குஷ்வந்த் சிங்

 குஷ்வந்த் சிங்
குஷ்வந்த் சிங்
குஷ்வந்த் சிங் ஒரு புகழ்பெற்ற நாவலாசிரியர் மற்றும் பத்திரிக்கையாளரும் ஆவார். இலக்கியத்துறையில், இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக இந்தியாவின் உயரிய விருதான “பத்ம விபூஷன் விருது” இந்திய அரசால் வழங்கப்பட்டது. சமூகம், மதம், அரசியல் மற்றும் பாலினம் சார்ந்த வெளிப்படையான கருத்துக்களை கொண்ட இவருடைய படைப்புகள், புகழ்பெற்றவையாகும். இவர், முற்போக்கு சிந்தனையாளராகவும், மனித நேயமிக்கவராகவும் விளங்கியவர். அரை நூற்றாண்டுகளுக்கும் மேலாக மிகச்சிறந்த எழுத்தாளராகவும், திறமையான பத்திரிக்கையாளராகவும் தனி முத்திரை பதித்த குஷ்வந்த் சிங்கின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைப் படைப்புகளை விரிவாகக் காண்போம்.
பிறப்பு: பிப்ரவரி 02, 1915
இடம்: ஹதாலி (தற்போது பாகிஸ்தானில்), பஞ்சாப், பிரிட்டிஷ் இந்தியா
பணி: பத்திரிக்கையாளர் மற்றும் எழுத்தாளர்
நாட்டுரிமை: இந்தியன்
பிறப்பு
அவர், 1915  ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2  ஆம் நாள் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்திலுள்ள ஹதாலி (தற்போது பாகிஸ்தானில் உள்ளது), என்ற இடத்தில் ஒரு சீக்கியக் குடும்பத்தில் பிறந்தார். இவருடைய தந்தையார் பெயர், ஸர் ஷோபா சிங் ஆகும். இவர் டெல்லியில் கட்டிடக்கலை வல்லுனராக புகழ்பெற்று விளங்கினார். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் பல அழகான கட்டிடங்களை கட்டியுள்ளார்.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
தன்னுடைய பள்ளிப்படிப்பை, புது தில்லியில் உள்ள “மாடர்ன் பள்ளியில்” முடித்த அவர், இளங்கலைப் படிப்பை லாகூர் அரசுக்கல்லூரியில் நிறைவுசெய்தார். பிறகு லண்டனிலுள்ள கிங் கல்லூரியில் சட்டம் பயின்ற அவர், 1947 ஆம் ஆண்டு லாகூர் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியைத் தொடர்ந்தார்.
இலக்கியப் பணி
எழுத்தாளராக வாழ்க்கையை தொடங்கிய அவர், தன்னுடைய முதல் நாவலை “மனோ மஜ்ரா” என்ற பெயரில் எழுதினார். எழுதிமுடித்த பின்னரும் இந்த புத்தகம் சில காரணங்களால் வெளியிடாமல் இருந்தது. பிறகு, “கரூவ் ப்ரெஸ்” என்ற பதிப்பகம் இந்திய நாவலுக்கான போட்டி ஒன்றை அறிவித்தது. அதற்கு “மனோ மஜ்ராவை” அனுப்பிவைத்தார். அந்த போட்டியில், முதல் பரிசை வென்ற அந்த நூல் பிறகு “பாகிஸ்தான் போகும் ரயில்” என பெயர் மாற்றம் செய்யப்பட்டு பதிப்புகளாக வெளியிடப்பட்டது. இன்றுவரை போற்றத்தக்க ஒன்றாக கூறப்படும் இந்த நாவலின் கதை, இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையை மையக்கருவாகக் கொண்டு எழுதப்பட்ட உன்னதப் படைப்பாகும். பாரதநாடு, இந்தியா – பாகிஸ்தான் என பிரிக்கப்பட்ட பொழுது, எல்லையில் உள்ள ஒரு கிராமத்தில் முஸ்லிம்களும், இந்துக்களும், சீக்கியர்களும் தாயாய், பிள்ளையாய், சகோதரர்களாய் பழகியவர்கள் எப்படி விகாரமடைந்து மாறுகிறது என்பதை அற்புதமாக வெளிபடுத்தி இருப்பார். சாதி, மத அடிப்படை வாதங்களுக்கு அப்பாற்பட்டு சமத்துவ சமூகத்தை நோக்கி பயணிக்கும் ஒரு வரலாற்று எடுத்துக்காட்டாய் அமைந்திருக்கிறது எனக் கூறப்படுகிறது.
அவரது படைப்புகள்
“தி மார்க் ஆஃப் விஷ்ணு அண்ட் அதர் ஸ்டோரிஸ்”, “தி ஹிஸ்டரி ஆஃப் சீக்ஸ்”, “தி வாய்ஸ் ஆஃப் காட் அண்ட் அதர் ஸ்டோரீஸ்”, “ஐ ஷெல் நாட் ஹியர் த நைட்டிங்கேல்”, “தி பால் ஆஃப் பஞ்சாப்”, “ட்ராஜெடி ஆஃப் பஞ்சாப்”, “எண்டு ஆஃப் இந்தியா”, “தில்லி” என மேலும் பல நாவல்களையும், சிறுகதைகளையும், ஜோக்ஸ் புத்தகங்களையும் படைத்துள்ளார்.
பணிகள்
இந்தியாவின் அடித்தட்டு மக்கள் சமூகப் பொருளாதார விழிப்புணர்வு பெற வேண்டி, 1957 ஆம் ஆண்டு “யோஜனா” (தமிழில் “திட்டம்” என்ற பெயரில் வெளியிடப்படுகிறது) என்ற மாத இதழை குஷ்வந்த் சிங் தொடங்கினார். தற்போது தமிழ், ஆங்கிலம் என பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகிறது. 1979 முதல் 1980 வரை “இந்தியா இல்ல்லஸ்டிரேட்டட் வீக்லி” என்ற பத்திரிக்கையில் ஆசிரியாராக பணியாற்றியுள்ளார். 1980 முதல் 1983 வரை, “இந்துஸ்தான் டைம்ஸ்” பத்திரிக்கையின் ஆசிரியாராகப் பணியாற்றியுள்ளார். இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கையில், சனிக்கிழமை பதிப்பில் தோன்றும் “வித் மாலிஸ் டுவார்ட்ஸ் ஒன் அண்ட் ஆல்” அந்நாட்களில் மிகவும் பிரபலமான ஒன்றாக இருந்தது. 1980 முதல் 1986 வரை, இந்திய பாராளுமன்ற மேல்சபையில் மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.
விருதுகள்
  • 1974 ஆம் ஆண்டு இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான “பத்ம பூஷன்” வழங்கி கெளரவிக்கப்பட்டார்.”
  • 2006 ஆம் ஆண்டு, பஞ்சாப் அரசால் அவருக்கு “பஞ்சாப் ரத்தன் விருது” வழங்கப்பட்டது.
  • 2007 ஆம் ஆண்டு, இந்திய அரசால் அவருக்கு “பத்ம விபூஷன்” விருது வழங்கப்பட்டது.
  • 2010 ஆம் ஆண்டு, அவருக்கு “இந்திய சாகித்திய அகாடமி” விருது வழங்கப்பட்டது.
குஷ்வந்த் சிங் ஒரு எழுத்தாளராகவும், பத்திரிக்கையாளராகவும் மட்டுமல்லாமல், மிகச்சிறந்த நகைச்சுவையாளராகவும் தனி முத்திரைப் பதித்தவர். வாழ்வில் பல நெருக்கடிகளை சந்தித்தபொழுதும், அவற்றை புன்னகையுடன் எதிர்கொண்ட சுவாரசியமான மனிதர் ஆவார்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...