கூட்டுக்குடும்பங்கள்

 கூட்டுக்குடும்பங்கள்

நம்மைத் தூக்கிச் சுமக்கும் ஊஞ்சலாய், இரைதேடிப் புறப்பட்ட பறவைகளுக்கு மரத்தடி நிழலின் சுகமாய், துரத்திவரும் இன்னலில் இளைப்பாரும் கூரையாய் நம்மை நேசக்கரம் கொண்டு அணைப்பது குடும்பம். தாழ்வாரத்தின் தணிந்த பகுதிகள் தழைத்திருந்த குடும்பங்களின் உன்னதத்தைப் பறைசாற்றியது போக காலம் மாறிட மாறிட தங்கள் கட்டமைப்புகளை மாற்றிக்கொண்டே வருகிறது குடும்ப அமைப்பு. தாத்தா பாட்டி அம்மா அப்பா சித்தி சித்தப்பா என உறவுகளின் உன்னதத்தையும் பாரம்பரியத்தையும் அலங்கரித்தன சுவர்கள் புகைப்படங்களாய் ! தனித்திருந்த திண்ணைகள் எல்லாம் வழிப்போக்கனைக் கூட உறவுகளின் வட்டத்தில் இணைத்திருக்கும்.

தாழ்வாரத்தின் தணிந்த பகுதிகள் தழைத்திருந்த குடும்பங்களின் உன்னதத்தைப் பறைசாற்றின ஆனால் இப்போது தீப்பெட்டியின் அடுக்குகளைப் போன்ற அடுக்குமாடி குடியிருப்புகளில் அடுத்த வீட்டில் இருப்பவர்கள் கூட அன்னியர்களாகிப் போன நிலையில், மூச்சுக்காற்று கூட வெளியே சென்றால் ஏதும் உதவிக்கு வந்துவிடுவார்களோ என்று கதவை இறுக்கச் சாத்திக்கொள்ளும் இன்றைய வீடுகள் எல்லாம் வெறும் செங்கலும் சிமிண்ட்டும் சேர்ந்த கலவைதான். பள்ளி முடித்து வரும் பிள்ளையை அரவணைத்து அமுதூட்டிடவும், பிஞ்சு மென்கரங்கள் கழுத்தைக் கட்டிக்கொண்டு இராஜாக்களையும் அவர்களின் வீரதீர பராக்கிரமங்களையும் கேட்டு ருசித்த காதுகளும் கைகளும் இன்று மொபைல் போனின் மென்திரைக்கு தங்கள் கண்களை அடமானம் வைத்திருக்கிறது. மெல்ல மெல்ல நசிந்த குடும்ப அமைப்பு இன்று இரண்டோடு ஒன்று ஆங்காங்கே வேர்விட்டிருக்கிறது. ஒருமுறை நண்பர் ஒருவர் வீட்டிற்கு விருந்திற்கு சென்றபோது வரவேற்பறையின் சுவற்றை அலங்கரித்து இருந்து ஒரு மரம் போன்ற ஓவியம் அதன் விழுதுகளும் வேர்களுமாய் அலங்கரித்து கொண்டிருந்தது அந்தக் குடும்பத்தின் அங்கத்தினர்கள்.

தன் உறவுகளை அறிந்து கொள்ளாமல் யார் இந்த ஓல்டு லேடி என்று பிள்ளைகள் கேட்கும் அளவிற்கு உள்ள சமூகத்தில் இந்த ஓவியம் மனநிறைவினைத் தந்தது. நின்று நம் பாராம்பரியத்தை சொல்லிக்கொடுக்க யாருக்கும் நேரமில்லை, ஒரு திருமணம் நிச்சயமாகிறது வெற்றிலைபாக்கு சகிதம் தாம்பூலம் கொடுத்து பிள்ளைகளோடு வந்துவிடுங்கள் என்று அழைப்பும் அதில் கிடைக்கும் பெருமித சுகமும் மறுவிப்போய், வாட்ஸ்அப்பில் ஒரு வீடியோ என் திருமணத்திற்கு வந்துவிடுங்கள் என்று சுருக்கமாய் தெரிவித்து விடும் கலாச்சாரம். வார்த்தைகள் மட்டும் சுருங்கிப்போய்விடவில்லை நம் வாழ்வின் முறைகளும் சுருங்கிப்போகிறது.

அது ஒரு திருமண விருந்து இலைகள் போடப்பட்டு பதார்த்தங்கள் பரிமாறிவிட்டு இருக்க, வந்திருந்த விருந்தினர்களை அரைமணிநேரம் கழித்துதான் விருந்து அறைக்கே அனுமதித்து இருக்கிறார்கள். 11.30க்குத்தான் மதிய இலை என்று சட்டம் வேறு காண்ட்டிராக்ட் நிறுவனம் வந்திருந்த உறவுகள் மனம் சுணங்கி சாப்பிடாமலேயே போக, திருமண விழா ஏற்பாட்டாளர்களோ அதை கவனிக்கவே இல்லை, அவர்களுக்கு செல்பிக்கும், புகைப்படத்திற்கும் செலவிடவே நேரம் போதவில்லையே. திருமண விருந்தில் மாமாவிற்கு பாயசம் பிடிக்கும் அண்ணாவிற்கு சாம்பாருக்கு நெய் சேர்க்கவேண்டும், மாமிக்கு இனிப்பு தரக்கூடாது என்று நினைவுகூர்ந்து நன்றாக சாப்பிட்டீர்களா ஏதாவது குறையிருந்ததா என்ற அக்கறை கேள்விகளை கடந்து காண்ட்டிராக்டர் வைக்கும் அளவுச்சாப்பாட்டில் நிறைந்து போகிறது வயிறு மட்டுமே மனம் இல்லை.

இருபாலரும் சம்பாதிக்கும் நிலை ஏறிவிட்ட விலைவாசியில் நாங்களே மூன்று வேளை சரியாக சாப்பிடஇயலவில்லை இதில் விருந்தோம்பலை எங்கிருந்து கவனிப்பது ?! வந்தவங்களை கவனிக்க வேண்டுமானாலும் சரி நான் இரண்டு நாட்கள் ஏதாவது வெளியூரில் விழாவிற்கு செல்லவேண்டுமானாலும் சரி கணிசமாக ஒரு தொகை செலவாகுமே ?! அதை எந்த கணக்கில் சரிக்கட்டுவது. பாக்கெட் நிறைய கிரெட் கார்ட்டுகளை சுமந்து கொண்ட ஒரு கடனாளியின் ஸ்டேட்மெண்ட் இது, அவரின் அண்ணன் மகளுக்கு சொந்த ஊரில் திருமணம் குடும்பத்தினரோடு வந்துவிடும்படி அழைப்பு என்றாலும், பொளாதாரத்தைக் கருத்தில் கொண்டு பிள்ளைகளை கூட்டிப்போகவில்லை என்னப்பா இப்படி கல்யாணம் திருவிழான்னு போனாத்தானே நம்ம பிள்ளைகளுக்கும் சொந்தபந்தம் யாருன்னு தெரியும்,அதைவிட்டு இப்படி அவங்களை எங்கேயும் கூட்டிப்போகலைன்னா எப்படின்னு கேட்டதற்குத்தான் இந்த பதில் !

இவர்கள் ஒரு ரகம் என்றால் நாம நாளைக்கு ஊருக்குப்போறோம் ஆனா அங்கே இண்டர்நெட் கிடையாது கேம்ஸ் விளையாட முடியாது கொஞ்சம் போரடிக்கும் என்று பிள்ளைகளுக்கு வரவேண்டும் என்று மறைமுகமாக சொல்லித்தரும் பெற்றோாகளும் உண்டு.

பள்ளிவிடுமுறை தாத்தாபாட்டி வீட்டுக்கு ஊருக்கு அனுப்பலாமே என்று கேள்வி கேட்கும் போது, இங்கேயிருந்தா நாலு சம்மர் கிளாஸ் போகலாம் ஏதாவது கத்துக்கலாம், ஊருக்குப்போய் என்ன பண்ணப்போறா ? தெருவுக்கு நான்காக முளைத்திருக்கும் சம்மர் கேம்ப் ஈயடிக்கும் இடம் கூட இரண்டுமாதத்தில் வசூல்ராஜாதான். ஜாடியில் வைக்கப்பட்ட உணவுபொருள் கொஞ்ச நேரம் காத்தாறவிட்டு மறுபடியும் ஜாடிக்குள் அடைக்கப்படுவதைப் போல விடுமுறை முடிந்ததும் பள்ளிகள், டியூசன் சென்டர்கள் என அடைக்கப்பட்டு விடுகிறார்கள் இதிலெங்கெ உறவுகளைப் பற்றி அறிந்து கொள்ளப்போகிறார்கள்.

குடும்ப அமைப்புகளை நாம் காப்பாற்றுவது எப்படி ? இந்த கேள்விக்கு நண்பர் ஒருவர் அதையேன் காப்பாற்ற வேண்டும் என்று கேள்வியெழுப்பினார் ? இன்று நாம் சந்திக்கும் அநேக பிரச்சனைகளைத் தீர்க்கும் வல்லமை கூட்டுக்குடும்பம் என்ற அமைப்பிற்கு உண்டு. குடும்பங்களில் காட்டப்படும் எல்லா கோபங்களுக்குள்ளும் ஒருவித அன்பு ஒளிந்து கொண்டு இருக்கிறது. அதை சரி வர புரிந்து கொண்டாலே உறவுகளுக்குள் பிரச்சனைகள் வருவதில்லை. என் மருமகளுக்கும் பொண்டாட்டிக்கும் ஒத்துப்போகலை பேசாம பையனைத் தனிக் குடித்தனம் வைத்திடலான்னு இருக்கேன்னு ஒருத்தர் சொல்லிகிட்டு இருந்தார்.

ஒரு குழந்தை அதுவும் பெண் குழந்தையாக இருந்துவிட்டால் அது வளரும் காலகட்டத்திலேயே இத்தனை நேரம் தூங்கிகிட்டு இருக்கே ஒருவேலையும் உருப்படியா செய்யத் தெரியலை போற இடத்திலே மாமியார்காரி என்னை இல்லை குறைசொல்லுவா பேச்சுவழக்கில் இந்த வார்த்தைகள் இருந்தாலும் மாமியார் என்பவர் ஒரு கொடுமைக்காரி என்பதை பெண் பிள்ளைகள் மனதில் விதைத்து விடுகிறார்கள். இதில் கல்யாணம் நடந்து விட்டதும் எனக்கென்னவோ அந்தம்மா கொஞ்சம் கட்டு செட்டியா தெரியுது முதல்லேயே விட்டுக்கொடுத்திடாதே என்று அட்வைஸ், இந்தப்பக்கம் இங்க பாரும்மா பொண்ணு நல்லாயிருக்கா ஆனா முதல்லேயே உன் பவரை காட்டிடு இல்லைன்னா உன்னை நாளைக்கு சோத்துக்கு சிங்கி அடிக்கவைச்சிடுவா இப்படி இரண்டு பக்கம் ஏற்றப்படும் உருக்கள் தான் மாமியார்-மருமகள் என்ற ஒரு நட்பு ரீதியான உறவை வெட்டிவிடுகிறது. இதில் நம் ஊர் சீரியல்களும் அடக்கம்.

மணமாகிவந்த பெண்ணை மகனுடன் சேரவிடாமல் செய்வது, பிள்ளை உண்டாகி இருக்கும் மருமகளின் கருவை எப்படி கலைப்பது, எப்படி கொலை செய்வது என்பதையெல்லாம் விலாவரியாக சொல்லித்தரும் சீரியல்கள். அத்தனை மோசமாகவா நம் உறவுகள் இருக்கிறது. எதார்த்தத்தை சொல்கிறேன் என்ற பெயரில் குடும்ப உறவுகளில் இவர்கள் திணிக்கும் வக்கிரங்களும், வன்முறைகளும் பார்க்கும் பெண்களின் மனதிலும் ஆழமாய் பதிந்துதான் போகிறது இதைப்பற்றிய நீண்ட ஒரு விவாதமே நடத்தலாம். ஏதோ ஒரு காரணத்தினால் விலகிப்போகும் அந்த உறவுகள் நிரந்தரமாக விலகிவிடுகிறது குடும்பம் கணவன் மனைவி குழந்தை என்று சுருங்கிப்போகிறது. இருபாலரும் பணிக்கு செல்லும்போது அந்தக் குழந்தை தனிமையில் வாடி யாரோ ஒரு ராட்சசனின் பிடியில் சிக்கிவிடுகிறது. வசதி பண்ணித்தர்றேன்னு சில பெற்றோர்கள் தாங்கள் பிள்ளைகளோடு செலவிட முடியாத நேரத்திற்காக வாங்கித்தரும் காஸ்ட்லியான பொருட்களால் எத்தனை பிள்ளைகள் சீரழிகிறார்கள், போர்வைக்குள் வெளிப்படும் வெளிச்சம் அந்த பிள்ளையின் வாழ்வையே இருட்டாக்கிவிடுகிறதே ?!

சமீபத்தில் ஒரு திருமணத் தகவல் மையத்திற்கு ஒரு பெண்ணின் தாயார் தன் பெண்ணிற்கு மாப்பிள்ளை பார்க்க சொல்லியிருந்தார். கொஞ்சம் வசதியான குடும்பம் கிட்டத்தட்ட ஜாதகம் பொருந்தியிருந்த நிலையில் பையனைப் பற்றி விசாரிப்பு மாப்பிள்ளைக்கு கட்டாயம் கார் ஓட்டதெரியணும், எங்க குடும்பத்திலே வாரத்திற்கு இரண்டு தடவை சினிமா, மால்ன்னு போவோம் முகம் சுளிக்காம கூட்டிட்ப்போனும். வீட்டு வேலைக்கு ஆள்தேவை என் பொண்ணுக்கு சமைக்கத் தெரியாது. அவங்க கேக்குறே டெளரியை விடவும் அதிகமாகவே கொடுத்திடறோம் பையனும் பொண்ணும் வெளியே போனா பார்க்க பொருத்தமா இருக்கணும். சொந்தமா வீடும் கொஞ்சம் பேங்க் பேலன்ஸ் இருக்கணும் பிக்கல் பிடுங்கல் இல்லாத குடும்பமா பாருங்க. கல்யாணத்திற்கு அப்பறம் தனிக்குடித்தனம் தான் கட்டாயம் அதையும் முதல்லேயே சொல்லிடுங்க ஒரு வரியில் கூட பையனுக்கு எந்தக் கெட்டப்பழக்கமும் இருக்கக்கூடாதுன்னு அந்தம்மா கேட்கலை, வெறும் ஆடம்பரம் மட்டும்தானா வாழ்க்கை.

அப்படியென்ன சிக்கல்கள் இந்த கூட்டுக் குடும்பங்களில் வந்துவிடப்போகிறது ? கூட்டுக்குடும்பமா இருக்கு நாளைக்கு நல்லது கெட்டதுக்கு பையன்கிட்டேதானே வருவாங்க ஒண்ணா வாழ்ந்த நமக்குன்னு ஏதும் சேர்த்து வைக்கமுடியாது, எல்லாருக்கும் பதில் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும், நினைத்ததை செய்ய முடியாது. இப்படி தான் தன் சுகம் என்னும் சுயநல வலைக்குள் மாட்டிக்கொள்கிறார்கள் இன்றைய இளைய தலைமுறையினர்அதை தவறு என்று சுட்டிக்காட்டிடவும் பெற்றோர்கள் விரும்புவதில்லை என்பது வருத்தமே.

ஒரு குடும்பத்தை திறம்பட கட்டிக்காக்கும் நிர்வாகவியலை அன்றைய குடும்பத்தலைவிகள் எந்தப் பட்டப்படிப்பும் இல்லாமலேயே கற்றுக்கொண்டார்கள். சிரமங்கள் இருந்தாலும் இன்றைய நிலைபோல் கடன் அட்டைகளின் பிடியில் வருவாய்க்கு மேல் கடனை சுமக்கும் பொதிநிலையில் அவர்கள் இருக்கவில்லை, அவர்களின் சேமிப்புகளை கடுகுடப்பாக்கள் சுமந்திருந்தன. இன்று சேமிப்பு என்ற வார்த்தைக்கு அர்த்தமே மறந்துபோய்விட்டது. தான் தன் சுகம் பெரிதென்று எண்ணாமல் தன் குடும்ப உறவுகளுக்காக எல்லாவற்றையும் விட்டுக்கொடுத்து வாழ்ந்த அந்த வாழ்க்கை அந்த கால விசு படங்களில் மட்டும்தான் பார்க்கலாம். தன்னிடம் உள்ள கடைசி சேமிப்பில் வாங்கிவரும் இனிப்பை மனைவிக்கு தனியா எடுத்துவைப்பார் விசு ஆனால் அந்த உணவை பாட்டி என்னும் பட்டமேற்று இருக்கும் அந்தம்மாள் பேரப்பிள்ளைகளுக்கு பகிர்ந்தளிக்க கோபம் கொண்ட கணவர் விசுவிடம் என்னுடைய உரிமையை நான்தான் சுமந்திருக்கிறேன், வெறும் உணவை மட்டும்தான் விட்டுக்கொடுத்து இருக்கிறேன் என்று சொல்லுவார். இன்று விட்டுக்கொடுப்பதும் புன்னகைப்பதும் யார் என்பதுதான் நம்முன் தேங்கிநிற்கும் கேள்வி. நாம் இழந்து வரும் பண்பாடுகளில் முக்கியமானவைகளில் கூட்டுக்குடும்பமும் ஒன்று.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...