தேமுதிக தலைவர் விஜயகாந்த் காலமானார்..!
தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருதாக இன்று காலை மருத்துவ அறிக்கை வெளியிடப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார்.
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் அவர்கள் முன்னதாக நவம்பர் மாதத்தில் உடல்நிலை மோசமடைந்ததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரால் சரியாக மூச்சுவிட முடியாததால் செயற்கை சுவாசம் அளிக்கப்பட வேண்டியிருந்தது.
அப்போது மியாட் மருத்துமனை ஒரு அறிக்கையை வெளியிட்டது. அதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விஜயகாந்த்தின் உடல்நிலை ஆரம்பத்தில் பெரிய முன்னேற்றம் காட்டுவதாக கூறினார். ஆனால் போக போக உடல்நிலை சற்று மோசமடைந்தது. இருப்பினும் அவர் பூரண குணமடைவார் என்று நம்பிக்கையுடன் இருப்பதாக தெரிவித்தனர். இருந்தாலும் இன்னும் 14 நாட்கள் இவர் மருத்துவமனையில் இருக்க வேண்டியிருக்கும் என்று மருத்துவமனை அறிக்கையை வெளியிட்டிருந்தது.
இந்நிலையில் சமீபத்தில் விஜயகாந்த் அவர்கள் பூரண குணமடைந்து வீட்டிற்கு வந்தடைந்தார். ஆனால் நேற்று இரவு அவரது உடல்நிலை சற்று மோசமான நிலையில் இருந்துள்ளது. இன்று அதிகாலை விஜயகாந்த் அவர்கள் மீண்டும் மியாட் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
அப்போது பரிசோதனை செய்யும் போது அவருக்கு கோவிட்-19 தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. ஏற்கனவே இவரது நுரையீரல் பலவீனமாக இருந்துள்ள நிலையில், கோவிட் தொற்றினால், நுரையீரலில் கடுமையான அழற்சி ஏற்பட்டு, செயற்கை சுவாசம் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி விஜயகாந்த் அவர்கள் காலமானார்.
விஜயகாந்த் அவர்கள் ஏற்கனவே 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கோவிட் முதல் அலையின் போது கொரோனாவால் பாதிக்கப்பட்டு, சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.