் தேவைகளை பரஸ்பரம் புரிந்துகொள்வதும் அவற்றை நிறைவேற்றிக்கொள்வதும், கல்யாணமாகி 50 ஆண்டுகள் ஆனாலும் தினம் தினம் தேனிலவுக் காலமாகவே அமைய உதவும் என்பதே பாலியல் மருத்துவர்கள் கண்டறிந்த உண்மை.

செக்ஸ் நல்லது!

  • வாரத்துக்கு மூன்று முறை அல்லது அதற்கும் அதிகமாக செக்ஸ் வைத்துக்கொள்பவர்களுக்கு ஹார்ட் அட்டாக் மற்றும் பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகள் 50 சதவிகிதம் குறைகின்றன.

  • செக்ஸின்போது உற்பத்தியாகும் புரோலாக்டின் ஹார்மோன், முன் மூளையில், ஸ்டெம் செல்கள் மூலம் புதிய நரம்புகள் உற்பத்தியாகத் தூண்டுகின்றன.

  • ஒரு முறை செக்ஸ் வைத்துகொள்வதால் 200 கலோரிகள் உடலில் எரிக்கப்படுகின்றன. இது 15 நிமிடங்கள் ஓடுவதற்குச் சமம்.

  • தூக்கமின்மையைத் தவிர்ப்பதிலும் செக்ஸுக்கு முக்கியப் பங்குண்டு. திருப்தியான உடலுறவில் ஈடுபட்ட பிறகு நல்ல உறக்கம் நிச்சயம்.

  • தொடர்ச்சியாக ஆரோக்கியமான செக்ஸில் ஈடுபடுபவர்களுக்கு ஹார்மோன் (Dehydroepiandrosterone) குறைபாட்டால் உண்டாகும் முடி வளர்ச்சி, பார்வை தொடர்பான குறைபாடுகள் ஏற்படாது.

  • முழுமையான செக்ஸ், பெண்களின் கர்ப்பப்பையை பலப்படுத்தும். ஆண்களின் தசை மற்றும் எலும்புகளை வலுவாக்கும்

 

அரசுத்துறை ஒன்றில் பணியாற்றும் பெண் அவர். அவருக்கும் கணவருக்கும் அடிக்கடி பிரச்னை ஏற்படும். இருவருக்கும் 11 வயது வித்தியாசம் வேறு. தொடக்கத்தில் நன்றாகப் போய்க்கொண்டிருந்த அவர்களின் இல்லற வாழ்க்கை, கணவர் வேலையை விட்ட பிறகு முழுதாக மாறிப்போனது. அந்தப் பெண்ணுக்கு அரசுப் பணி கிடைத்துவிட, அவருக்கு வெளியுலகம் தெரிய ஆரம்பித்தது. குடும்பப் பொறுப்புகள் முழுவதும் அவரின் நிர்வாகத்துக்குள் வர, கணவர் கிட்டத்தட்ட டம்மியாகிப்போனார்.

இருவருக்குமிடையே அன்பு என்பது சுத்தமாக இல்லாமலேயே போனது. இங்குதான் அந்தத் திருப்பம் நிகழ்ந்தது. அவர்களின் முதல் பையனுக்கு 10 வயதானபோது, மீண்டும் கருவுற்றார் அந்தப் பெண். முதல் பிள்ளைக்கும் அடுத்த பிள்ளைக்கும் நடுவே 11 வயது வித்தியாசம். நித்தம் சண்டை… இருந்தும் அவர்களிடையே தாம்பத்ய உறவு மட்டும் தொடர்ந்திருக்கிறது. அதாவது, பகலெல்லாம் சண்டை; இரவில் படுக்கையறையில் மட்டும் சமாதானம்.

ஒரு முறை கவுன்சலிங்குக்கு வந்தபோது, “டாக்டர்… என் கணவரின் செயல்பாடுகள் வெறுப்பைத் தருகின்றன. அதனால் கோபம் வந்து, சண்டையில் முடிகிறது. ஆனால், இரவில் தாம்பத்யத்தைத் தவிர்க்க முடியவில்லை. முன்னெச்சரிக்கையாக இருந்தாலும், அந்த நேரத்தில் மட்டும் என்னை அவர் சரிக்கட்டிவிடுகிறார். வீட்டிலும் அலுவலகத்திலும் எத்தனையோ பிரச்னைகளை லாகவமாகக் கையாளும் என்னால், இதில் மட்டும் ஜெயிக்கவே முடியவில்லை என்பது எனக்கே ஆச்சர்யமாக இருக்கிறது’’ என்றார் அந்தப் பெண்.

இதுதான், செக்ஸின் ஆகப்பெரிய பலம். நீங்கள் மனதிடம் உடையவராக இருந்தாலும், கட்டுப்பாட்டோடு இருக்கப் பழகியவராக இருந்தாலும், பல நாள்கள் சாப்பிடாமலேயே தாக்குப்பிடிக்கக்கூடியவர் என்றாலும் சில இயற்கை உபாதைகளைத் தவிர்க்கவே முடியாது. மல ஜலம் கழிக்காமல் எப்படி ஒரு நாளைக் கடத்த முடியாதோ, அதைப்போலத்தான் தாம்பத்யமும். என்ன… சில நாள்களுக்கு அதிகமாக உறவுகொள்ளாமல் தாக்குப் பிடிக்கலாமே தவிர, காலத்துக்கும் அதைத் தொடர முடியாது. சில வைராக்கியமான மனிதர்களுக்கு மட்டுமே அது சாத்தியமாகலாம்

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...