படித்தேன்!! ரசித்தேன்!! |நீலவானம் – வி.எஸ்.வி. ரமணன்

வி.எஸ்.வி.ரமணன் அவர்களின் “நீலவானம்”

நேற்று வாசித்து முடித்தேன். விறுவிறுப்பான நாவல். விமானத்தளத்தையும் அதன் செயல்பாடுகள், விதிகளைப் பற்றி இலகுவாக நீங்கள் அறிய வேண்டுமெனில், தவறாமல் இந்தப் புத்தகத்தை வாசிக்கலாம். விமானத்தளம் மட்டுமல்ல, ரா அமைப்பு, ரிசர்வ் பேங்க்கின் பண மதிப்புக்கான நடவடிக்கைகள், க்ரைஸில் உளவுத்துறை, உள்துறை அதிகாரிகள், கமாண்டோக்கள், விமான ஊழியர்கள் என சம்பவங்களின் கோர்வையில் அது நிகழும் இடம், அதன் நுட்பமான செய்திகளுடன் “நீலவானம்” பயணிக்கிறது.

“ஹலோ கேப்டன்… ஹலோ கேப்டன்”.. என்று பதறும் ப்ரியா… இவர் தான் கதையின் நாயகி. விமானம் கடத்தப்படும்போது இவரின் பயம், பதட்டம், சாகசம், ஒருவேளை விமானப் பயணிகளுடன் ஒரு கதாநாயகன் இருந்து அவருக்கும் ப்ரியாவுக்கும் காதல் மலர்ந்து, தன் சாகஸத்தால், கதாநாயகன் வில்லன்களை துவம்சம் செய்வதைப் போன்ற கதையை யூகித்தால்…. ஸாரி நீங்கள் ஏமாறப்போவது நிச்சயம்.

இங்கே கதையின் நாயகன் என்பது சந்தர்ப்பத்தை இலாவகமாக கையாளும் திறன். பண்டோபாத்தியா ஒரு இக்கட்டான சூழ்நிலையை திறனாய் கையாளும் சாமர்த்தியம், எங்கே எகிற வேண்டும், எங்கே பணிய வேண்டும், எப்படி தகவல் சேகரிக்க வேண்டும் என்பதற்கு உதாரணம். இதேபோல் வழிநெடுக நிறைய கதாபாத்திரங்கள்.

விமானத்தில் சிக்கல், பயணிகளின் அதிருப்தி, அதை கடைசி நிமிடம் வரையில் தன் பேச்சாலே கையாளும் பெஸ்ட் எம்ப்ளாயி ரோகினி. அவரின் வார்த்தைகள் வாசிக்கும்போதே குரல் காதுகளில் ஒலிக்கிறது. 70வயது விமானத்துறை அமைச்சர் எந்த பரபரப்பும் இல்லாமல் ஒரு அதிகாரியுடன் பயணிக்கும் சிம்பிளிசிட்டி வியக்கும் இடம். ப்ரேக்கிங் செய்திகளுக்காக காத்திருக்கும் சுமிதா ஹெக்டே. மனித மனங்களின் விசித்திரம். சலனங்கள் மனிதர்களை வீழ்த்தும் என்பதை விமான ஊழியர் ஒருவரிடம், “இவரையும் ஒரு படம் எடுத்துக்கோ” என்று சொல்லும் இடத்தில் தன் காரியம் சாதிப்பது

ஒற்றைப் பயணியாக மாட்டிக்கொள்ளும் சோமசுந்தரராவ். அவர் கையாளும் யுக்தி, பெயர் குழப்பம், நாவலின் சுவாரஸ்யத்திற்கு மேலும் மெருகு தருகிறது. அதிகாரிகள் மனோஜ், மிஸ்ராவின் மூளைச் சாகசங்கள் என நாவல் முழுமையும் வித்தியாசமான அனுபவத்தைத் தருகிறது.

இந்த நாவலின் குறிப்புகளை வைத்து, நிறைய கதைகளைப் படைக்கலாம். தகவல் களஞ்சியங்களோடு ஒரு த்ரில்லர். ஆரம்பத்தில் எட்டிப்பார்த்த ப்ரியா இறுதி அத்தியாயத்தில் நீலவானத்தை ரசிப்பதோடு கதையை முடித்திருக்கிறார். நம்மையும் தகவல் நட்சத்திரங்களோடு ரசிக்க வைத்திருக்கிறார்.

இது யாருமற்ற வானம்

என்னோடு பேசும் வானம்

என் மொழிகள் எதிரொலிக்கும் வானம்

என் மெளனமும் படர்ந்திருக்கும் வானம்’

வானம் மெளனமாய்…. ஆனால் 127 பக்கங்கள் உடைய “நீலவானம்” விறுவிறுப்பாய் பயணிக்கிறது. வாழ்த்துகள் ரமணன் சார். அருமையான நாவலை பரிசளித்ததற்கு…!

-லதா சரவணன்
(எழுத்தாளர்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!