தமிழ் திரையுலகம் சார்பில் கொண்டாவிருக்கும் ‘கலைஞர் 100’..!| நா.சதீஸ்குமார்

 தமிழ் திரையுலகம் சார்பில் கொண்டாவிருக்கும் ‘கலைஞர் 100’..!| நா.சதீஸ்குமார்

திரைத்துறை சார்பில், டிச. 24-ஆம் தேதி “கலைஞர் 100” விழா நடைபெறவுள்ள நிலையில், டிச.23, 24 தேதிகளில் இந்தியாவில் எந்த இடத்திலும் தமிழ் திரைப்படங்களின் படப்பிடிப்புகள் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பியான முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா தற்போது தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அரசு சார்பிலும், திமுக சார்பிலும் பல்வேறு நிகழ்ச்சியில் நடத்தப்பட்டு வருகிறது.

அதே போல, தமிழ் சினிமாவின் வளர்ச்சிக்கு முத்தமிழறிஞர் கலைஞர் வசனகர்த்தாவாக, பாடலாசிரியராக பல்வேறு பங்கை ஆற்றியுள்ளார். இதன் காரணமாக தமிழ் சினிமா வரலாற்றில் அழிக்கமுடியாத சின்னமாக கலைஞர் திகழ்ந்து வருகிறார். அதனை போற்றும் வகையில் தமிழ் திரையுலகம் சார்பிலும் கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாடப்படவுள்ளது.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டம் கடந்த ஜூன் மாதம் சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. 400 தயாரிப்பாளர்கள் கலந்துகொண்ட இந்த கூட்டத்தில் தமிழ் திரையுலகம் சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு டிசம்பர் 24 ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்ட கலைநிகழ்ச்சி நடத்த வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்திற்கு பொதுக்குழுவில் ஒப்புதல் பெறப்பட்டு, அதற்கான ஏற்பாடுகளையும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர். இந்த விழாவில் கலந்துகொள்ளுமாறு இந்திய திரை நட்சத்திரங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக கலைஞர் நூற்றாண்டு விழாவிற்கு ரஜினி, கமலுக்கு நேரில் அழைப்பு விடுக்கப்பட்டது. அதே போல பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன், மலையாள நடிகர்கள் மோகன்லால், சிரஞ்சீவி கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் ஆகியோருக்கும் விழாவில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறும் இந்த விழா, டிசம்பர் 24-ம் தேதி நடைபெறவுள்ளது.

இதனை முன்னிட்டு பொதுமக்களுக்கும் இலவச பாஸ் கியூ ஆர் கோடுடன் வழங்கப்படவுள்ளது. மேலும் இந்த விழாவில் கலைஞர் நூற்றாண்டு புகைப்பட கண்காட்சி நடைபெறும். இந்த நிகழ்ச்சிக்கு அனைத்து கட்சி, மற்றும் அமைப்புகளுக்கும் அழைப்பு விடுக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த விழாவை முன்னிட்டு டிசம்பர் 23, 24 ஆகிய தேதிகளில் இந்தியா முழுவதும் எந்த இடத்திலும் தமிழ் படபிடிப்பு நடைபெறாது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...