மாதந்தோறும் பெண்களுக்கு ரூ.8,500, 10 கிலோ இலவச ரேஷன் ராகுல்காந்தி வாக்குறுதி..!
“இந்தியா” கூட்டணி ஆட்சி அமைத்தால் ஏழைகளுக்கு மாதம் 10 கிலோ உணவு தானியங்கள் இலவசமாக ரேஷனில் வழங்குவோம் என மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி வாக்குறுதி அளித்துள்ளார்.
லோக்சபா தேர்தல் பிரசாரத்தில், இந்தியா கூட்டணிதான் மத்தியில் ஆட்சி அமைக்கும்; இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்த உடன் என்னவெல்லாம் திட்டங்கள் உடனடியாக செயல்படுத்தப்படும் என பட்டியலிட்டு வருகிறார் ராகுல் காந்தி. சமூக வலைதளங்களிலும் இதனை பகிர்ந்து வருகிறார் ராகுல் காந்தி.
இது தொடர்பாக ராகுல் காந்தி தெரிவிக்கையில், உங்கள் ஒரு வாக்கின் வலிமையை புரிந்து கொள்ளுங்கள்! உங்கள் ஒரு வாக்கு நாடு முழுவதும் நடக்கும் பயங்கரமான பாகுபாடு மற்றும் அநீதியை ஒழிக்கும். 30 லட்சம் அரசுப் பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு செயல்முறை ஆகஸ்ட் 15-ஆம் தேதிக்குள் தொடங்க வைக்கும்.
உங்கள் ஒரு வாக்கு ஜூலை 1 முதல் ரூ 8,500/மாதம் ஏழைப் பெண்களின் கணக்குகளுக்கு உடனடியாக மாற்ற உதவும். உங்கள் ஒரு வாக்கு இளைஞர்களுக்கு அவர்களின் முதல் வேலையான ரூ. 1 லட்சம்/ஆண்டுக்கு வழங்கும்.
உங்கள் ஒரு வாக்கு உரிமைகளை வழங்கும். உங்களது ஒரு வாக்கு அரசியலமைப்பை பாதுகாக்கும். உங்கள் அரசாங்கத்தைத் தேர்ந்தெடுக்கும் உரிமையைப் பாதுகாக்கும். ஜனநாயகத்தைக் காப்பாற்றும். உங்கள் ஒரு வாக்கு தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைகள், பங்கேற்பு மற்றும் இடஒதுக்கீட்டுக்கு வழி வகுக்கும்.
உங்கள் ஒரு வாக்கு பழங்குடியினரின் நீர், காடு மற்றும் நிலத்தின் மீதான உரிமையை நிலைநாட்டும். இந்தியாவுக்கான உங்கள் ஒவ்வொரு வாக்கும் வலுவான ஜனநாயகத்தையு ம், அதிகாரம் பெற்ற குடிமக்களையும் உருவாக்கும் என தெரிவித்திருந்தார்.
தற்போது புதிய வாக்குறுதிகளையும் ராகுல் காந்தி வழங்கி இருக்கிறார். இது குறித்து ராகுல் காந்தி தெரிவித்துள்ளதாவது: நாட்டின் ஏழைக் குடும்பங்களுக்காக காங்கிரஸ் மற்றொரு பெரிய முடிவை எடுத்துள்ளது. எங்கள் அரசாங்கம் உங்களுக்கு ஒவ்வொரு மாதமும் 5 கிலோ அல்ல, 10 கிலோ ரேஷன் இலவசமாக தரும். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சிக் காலத்தில், உணவுப் பாதுகாப்புச் சட்டம் மூலம் உணவு உரிமைக்கு சட்டப்பூர்வ அந்தஸ்து வழங்கியிருந்தோம். இதன் அடுத்த கட்டமாக 10 கிலோ தானியம் வழங்கப்படும்.
10 கிலோ ரேஷன் மற்றும் மாதம் 8500 ரூபாய், கல்வி மற்றும் சுயதொழில் ஊக்குவிப்பு தொகை ஆகியவற்றால் லட்ச்கணக்கான கணக்கான குடும்பங்கள் வறுமையிலிருந்து விடுபட்டு நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தும்.
நரேந்திர மோடி 20-25 கோடீஸ்வரர்களை உருவாக்கி ‘அதானி’ அரசை நடத்தினார், கோடிக்கணக்கான லட்சபதிகளை உருவாக்கி ‘இந்தியர்களின்’ அரசை நாங்கள் நடத்துவோம். இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.