சென்னை மாநகரப் பேருந்து

 சென்னை மாநகரப் பேருந்து

சென்னை மாநகரப் பேருந்து

ஒரு வெள்ளிக்கிழமை காலை சென்னை மாநகரப் பேருந்து நிலையம் ஒன்றில் வரிசையாக குளுகுளு பேருந்துகள் மாலை போட்டு நிற்க வைக்கப்பட்டிருந்தது. மந்திரி ஒருவர் பேருந்துகளை நகருக்கு வழங்கினார்.

அங்கே நின்று கொண்டிருந்த மற்ற பேருந்துகள், புதியவற்றை பார்த்து நக்கலாக சிரித்துக் கொண்டிருந்தன. “முதல்நாளே மாலையை போட்டு சங்கு ஊதிட்டானுங்க.”

“அதை சொல்லு! உள்ளூர் ஆளான நாமளே இப்படி ஆகிட்டோம்.இவனுங்க எல்லாம் வெளியூர்லேருந்து வந்துருக்கானுங்க.ஒரு மாசம் கூட தாங்க மாட்டானுங்க.”

“நல்லதுதான். பாரு! இப்போவே அந்த பெரம்பூர்காரி அவனுங்களை எப்படி சைட் அடிக்கிறா.”

“சரி விடு! இன்னும் ஒரு வாரம் கழிச்சு பார்த்தாலே இவனுங்களை அடையாளம் தெரியாது.” மந்திரி வந்து சென்றதும், ஒவ்வொரு பேருந்திற்கும் வழித்தடமும்,நம்பரும் கொடுக்கப்பட்டது.

“என்ன செழியா ஏசி பஸ் டிரைவர் ஆகிட்டே.பெரிய ஆளு தான் போ.”

“அடபோங்கன்னே நீங்க வேற. இதுல கூட்டமும், பிகர் நடமாட்டமும் அதிகம் இருக்காது.வாழ்க்கையே வெறுத்து பூடும்.”

நமது நாயகன் 19B என்கிற பெயருடன், தன்னை சுற்றி உள்ளவர்களை பெருமையாக பார்த்தபடி நின்றிருந்தார்.மாலை மரியாதையுடன் தனது வாழ்க்கை பெருமையாக இருக்கப் போகிறது என்றெண்ணி புல்லரித்து போயிருந்தார்.

செழியன் அவனை சுற்றி வந்து உடலெங்கும் தடவிக் கொடுத்து, கதவை திறந்து கொண்டு உள்ளே ஏறினான்.வண்டியை ஸ்டார்ட் செய்து ஏசியை ஆன் செய்துவிட்டு, மெல்ல பேருந்து நிலையத்தை விட்டு வெளியே வந்து சிறிய வெள்ளோட்டம் விட்டான்.

தெருவில் போனவர்கள் எல்லாம் புதிய பேருந்தை கண்டு ஆச்சர்யமாகவும், ஆசையாகவும் பார்த்தார்கள்.அதை கண்ட எனக்கு பெருமையானது .குஷியாக வேகமெடுத்து ஓடினேன் .

முதல் இரண்டு நாட்கள் எந்தவித சேதாரமுமின்றி சென்றது.மூன்றாவது நாள் இரவு பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்துக்கு அருகில், இரு குடிகாரர்கள் தள்ளாடிக் கொண்டு நின்றிருந்தார்கள். 

ஒருவன் மற்றவனிடம் பேசிக் கொண்டே என்னைப் பார்த்தான்.  “இதுதான் ஏசி பஸ்ஸா?நல்லா தான் இருக்கு ஆனா நல்லால்ல”என்று தள்ளாடியபடி என்  மீது சாய்ந்தான்.  மற்றவன் காலை தூக்கி வேகமாக எட்டி உதைத்து “நம்மள ஏத்த மாட்டானுங்கடா இதில”என்றான்.

எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.அவன் உதைத்ததிலும், சாராய வாடையும் உடலை குலுங்க வைத்தது. அதை பார்த்த குடிகாரன் “இன்னாபா இது இந்த பஸ் ஆடுது” என்றான்.

“நம்மள மாதிரி அதுவும் சரக்கு போட்டுருக்கோ என்னவோ” என்று சத்தமாக சிரித்தான் இன்னொருவன்.

சிறிது நேரத்தில் அவன் வாந்தி எடுக்க,உடலெல்லாம் பட்டு தெளிக்க, அருவெறுப்பில் மீண்டும் என் மேனி குலுங்கியது. எனக்கு அவர்களது பேச்சை கேட்டு சுவற்றில் முட்டிக் கொள்ளலாம் போல இருந்தது. எங்கே கால்கள் தான் கட்டி போட்டிருந்ததே. எனது அவஸ்தையை கண் கொட்டாமல்  பார்த்துக் கொண்டிருந்தாள் S15.

“நீ இந்த ஊருக்கு  வந்து கொஞ்ச நாள் தான் ஆகுதில்லை.அதுதான் உனக்கு எல்லாம் கஷ்டமாயிருக்கு”என்றாள்.

அதிசயமாக அவளை விழியசைக்காமல் ரசனையுடன் பார்த்து “நீ ரொம்ப அழகாயிருக்கே. நீ இந்த ஊர் தானா?” என்றேன்.

அவளும் என்னுடய கலரை ரசித்து பார்த்து “நீங்க தான் அழகு. என்ன ஒரு ஸ்டைலா இருக்கீங்க”என்றாள் பிரம்மிப்பாக.

“ம்ம்…நீ குட்டியா இருந்தாலும் மனசை கவருகிற வகையில் இருக்க.”  எனது பேச்சில் வெட்கப்பட்டவள் “உங்களுக்கு எங்க ஊர் பிடிச்சிருக்கா?”

“ரொம்ப பிடிச்சிருக்கு. மக்கள் ரொம்ப இயல்பானவங்களா இருக்காங்க”.

எங்கள் இருவரின் அன்பும் நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டிருந்தது.எனக்கு ஒவ்வொரு நாள் பயணத்திலும் ஒவ்வொரு அனுபவம் ஏற்பட்டது. இப்படியே ஆறுமாதம் ஓடியிருந்தது.அன்று என் பஸ்ஸில் ஒரு சிறுவன் தந்தையுடன் ஏறினான்.அவனை பார்த்ததுமே ஏதோ மனதிற்குள் இனம் புரியாத வலி எழுந்தது. இவன் ஏதோ எனக்கு தீங்கு செய்யப் போகிறான் என்று நினைத்து.

சீரான வேகத்தில் ஓடிக் கொண்டிருந்த என்னுள் லேசான வலி எழுந்தது. அந்த சிறுவன் தன்னிடமிருந்த ஒரு பின் வைத்து என் சீட்டை ஓட்டை போட்டுக் கொண்டிருந்தான். ‘டேய்!ஏண்டா! உங்க வீட்டு சோபாவில போய் போட வேண்டியது தானே-டா.உங்க அப்பா இந்நேரம் முதுகு தோலை உரிச்சிருப்பார்’ என்று புலம்பிக் கொண்டு வலி தாங்க முடியாமல் குலுங்கி குலுங்கி நகராமல் நின்றேன்.


நான் நின்றவுடன் செழியன் இறங்கி சுற்றி வந்து டயரை பார்த்துவிட்டு “ஆறுமாசம் கூட ஆகல,அதுக்குள்ளே மக்கர் பண்ணுதே.என்ன மேக்கோ”என்று திட்டிக் கொண்டு சென்றான்.


அவன் சொன்னதை கேட்டு “டேய்! எங்க மேக் எல்லாம் சரியா தான் இருக்கு. உங்க மேக் தான்-டா சரியா இல்ல”என்று சீறினேன். வண்டியில் ஏறி ஸ்டார்ட் செய்தான்.நான் நகராமல் அடம்பிடிக்க, அவன் விடாமல் என்னை படுத்தி எடுக்க வேறுவழியில்லாமல் ஓட ஆரம்பித்தேன்.


மற்ற எல்லாவற்றையும் சமாளித்த எனக்கு வெயிலை மட்டும் சமாளிக்க இயலாமல் போனது.என்னுள் அமருபவர்களுக்கு நான் குளிர்வித்தாலும், வெளியில் சூடாகி நின்றேன்.என் உடம்பெல்லாம் தகிக்க ஆரம்பித்தது.மனமோ மிகவும் சோர்வடைந்து கொண்டே போனது.

பகலெல்லாம் சோர்வடைந்த மனதுக்கு இரவில் என்னுடயவளின் காதல் மொழிகள், என்னை உயிர்ப்புடன் வைத்திருந்தது.அவளை பார்க்கும் போதெல்லாம் என்னுடைய பெட்ரோல் டேன்க் முழுக்க நிறைப்பட்டது போல் உணர்வு தோன்றியது.என்னுடைய பாகங்கள் எல்லாம் கிரீஸ் போட்டு ஸ்மூத்தாக ஆனதாக தோன்றியது.இப்படி என்னுள் பல மாற்றங்கள்.வெளியிலும் என்னில் பல மாற்றங்கள்.இந்த வெயிலிலும், மழையிலும் ஓடி-ஓடி கால்கள் வலுவிழந்து போய் கொண்டிருந்தது.

அவளிடம் பேசிவிட்டு கிளம்பும் போது மகிழ்ச்சியில் என்னுடய பயணத்தை ரசிப்பேன்.நேரம் ஆக-ஆக சுருதி குறைந்து கொண்டே வரும். தெருவில் கிடக்கும் அசிங்கங்களை கண்டு ஒதுங்கி போக முயற்சிக்கும் என்னை புரிந்து கொள்ளவே மாட்டான் செழியன்.அதன் மீதே ஏற வைத்து, ஒவ்வொரு முறையும் என்னை அருவெறுப்படைய செய்வான்.


அன்று திருவான்மியூரில் ஒரு குடும்பம் ஏறியது.அடையார் வரும் வரை பேசிக் கொண்டு அமர்ந்திருந்தார்கள்.சிறிது நேரம் கழித்து, பெட்ரோல் டேங்கில் இருந்தவை எல்லாம் வெளியே வரும் அளவிற்கு ஒரு மணம் பரவியது.எனக்கு நெஞ்சடைத்து, கண்ணை கட்டியது.

செழியனுக்கும் அவ்வாறே இருந்திருக்க வேண்டும் “ஏய்!யாருப்பா அது? ஏசி பஸ்சுக்குள்ள பிரியாணி டப்பாவை திறந்தது?”என்று அதட்டினான்.


எனக்கு அதற்கு மேல் முடியாமல் ஒரு குலுக்கலுடன் நடு வழியிலேயே நின்று கொண்டேன்.செழியனோ நான் செய்த அழும்பில் கடுப்பாகி கீழே இறங்கி நின்று என்னை எட்டி உதைத்தான்.


“இந்த வண்டி சரியில்ல கந்தா.அடிக்கடி  மக்கர் பண்ணுது”என்றான். நெஞ்சடைத்ததில் என் கண், காது, மூக்கிலிருந்து புகைய ஆரம்பித்தது. அதை கண்டு பஸ்ஸிலிருந்த மக்கள் இறங்கி நின்று என்னை வேடிக்கை பார்க்க ஆரம்பித்தனர்.

கந்தனோ “செழியா வண்டி சூடாகிடுச்சு.டிக்கியை திறந்து விடு இல்லேன்னா ஓடாது. இனி, டிக்கியை திறந்து வச்சே ஒட்டு”என்றான். அதை கேட்டு அதிர்ச்சியும் வெட்கமும் அடைந்தேன். “டேய்! வேணாம்-டா பொம்பள புள்ளைங்க எல்லாம் போகுது-டா.இப்படி என்னை அசிங்க படுத்தாதீங்க-டா” என்று கெஞ்சினேன். நான் பேசுவது அவர்கள் காதில் விழுந்தால் தானே.

இப்படி பலரும் வேடிக்கை பார்க்க அன்றிலிருந்து டிக்கியை ஓபன் ஆக வைத்துக் கொண்டு என்னை ஓட்ட ஆரம்பித்தனர்.ஆரம்பத்தில் அழகான நிறத்துடன் இருந்தவன்,அழுக்கும், கரியும் கலந்து மிக அசிங்கமாக ஆனேன்.

நான் எப்படி இருந்தால் என்ன, அவளுக்கு என்னை பிடித்திருந்தது.ஒவ்வொரு நாளும் என்னுடைய உடல்நலம் சீர்கெட ஆரம்பித்தது.அதையும் மீறி எங்கள் காதல் எங்கள் இருவரையும் சந்தோஷமாக வைத்திருந்தது.

அதற்கும் ஒருநாள் ஆப்பு வந்ததது. என்னையும் அவளையும் வேறு-வேறு தடத்திற்கு மாற்றப் போவதாகப் பேசிக் கொண்டனர்.அதை கேட்டது எங்கள் இருவரையும் சோகம் தாக்கியது.நாங்கள் ஒருவர் மேல் ஒருவர் வைத்திருந்த காதலில் தான் இத்தனை நாளும் எல்லா கஷ்டங்களையும் தாங்கிக் கொண்டோம்.எங்களுக்குள் பிரிவு வந்து விட்டால் எங்களால் சமாளிக்க முடியாது என்றுணர்ந்து முடிவெடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டோம்.

அவள் கண்கள் கலங்க என்னைப் பார்த்து “இப்போ என்னங்க பண்றது. நம்மளை பிரிக்க போறாங்க போலருக்கே. இங்கேயிருந்து போயிட்டோம்-னா அப்புறம் பார்க்கவே முடியாது”என்று விசும்பினாள்.

அவள் அழுவதை பார்த்து என் மனம் துடித்தது “என்ன பண்றது-டா குட்டி. எனக்கு என்ன செய்றதுன்னே புரியலையே”என்றேன் தவிப்புடன்.

இரவு முழுவதும் இருவரும் கலக்கமடைந்து நின்று கொண்டிருந்தோம்,விடியலின் நேரம் எனக்கு ஒரு யோசனை தோன்றியது.

“ஏன் குட்டி  நாம ஓடி போயிடலாமா?” என்றேன் அவளிடம்.

அதற்கு நிராசையாக என்னை பார்த்தவள் “போகலாம் தான். ஆனா, நம்மளை தான் பூட்டி வச்சிருக்கானே.எப்படி போறது?என்றாள்.

அவள் சொன்னதை கேட்டு யோசனையுடன் தலையை குனிந்து கொண்டேன்.சிறிது நேரத்திற்குப் பிறகு “எப்படியும் இன்னும் ரெண்டு நாள் இருக்கு.அதுக்குள்ள நமக்கு கடவுள் வழிகாட்டும் நம்பிக்கையோட இருப்போம்”என்றேன்.

அவளும் தலையாட்டிக் கொண்டாள். முதல்நாள் எந்த முடிவும் கிடைக்காமல் வேகமாக ஓடியது. எங்களுக்கு மெல்ல மெல்ல நம்பிக்கை குறைய ஆரம்பித்தது.அடுத்தநாள் இரவு நான் அவளிடம் ஒரு யோசனையை சொன்னேன்.அவளும் அதை செயலாற்றுவதாக கூறினாள்.

 என்னை பூட்ட வந்த செழியனை யாரோ ஒருவர் அழைக்க, சாவியை அப்படியே வைத்துவிட்டு சென்றான்.நான் சற்று வேகமாக என்னுடலை குலுக்கி சாவியை கீழே விழ வைத்தேன்.அது உள்ளே சென்று மறைந்தது.

நண்பனிடம் பேசிவிட்டு வந்த செழியன் என்னிடம் சாவி இல்லாததை பார்த்து ‘ஒ..பூட்டி சாவியை கொடுத்திட்டேனா.வர-வர மறதி ஜாஸ்தியா போச்சு’என்று தனக்குள் பேசிக் கொண்டு அங்கிருந்து கிளம்பினான்.

நான் செய்த வேலையை அவளும் செய்திருக்க, எங்கள் கால்கள் கட்டப்படவில்லை. நடுஇரவானதும் அங்கிருந்து மெல்ல வெளியேறினோம்.  நகரத்தை விட்டு வெளியேறும் வரை எங்கள் இருவருக்கும் பதட்டத்தில் நெஞ்சு வேகமாக துடித்தது.சென்னையை விட்டு வெளியேறியதும், சுதந்திர காற்றை ரசிக்க ஆரம்பித்தோம்.

வழியெங்கும் நிற்காது பயணம் செய்து சத்திய மங்களம் காட்டுக்குள் சென்றோம். காட்டைப் பார்த்ததும் பயந்து போய் என்னுடன் உரசிக் கொண்டு நின்றாள் S15.


நானும் அவளை உரசி நின்று “என்ன பயம்?”என்று குறும்பாக வினவினேன். என்னை பயம் கலந்த விழிகளுடன் பார்த்தவள் “இங்கே மிருகங்கள் எல்லாம் இருக்குமே”என்றாள்.


அவளை லேசாக இடித்து “மனுஷங்களால தான் நமக்கு ஆபத்து. பயபடாதே-டா குட்டி”என்றேன்.


அதுவரை இருந்த பயம் நீங்கியவள் மெல்லிய புன்னகையுடன், என்னைப் பார்த்து கண் சிமிட்டினாள்.


அதைப் பார்த்ததும் எனக்குள் உற்சாகம் பீறிட்டு எழுந்தது. அந்த வேகத்தில் பாட ஆரம்பித்தேன்.


               “மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித காதல் அல்ல

                     அதையும் தாண்டி புனிதமானது”

இருவரும் ஒருவரை ஒருவர் கண்டு மெய்மறந்து நின்றோம்.எங்கள் காதல் வாழ்க்கை சத்தியமங்கலத்தில் ஆரம்பமானது.


மறுநாள் சென்னையில் பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்படிருந்த இரு பேருந்துகளை காணவில்லை என்று பிளாஷ் நியுஸ் போட்டு,  ஊடங்கள் தங்கள் டிஆர்பி ரேட்டிங்கை ஏற்றிக் கொண்டிருந்தன.யார் திருடி சென்றிருக்க கூடும் என்றும் பல்வேறு கோணங்களில் விவாத நிகழ்ச்சிகள் வைத்து தங்கள் தொலைகாட்சியின் இருப்பை உணர்த்திக் கொண்டிருந்தது.

ஒரு சிலர் கூட்டத்தை கூட்டி இதற்கு சிபிஐ விசாரணை வைக்க வேண்டும் என்று ஸ்ட்ரைக் செய்ய ஆரம்பித்தனர்.இப்படி சென்னையை பற்றி எரிய வைத்துவிட்டு அந்த இரு காதல் கொண்ட பேருந்துகளும் தங்களின் துணையின் அருகாமையை ரசித்துக் கொண்டிருந்தன.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...