புதிய பாதுகாப்பு வசதிகளுடன் முதல்வரின் புது கான்வாய் வாகனங்கள் | சதீஸ்
முதலமைச்சரின் கான்வாய் வாகனங்களாக ஆறு புதிய கருப்பு இன்னோவோ கார்கள் வாங்கப்பட்டுள்ளது. புதிய பாதுகாப்பு வாகனங்களில் என்னென்ன வசதிகள் இடம் பெற்றுள்ளன என்பதையும், அந்த கார் வாங்கி பின்னர் முதல்வர் ஸ்டாலின் செய்த விஷயம் பற்றியும் பார்ப்போம்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் எங்கு சென்றாலும் பலத்த போலீஸ் பாதுகாப்பும், கமாண்டோ பாதுகாப்பும் வழங்கப்படும். முதல்வர் ஸ்டாலின் விரைவாகவும், பாதுகாப்பாகவும் செல்வதற்காக அவரது வாகனத்தின் முன்பும் பின்பும் கான்வாய் எனப்படும் பாதுகாப்பு வாகனங்கள் செல்வது வழக்கமான நடைமுறையாகும். பாதுகாப்பு காரணங்களுக்காக கான்வாய் வாகனங்கள் செல்கின்றன.
இதற்காக முதல்வருடன் குண்டு துளைக்காத ஜாமர் கார், இணைய வழியிலான ஆபத்துகள் இருந்தால் துண்டிக்கத் தொழில்நுட்ப வசதி கொண்ட ஒரு கார், அட்வான்ஸ் பைலட், அட்வான்ஸ் டிசி உள்ளிட்ட கார்கள் ஆகியவை வழக்கமாக இடம் பெறும். அதேபோல் டி.எஸ்.பி அந்தஸ்தில் உள்ள அதிகாரி முதலமைச்சரின் காருக்கு முன்னதாக சென்று அங்கு சரியான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா எனக் கண்காணிப்பார். இது தினசரி அவர் வெளியில் செல்லும் போது எல்லாம் நடக்கும் நடைமுறையாகும்.
பாதுகாப்பு வாகனங்கள் சூழவே, முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆழ்வார்ப்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து நாள்தோறும் கோட்டையில் உளள தலைமைச் செயலகத்திற்கு சென்று வருகிறார். முதல்வர் ஸ்டாலின் செல்லும் சமயத்தில் அப்பகுதியில் போக்குவரத்து சில நிமிடங்கள் மட்டும் நிறுத்தப்பட்டு, சென்ற பிறகு மீண்டும் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்படும்.
இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் பாதுகாப்புக்காக கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய புதிய கருப்பு இன்னோவா கார்கள் வாங்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் வாகனங்கள் ஏற்கனவே வெள்ளை நிறத்தில் இருந்த நிலையில் தற்போது 6 கருப்பு நிற இன்னோவா கார்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்த புதிய வாகனங்களில் முதல்வர் ஸ்டாலினின் பாதுகாப்புக்காக கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் இருக்கின்றன.
முதல்வரின் புதிய கருப்பு நிற பாதுகாப்பு கார்களில் 3 கண்காணிப்பு கேமராக்கள் உள்ளன. காரின் மேல் பகுதியில் இருந்து அனைத்து நிகழ்வுகளையும் படமாக்கும் வகையில் இந்த கேமரா பொருத்தப்படிருக்கிறது. மேலும் முதல்வர் ஸ்டாலின் வெளியே செல்லும் போது, பாதுகாப்பு வீரர்கள் வெளியில் இருந்தவாறே கார்களில் நிற்கும் வகையில் இந்த கார்கள் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
மற்ற வாகனங்களை போல் இல்லாமல் தனித்து தெரியும் வகையில் கார்கள் மாற்றப்பட்டுள்ளது. இந்த புதிய கார்களின் புத்தாண்டு தினமான இன்று முதல் செயல்பாட்டுக்கு வந்திருக்கிறது. முதல்வர் ஸ்டாலின் தனது ஆழ்வார்பேட்டை சித்தரஞ்சன் சாலை இல்லத்தில் இருந்து தனது தயார் தயாளு அம்மாளிடம் புத்தாண்டு வாழ்த்து பெற கோபாலபுரம் சென்றார். அப்போது புதிய இந்த கார்கள் தான் கான்வாய் வாகனங்களாக வந்தன.