இஞ்சி துவையல்
ரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்தி மாரடைப்பு நேராமல் இஞ்சி தடுக்கிறது. தலைவலியைப் போக்கி ரத்த ஓட்டம் சீராக இருக்க உதவுகிறது. கொழுப்புச்சத்தைக் குறைத்து, மைய நரம்பு மண்டலத்தைத் தூண்டி இருதய, சுவாசத் தசைகள் சீராக இயங்க உதவுகிறது. மலச்சிக்கல் ஏற்படுவதைத் தடுத்து செரித்தலைச் சீராக்கி வயிற்றுவலி ஏற்படுவதைத் தடுக்கிறது. சுவையான இஞ்சி துவையல் எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்!
தேவையானவை: இஞ்சி – சிறிய துண்டு, தேங்காய் துருவல் – அரை கப், காய்ந்த மிளகாய் – 3, புளி – சிறிதளவு, உளுத்தம் பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன், கடுகு – கால் டீஸ்பூன், கறிவேப்பிலை -சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: இஞ்சியை சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ளவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய், தேங்காய் துருவல், உளுத்தம்பருப்பு, இஞ்சி ஆகியவற்றை சேர்த்து வறுக்கவும். இதனுடன் புளி, உப்பு, சிறிதளவு நீர் சேர்த்து மிக்சியில் அரைக்கவும்.
பின்னர் வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, அரைத்த கலவையை சேர்த்து வதக்கினால் சுவையான இஞ்சி துவையல் தயார். இதை மூன்று, நாட்களுக்கு வைத்திருந்து பயன்படுத்தலாம்.