சேலம் அரசு மருத்துவமனையில் பயங்கர தீவிபத்து… | நா.சதீஸ்குமார்
சேலம் அரசு மருத்துவமனையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவுக்கான 2 தளங்களிலும் கரும்புகை சூழ்ந்தது. இதனால் படுத்த படுக்கையாக இருந்த நோயாளிகள் கடும் அவதியடைந்த நிலையில் மருத்துவமனை ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு அவர்களை மீட்டனர். அதோடு தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.
சேலத்தில் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் சேலம் மட்டுமின்றி ஈரோடு, நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த நோயாளிகள் வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.
இந்த மருத்துவமனையில் தினமும் 1000க்கும் அதிகமானவர்கள் வெளிநோயாளிகளாக வந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அதோடு உள்நோயாளிக்காக நூற்றுக்கணக்கானவர்கள் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த மருத்துவமனையில்விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவு என்பது 2 தளங்களாக அமைந்துள்ளது. இங்கு ஏராளமானவர்கள் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் தான் இன்று காலையில் திடீரென்று அந்த சிகிச்சை பிரிவின் முதல் தளத்தில் தீவிபத்து ஏற்பட்டது. இந்த தீவிபத்தால் முதல் தளம் மற்றும் 2வது தளத்தை முற்றிலும் புகை மண்டலமானது.
இதனால் நோயாளிகள் மற்றும் ஊழியர்கள் திகைத்து போயினர். அதோடு மருத்துவமனை பணியாளர்கள் அவசர அவரசமாக அந்த சிகிச்சை பிரிவில் இருந்தவர்களை வெளியேற்றினர். சிலரால் நடக்க முடியவில்லை. இதையடுத்து பணியாளர்கள் அவர்களை வெளியே சுமந்து வந்தனர். இதற்கிடையே சம்பவம் குறித்து செவ்வாய்ப்பேட்டை தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் ஏற்பட்ட தீயை அணைக்க முயன்றனர். மேலும் கரும்புகை அதிகமாக இருந்ததால் 2 தளங்களில் உள்ள ஜன்னல்களை திறந்து வெளியேற்றினர். திறக்க முடியாத ஜன்னல்களை அவர்கள் இடித்தனர். இதனால் கரும்புகை மெல்ல வெளியேற தொடங்கியது. தீயும் போராடி அணைக்கப்பட்டது.
முதற்கட்ட விசாரணையின் விபத்து மற்றும் அறுவை சிகிச்சை பிரிவின் முதல் தளத்தில் உள்ள எலும்பு முறிவு அவசர சிகிச்சை பிரிவில் இருக்கும் ஏசியில் ஏற்பட்ட மின்கசிவின் காரணமாக இந்த தீவிபத்து ஏற்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதுபற்றி சேலம் டவுன் போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.
இதற்கிடையே தீவிபத்து காரணமாக வெளியேற்றப்பட்ட நோயாளிகள் அருகே உள்ள கண்ணாடி மாளிகைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை தொடங்கி உள்ளது. தீவிபத்தால் கரும்புகை சூழ்ந்ததால் நோயாளிகள் யாருக்காது மூச்சுத்திணறல் உள்பட சுவாசம் சார்ந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக என டாக்டர்கள் பரிசோதித்துள்ளனர். இந்த சம்பவத்தால் சேலம் அரசு மருத்துவமனையில் இன்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.