நீட் எதிர்ப்பு கையெழுத்து இயக்கத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு..! | சதீஸ்
நீட் எதிர்ப்பு கையெழுத்து இயக்கத்திற்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.
நீட் தேர்வால் 22 மாணவர்கள் இதுவரையில் உயிரிழந்த நிலையில் நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி ’நீட் விலக்கு – நம் இலக்கு’ என்ற கையெழுத்து இயக்கத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு முழுவதும் 50 லட்சம் கையெழுத்துகளை, 50 நாட்களில் பெற வேண்டும் என்பது இதன் குறிக்கோளாக இருந்த நிலையில், திட்டம் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மேலும் வாங்கப்பட்டுள்ள 50லட்சம் கையெழுத்துக்களை விரைவில் தமிழ்நாடு அரசு தரப்பில் குடியரசு தலைவரிடம் ஒப்படைக்க உள்ளது.
நீட் கையெழுத்து இயக்கத்திற்கு எதிராக தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவர் தொடர்ந்த ரிட் மனுவானது உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் சார்பில் கூறியதாவது:
“மனுதாரர் தரப்பிதல் நீட் தேர்வு தொடர்பாக மத்திய அரசு இயற்றிய சட்டத்தை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. ஆனால் அதற்கு எதிராக மாநில அமைச்சர் போராட்டம் அறிவிக்க முடியாது.
கையெழுத்து இயக்கம் தொடர்பாக அரசு எந்த அறிவிப்பும் வெளியிடாத நிலையில், இதை அரசின் கொள்கையாக கருத முடியாது. குறிப்பாக நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கம் பள்ளிகளில் நடத்தப்படுகிறது. இதனால் மாணவர்கள் நிர்பந்தம் செய்யப்படுகிறார்கள்.
இதனால் நீட் தேர்வுக்கு தயாராக வேண்டாம் என்ற எண்ணம் மாணவர்கள் மனதில் ஏற்படும். படிப்பில் இருந்து மாணவர்களின் கவனம் திசை திரும்பும். அதனால் பள்ளிகளில் கையெழுத்து இயக்கம் நடத்த அனுமதிக்க கூடாது அதற்கு தடை விதிக்க வேண்டும்.மேலும் இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் ஒரு சரியான வழிகாட்டு நெறிமுறைகளைவகுக்க வேண்டும்” என தெரிவித்தனர்.
ஆனால், அந்த வாதங்களை ஏற்காத நீதிபதிகள்; “கையெழுத்து இயக்கத்தை மக்கள் ஏற்கிறார்கள் என்றால் அதனை எப்படி தடுக்க முடியும்? குறிப்பாக இந்த காலக்கட்டத்தில் இருக்கும் மாணவர்கள் சிறந்த அறிவாளிகள். அவர்களுக்கு அனைத்தும் தெரியும். நாம் எதனையும் குறிப்பிட்டு தெரிவிக்க வேண்டிய அவசியமில்லை” என கூறினர்.
மேலும், இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் தலையிட விரும்பவில்லை என தெரிவித்த, நீதிபதிகள் சூர்யகாந்த் மற்றும் கே.வி.விஸ்வநாதன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.