அவர்கள் இவர்கள் நான் – 2வதுஅத்தியாயம்
அவர்கள் இவர்கள் நான் – 2வதுஅத்தியாயம்
அன்றைக்கு ஆடலங்கரம் ! மாறுபட்ட தோற்றத்தை வருவித்துக் கொண்டிருந்தது அரங்கம். நிலவை வரவேற்க வானம் மேகக் கண்ணாடியின் முன்னின்று தன்னழகை மெருகேற்றுவது போல, கடற்கரையோரம் தேவதை போல நடைபயிலும் வஞ்சியைக் கவர, கடற்காதலன் அலை என்ற இமை அசைத்து தன்னிருப்பை உணர்த்துவது போல, ஆடலரங்கம் யாரையோ கவர, அழகாய் நின்று தன் இருப்பைக் காட்டிக் கொண்டிருந்தது.
எதிரி நாட்டு மன்னனுடன் போர் தொடுத்து, படையைத் தீர்த்தால் புறமுதுகுக் காட்டி ஓடச் செய்து, அவன் கையில் இருந்த அழகுமிக்க வெண் கொற்றக் குடையை வென்று வந்த சேரமன்னன், ஆடலரங்கத்திற்கு வெண் கொற்றக் குடையின் காம்பினைத் தலைக்கோலாக அனுப்பினான்.
புண்ணிய ஆற்றுநீரில், தலைக்கோல் நீராட்டப்பட்டு, விதவிதமான நறுமண மலர்களாலும் விலையுயர்ந்த கற்களாலும் அலங்கரிக்கப்பட்டு, தங்கத் தேரில் மலர்களின் தாலாட்டில் ஊர்க்கோலமாக ஆடலரங்கத்திற்குக் கொண்டு வரப்பட்டன. சேர நாட்டின் பெருங்கவிஞன் பெரும் பணிவுடன் எதிர்கொண்டு போய், தலைக்கோலைக் கையில் வாங்கி, ஆடல் நடைபெறும் மேடைக்கு எதிர்ப்புறம் கம்பீரமாக வைத்தான்.
பருவ மங்கையின் மேனியில் கொஞ்சி மகிழும் ஆடைகள், தென்றலின் தீண்டல் பட்டு கவர்ச்சிப் பக்கங்களாக உருமாறி, காண்பவர் கண்களின் கருப்பொருளாகிக் கொள்ளையடிப்பதைப் போல, தலைக்கோவில் இடம் பெற்றிருந்த நவரத்தினங்கள் அரங்கத்திலிருந்த அத்தனை பேரின் விழிகளையும் தன்னகத்தே ஈர்த்துக் கொண்டது.
பருவத்தின் வாசலில் நின்றிருந்த பூமகள் ஒருத்தி, ஆடற்க்கலையில் தனது அரங்கேற்றத்தை அபிநயமாக்க விரைந்து கொண்டிருந்தாள். மன்னன் முதல் குடிமக்கள் வரை அரங்கத்தில் இருக்கை போட்டனர். எல்லோர் விழிகளிலும் பரபரப்பு. அழகுத்தாய் பாலூட்டிய பைங்கிளியாளின் கால் அசைவில் பாவி மனது பறிபோய் விடக் கூடாதே ! என்ற தவிப்பு, ஆண்கள் தங்கள் மனதை எப்போது பறிகொடுப்பர் என்பது இன்றுவரை அறிய முடியாத சூத்திரம். ஆண்களின் பலவீனமும் அதுதான்.
ஒப்பனை அறை……! மயில் இறகின் மென்மையை மேனியில் கொண்டவளாக முல்லையும், மல்லியும் இணைந்து வாசனைத் தாலாட்டும் பூமகளாக நின்றிருந்த மாதவி, ஆடல் அரங்கேற்றத்திற்கு அணியமாகிக் கொண்டு இருந்தாள்.
தொடரும்