குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு..! | சதீஸ்

 குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு..! | சதீஸ்

தென்காசி மாவட்டத்தின் பல இடங்களில் நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலம் மெயினருவி, பழைய குற்றால அருவி, ஐந்தருவி உள்பட அனைத்து இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் மக்கள் குளிக்க தடை போடப்பட்டுள்ளது. மேலும் அருவிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும் வீடியோ வெளியாகி உள்ளது.

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. கடந்த 3 மற்றும் 4ம் தேதிகளில் வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின.

தற்போது அங்கு மழை குறைந்துள்ள நிலையில் மக்கள் வெள்ளப்பாதிப்பில் இருந்து மீண்டு வருகின்றன. இந்நிலையில் தான் தற்போது தமிழ்நாட்டில் தென்மாவட்டங்களில் கனமழை பெய்யும் என ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

அதாவது தெற்கு இலங்கை கடற்கரை பகுதியையொட்டிய வங்கக்கடலில் பகுதிகளில் மேல்நிலவும் வளிமண்ட கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் தென்மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வடதமிழகத்தில் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

அதன்படி நேற்று இரவு முதல் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதற்கிடையே தான் இன்று தென்மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதாவது திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்று இரவு தொடங்கிய மழை தற்போது வரை தொடர்ந்து பெய்து வருகிறது.

இத்தகயை சூழலில் தான் தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கமாக அதிகமான மக்கள் குற்றால அருவிகளுக்கு செல்வார்கள். அதேபோல் இப்போது சபரிமலை சீசன் உள்ளதால் ஏராளமான வெளியூர் பக்தர்களும் குற்றால அருவிகளில் நீராடி மகிழ்வார்கள். இன்று காலையில் குற்றால அருவிகளில் மக்கள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். ஆனால் தொடர்ந்து பெய்து வரும் மழையால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதையடுத்து அருவிகளில் மக்கள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. தற்போதைய சூழலில் குற்றால மெயினருவியில் பேரிரைச்சலுடன் ஆர்ச்சை தாண்டி தண்ணீர் ஆக்ரோஷமாக கொட்டுகிறது. அதேபோல் பழைய குற்றாலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் படிக்கட்டுகளில் தண்ணீர் ஆக்ரோஷமாக சீறிப்பாய்கிறது. மேலும் ஐந்தருவி உள்பட பிற அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிக்க மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...