இந்தியாவில் மீண்டும் ரெசிஷன் அபாயங்கள் தோன்றக்கூடும் – “மத்திய நிதியமைச்சகம்”… | நா.சதீஸ்குமார்
மத்திய நிதி அமைச்சகத்தின் மாதாந்திர மதிப்பாய்வு அறிக்கையில் 2024 ஆம் ஆண்டில் இந்தியாவில் மீண்டும் ஒரு பொருளாதார மந்தநிலை அதாவது ரெசிஷன் அபாயங்கள் தோன்றக்கூடும் என்று கூறியுள்ளது.
இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுவது உணவு மற்றும் எரிபொருட்களின் அதிகப்படியான விலை தான், உணவு மற்றும் எரிபொருட்களின் விலை உயர அடிப்படையான காரணம் சர்வதேச அளவில் நடக்கும் பிரச்சனைகள் தான் என விளக்கம் கொடுத்துள்ளது.
2024 ஆம் ஆண்டு இந்தியா, அமெரிக்கா ஆகிய இரு பொருளாதார சக்தி வாய்ந்த நாடுகளில் பொது தேர்தல் நடக்க இருக்கும் வேளையில் பொருளாதார மந்தநிலை உருவாகக்கூடும் என்ற மத்திய நிதி அமைச்சகத்தின் கணிப்பு முதலீட்டாளர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே இந்தியாவில் ஆட்சி மாற்றம் நடந்தால் பங்குச்சந்தை 25 சதவீதம் வரையில் சரிந்து சில மாதங்களில் மீண்டு வரும் என கணிக்கப்பட்ட நிலையில், மத்திய நிதி அமைச்சகத்தின் ரெசிஷன் கணிப்பு ஆட்சி மாற்றம் நடந்தாலும் சரி, நடக்காவிட்டாலும் சரி பெரும் தாக்கம் இந்திய பொருளாதாரத்திலும், முதலீட்டு சந்தையிலும் இருக்கும் என தெரிகிறது.
மேலும் தற்போதைய பணவீக்க மாற்றங்கள் மத்திய அரசு மற்றும் ரிசர்வ் வங்கிகளை உஷார் நிலையில் வைத்துள்ளது என்றால் மிகையில்லை. இதற்கிடையில் மத்திய அரசின் நிதி பற்றாக்குறை இலக்கை அடைவதில் பல சவால்கள் நிறைந்துள்ளது, மேலும் கச்சா எண்ணெய் விலை உயர்வும், ரூபாய் மதிப்பு சரிவும் முக்கிய பாதிப்பாக பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் அதிக மதிப்புள்ள பொருட்களின் இறக்குமதிகள் மற்றும் குறைந்த மதிப்புள்ள ஏற்றுமதிகள் அக்டோபர் மாதத்தில் நாட்டின் வர்த்தகப் பற்றாக்குறை அளவீட்டை வரலாற்று உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
இந்தியாவில் அக்டோபர் மாதத்தில் மட்டும் தங்கம் இறக்குமதி கடந்த ஆண்டை விட 60% உயர்ந்து 31 மாதங்களில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி செப்டம்பர் காலாண்டில் மட்டும் ஒன்பது டன் தங்கத்தை வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.