ஜெயகாந்தன் (த. ஜெயகாந்தன்) (ஏப்ரல் 24, 1934 – ஏப்ரல் 8, 2015) தமிழ் முற்போக்கு எழுத்தாளர்களில் முதன்மையானவர். இந்திய கம்யூனிஸ்டு கட்சியிலும் பின்னர் இந்திய தேசிய காங்கிரஸிலும் ஒத்திசைந்து பணியாற்றியவர். ஞானபீட விருதைப் பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர். தமிழகத்தின் இடதுசாரி தரப்பின் அறக்குரலாகவும், இடதுசாரிப்பார்வையின் மெய்யியலை தேடியவராகவும் மதிப்பிடப்படுகிறார்.
பிறப்பு, இளமை
ஜெயகாந்தன் ஏப்ரல் 24, 1934 அன்று கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பம் என்ற ஊரில், ஒரு வேளாண் குடும்பத்தில் தண்டபாணிப் பிள்ளை, மகாலெட்சுமி அம்மாள் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இயற்பெயர் முருகேசன். பள்ளிப்படிப்பை முடிக்காமலேயே வீட்டைத் துறந்து விழுப்புரம் சென்றார். விழுப்புரத்தில் தன் தாய்மாமனின் ஆதரவில் வாழ்ந்தார். அவர் ஜெயகாந்தனைப் பொதுவுடைமைக் கோட்பாடுகளுக்கும், பாரதியின் எழுத்துகளுக்கும் அறிமுகப்படுத்தினார்.
தனிவாழ்க்கை
ஜெயகாந்தன் தன் 13-ஆவது வயதில் சென்னைக்கு சென்றார். மளிகைக்கடை எடுபிடிப்பையன், மருத்துவரின் உதவியாளன், மாவு இயந்திரம் இயக்குபவர், அச்சுக்கோப்பவர் என பல பணிகள் செய்தார். குறைந்தகாலம் ரிக்ஷா இழுப்பவராக வேலைபார்த்தார். எழுத்தாளராகப் புகழ்பெற்ற பின் எழுதியே வாழ்ந்தார்.
ஜெயகாந்தன் 1956-ல் ஞானாம்பிகையை மணந்துகொண்டார். பின்னர் தன் வாசகியான கௌசல்யா என்கிற சீதாலட்சுமியையும் மனைவியாக ஏற்றுக்கொண்டார். ஜெயகாந்தனின் மகன் ஜெயசிம்மன் எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். ஜெயகாந்தனின் மகள் தீபலட்சுமி அரசியல் கட்டுரைகள் எழுதிவருகிறார்.
அரசியல் ஈடுபாடு
கம்யூனிஸ்டுக் கட்சி
ஜெயகாந்தனுக்கு தன் தாய்மாமன் புருஷோத்தமன் வழியாக இடதுசாரிகளுடன் தொடர்பு ஏற்பட்டது. இந்திய கம்யூனிஸ்டுக் கட்சியினரின் கம்யூனில் எஸ்.பாலதண்டாயுதம், வ.கல்யாணசுந்தரம், எஸ்.ராமகிருஷ்ணன், ஆர்.கே.கண்ணன் ஆகியோருடன் தங்கும் வாய்ப்பு அமைந்தது. ஜெயகாந்தனின் சிந்தனைகளில் மிகப்பெரிய செல்வாக்கைச் செலுத்தியவர் ஆர்.கே.கண்ணன்
ஜெயகாந்தன் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் ஜனசக்தி அச்சகத்தில் அச்சுகோப்பவராகவும், பிழை திருத்துபவராகவும், டிரெடில் அச்சு இயந்திரத்தை இயக்குபவராகவும் பணியாற்றினார். இக்காலகட்டத்தில் பிழைநோக்கும் பொருட்டு அவர் வங்காள இலக்கியங்களையும், ரஷ்ய இலக்கியங்களையும் ஆழ்ந்து வாசிக்க நேர்ந்தது. டால்ஸ்டாயின் அன்னா கரீனினா நாவலின் க.சந்தானம் மொழிபெயர்ப்பு அவரால் பிழைநோக்கப்பட்டது. அந்நாவலின் பாதிப்பு அவரிடம் நீடித்தது. கம்யூனிஸ்டுக் கட்சியின் மாலைநேர வகுப்புகள் வழியாக அவருடைய ஆங்கில அறிவும் மேம்பட்டது. 1952-ல் ஜெயகாந்தன் கம்யூனிஸ்டுக் கட்சியின் உறுப்பினராக ஆனார்.
1949-ம் ஆண்டு சி. பி. ஐ மீதும் அதன் உறுப்பினர்கள் மீதும் தடை போடப்பட்டது. ஆதலால் தஞ்சையில் சென்று காலணிகள் விற்கும் கடை ஒன்றில் பணிபுரிந்தார்.1956-ல் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியில் உருவான பிளவு ஜெயகாந்தனை மனம்சோர்வுறச் செய்தது. கம்யூனிஸ்டுத் தலைவர்கள் மேல் பெருமதிப்பு கொண்டிருந்த அவர் அவர்கள் ஒருவரோடொருவர் பூசலிட்டுக்கொண்டதை ஏற்கமுடியாமல் துன்புற்றார். 1964-ல் கம்யூனிஸ்டுக் கட்சி ஈடுபாட்டில் இருந்து விலகிக்கொண்டார்.
காங்கிரஸ்
ஜெயகாந்தன் இளமையில் இருந்தே திராவிட இயக்கம் மற்றும் ஈ.வே.ராமசாமிப் பெரியார் ஆகியோரின் அரசியலில் ஒவ்வாமை கொண்டிருந்தார். அவர்களை தரமற்ற அரசியல் நடத்துபவர்கள் என்றும், பண்பாட்டின் ஆழத்தை அறியாதவர்கள் என்றும் அவர் மதிப்பிட்டார். மேடைகளில் திராவிட இயக்கத்தை கடுமையாக விமர்சனம் செய்து பேசி வந்தார். காமராஜரின் அழைப்பால் அவர் 1965-ல் இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளரானார். ஆனால் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராக ஆகவில்லை.
ஜெயகாந்தனும் கவிஞர் கண்ணதாசனும் இந்திய தேசிய காங்கிரஸின் திராவிட அரசியல் எதிர்ப்பை முன்வைக்கும் பேச்சாளர்களாக அறியப்பட்டனர்.1967-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸின் தோல்வியும் காமராஜர் தேசிய அரசியலுக்குச் சென்றதும் ஜெயகாந்தனை தீவிர அரசியலில் இருந்து விலக்கியது. இதுவரையிலான தன் அரசியல் வாழ்க்கையை அவர் ஓர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள் என்னும் நூலில் பதிவு செய்திருக்கிறார்.
காங்கிரஸ் (இந்திரா)
காமராஜர் மறைவுக்குப்பின் ஜெயகாந்தன் இந்திரா காந்தி தலைமையை ஏற்று காங்கிரஸ் [இந்திரா பிரிவு] ஆதரவாளராக நீடித்தார். 1975-ல் அவசரநிலைப் பிரகடனம் செய்யப்பட்டபோது அதை ஆதரித்தார். அதன் இறுதிக்கட்டத்தில் அதில் நிகழ்ந்த அடக்குமுறைகளைப் புரிந்துகொண்டு கடுமையான எதிர்ப்பைப் பதிவுசெய்தார். ஜெயஜெயசங்கர என்னும் நாவல் அவசரநிலையின் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான ஆன்மிகமான எதிர்ப்பை பதிவுசெய்வதாகும்.
தேர்தல்
ஜெயகாந்தன் காங்கிரஸுக்காக தேர்தல்பிரச்சாரம் செய்திருக்கிறார். 1977-ல் சென்னை தியாகராய நகர் தொகுதியில் சட்டமன்றத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு தோற்றார்.
இலக்கிய வாழ்க்கை
1949-ல் ஜெயகாந்தன் ‘டிரெடில்’ என்னும் முதல் கதையை எழுதினார். ஆனால் முதலில் பிரசுரமானது ‘ஆணும் பெண்ணும்’ என்னும் சிறுகதை. இக்கதை 1953-ல் சௌபாக்யம் இதழில் வெளியானது. இடதுசாரி அறிஞர்கள் எஸ்.ராமகிருஷ்ணன், ஆர்.கே.கண்ணன் ஆகியோரின் ஊக்குவித்தலால் இடதுசாரி இதழ்களில் தொடர்ச்சியாக எழுதினார். தொ.மு.சி. ரகுநாதன், ஆர்.கே.கண்ணன் ஆகியோர் ஏற்கனவே முற்போக்கு இலக்கியத்தை உருவாக்கியிருந்தாலும் ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி, ஜி. நாகராஜன் ஆகியோரே அதன் வளர்ச்சிக்குக் காரணமான எழுத்தாளர்களாகக் கருதப்பட்டனர். தொ.மு.சி.ரகுநாதனின் சாந்தி, வ.விஜயபாஸ்கரனின் சரஸ்வதி, ப. ஜீவானந்தம் தொடங்கிய தாமரை, மற்றும் சமரன் ஆகிய இதழ்களில் ஜெயகாந்தன் தொடர்ச்சியாக எழுதினார். பொதுவான இலக்கிய இதழ்களான பிரசண்ட விகடன், கிராம ஊழியன் ஆகிய இதழ்களிலும் ஜெயகாந்தன் அவ்வப்போது எழுதினார். இக்காலகட்டத்தில் அவருடைய அணுக்கமான இலக்கியத்தோழராக கவிஞர் தமிழ்ஒளி இருந்தார். கவிஞர் கே.சி.எஸ்.அருணாசலத்துடனும் நெருக்கம் இருந்தது. ஆனால் அக்காலத்தில் இருந்த மணிக்கொடி இலக்கியக் குழுவினருடன் அவருக்கு அறிமுகமோ நெருக்கமோ இருக்கவில்லை.
சிறுகதைகள்
ஜெயகாந்தனின் சிறுகதைகளை இரண்டு காலகட்டங்களாக பிரிக்கலாம். சாந்தி, சரஸ்வதி இதழ்களில் அவர் எழுதியது தொடக்க காலகட்டம். 1959-ல் கம்யூனிஸ்டு கட்சியுடன் விலக்கம் கொண்டு காங்கிரஸ் ஆதரவாளராக மாறிய ஜெயகாந்தன் கல்கி, ஆனந்த விகடன் ஆகிய இதழ்களில் எழுத ஆரம்பித்தார். இக்காலகட்டத்தில் கண்ணதாசனுடன் நெருக்கம் உருவாகியது. ஆனந்த விகடனில் வெளிவந்த சிறுகதைகள் வழியாகவே ஜெயகாந்தன் பெரும் வாசகச் செல்வாக்கை அடைந்தார். அவை பொதுச் சமூகத்தின் அறவுணர்வையும் ஒழுக்கவுணர்வையும் சீண்டி மறுபரிசீலனை செய்யவைப்பவையாக இருந்தன. அவருடைய ‘யுகசந்தி’, ‘சுயதரிசனம்’, ‘குருபீடம்’ போன்ற கதைகள் அவரை சிந்தனையை நிலைகுலையச் செய்யும் எழுத்தாளராக பரவலாக அறிமுகம் செய்தன.
1958-ல் ஜெயகாந்தனின் ‘ஒருபிடிச் சோறு’ சிறுகதை தொகுதி ஸ்டார் பிரசுரம் வெளியீடாக வந்தது. 1960-ல் ‘இனிப்பும் கரிப்பும்’ என்னும் சிறுகதை தொகுதியும் 1965-ல் ‘புதிய வார்ப்புகள்’ என்னும் சிறுகதைத் தொகுதியும் வெளிவந்தன.
நாவல்கள்
ஜெயகாந்தனின் முதல் நாவல் 1957-ல் வெளிவந்த வாழ்க்கை அழைக்கிறது. ‘வடிவத்திலும் உள்ளடக்கத்திலும் எனக்கு எந்த நிறைவையும் அளிக்காத நாவல்’ என ஜெயகாந்தன் அதைக் குறிப்பிடுகிறார். ஜெயகாந்தனுக்கு பெரும்புகழை ஈட்டித்தந்த கதை 1968-ல் ஆனந்தவிகடன் இதழில் வெளிவந்த அக்னிப்பிரவேசம். அக்கதைக்கு உருவான எதிர்ப்பின் விளைவாக அவர் அதை மீண்டும் விரிவாக்கி சில நேரங்களில் சில மனிதர்கள் என்ற பேரில் 1973-ல் நாவலாக எழுதினார். அந்நாவல் அவருக்கு கேந்திரிய சாகித்ய அக்காதமி விருதைப் பெற்றுத்தந்தது. அதன் தொடர்ச்சியாக கங்கை எங்கே போகிறாள் என்ற நாவலையும் எழுதினார். ஜெயகாந்தனின் மிகச்சிறந்த நாவலாக 1973-ல் வெளிவந்த ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் கருதப்படுகிறது. ஒரு இலட்சியவாதியான நாடோடியின் வாழ்க்கையைச் சித்தரிக்கும் நாவல் இது.
கட்டுரைகள்
ஜெயகாந்தன் தமிழின் சிறந்த கட்டுரையாசிரியராகவும் அறியப்படுகிறார். ‘இவர்கள் உள்ளே இருக்கிறார்கள்’, ‘சிந்தையில் ஆயிரம்’, ‘ஓர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள்’, ‘ஓர் இலக்கியவாதியின் சினிமா அனுபவங்கள்’ ஆகியவை அவருடைய புகழ்பெற்ற கட்டுரைத் தொகுதிகள்.
காந்திய ஈடுபாடு
ஜெயகாந்தன் காந்திய ஈடுபாட்டால் ரொமெயின் ரொலேண்ட் எழுதிய காந்தியின் வாழ்க்கை வரலாற்றை மொழியாக்கம் செய்திருக்கிறார். அதை தொடர்ந்து காந்தியின் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டார். இந்தியாவில் மார்க்சியம் காந்திய சிந்தனைகளுடன் இணைந்து புதியவடிவம் எடுக்கவேண்டும் என்றும், காந்தியே இந்தியாவின் சாமானியர்களைப் புரிந்துகொண்டவர் என்றும் கருதினார். (சொல்புதிது பேட்டி-2000) ஓர் இலக்கியவாதியின் அரசியல் அனுபவங்கள் நூலில் எந்த அரசியலியக்கமும் தலைமறைவியக்கமாக நிகழக்கூடாது என்றும் அது பலவகையான ஒழுக்கமீறல்களையும் அறப்பிறழ்வுகளையுமே உருவாக்கும் என்றும், மக்களை நம்பியே அரசியலியக்கம் நிகழவேண்டும் என்பதை காந்தி காட்டினார் என்றும் ஜெயகாந்தன் சொல்கிறார்.
ஆன்மிகம்
ஜெயகாந்தன் தன்னை நாத்திகனாகவும் இடதுசாரி சிந்தனையாளராகவும் முன்வைத்துக்கொண்டவர். இந்தியாவின் நீண்ட மரபில் நாத்திகத்தன்மையுள்ள ஆன்மிகம் ஒன்று உண்டு என்றும் அதை இடதுசாரிச் சிந்தனைகள் உள்வாங்கி வளர்த்தெடுக்கவேண்டும் என்றும் கருதினார். சுவாமி விவேகானந்தர் எழுந்து வரும் உலகம் உழைப்பாளிகளுக்குரியது என்று சொன்னதை மேற்கோள் காட்டுவதுண்டு.
தமிழ் மரபில் சித்தர்கள், தாயுமானவர், வள்ளலார், பாரதி ஆகியோரின் ஆன்மிகத்தில் ஈடுபாடுள்ளவர். வேதம் என்பது ஒரு நூல் அல்ல, அழியாத அடிப்படை உண்மைகளின் சொல்வடிவமே என ‘வேதம் புதிது செய்வோம்’ என்னும் உரையில் குறிப்பிடுகிறார்.
ஜெயகாந்தனின் ஆன்மிக ஈடுபாடு தொடக்க கால மார்க்ஸிய ஆசிரியர்களால் மறுக்கப்பட்டது. ஆனால் ஜெயகாந்தன் கூறியவற்றையே பின்னாளில் தேவிப்பிரசாத் சட்டோபாத்யாய, கே.தாமோதரன், எஸ்.ஆர்.டாங்கே, ஈ.எம்.எஸ்.நம்பூதிரிப்பாடு போன்ற மார்க்ஸிய ஆசிரியர்கள் வந்தடைந்தனர்.
ஜெயகாந்தன் தன் ஆன்மிகநாட்டம் பற்றி 2011-ல் ஓம்சக்தி மாத இதழில் ஓர் இலக்கியவாதியின் ஆன்மிக அனுபவங்கள் என்னும் கட்டுரைத்தொடரை எழுதினார்.
இறப்பு
ஜெயகாந்தன் ஏப்ரல் 8, 2015 அன்று சென்னையில் மறைந்தார்.
விருதுகள்
- 1972 சாகித்திய அகாடமி விருது (சில நேரங்களில் சில மனிதர்கள் நாவலுக்காக)
- 1978 இந்திய சோவியத் ரஷிய நட்புறவு விருது (இமையத்துக்கு அப்பால் நூலுக்காக)
- 1978 தமிழக அரசு விருது (சிலநேரங்களில் சில மனிதர்கள் )
- 1986 தமிழக அரசு விருது ஜய ஜய சங்கர
- 1986 ராஜராஜன் விருது (சுந்தரகாண்டம் நாவலுக்காக)
- 2002 ஞானபீடம் விருது
- 2009 ரஷ்ய இந்திய கூட்டுறவு விருது
- 2009 பத்மபூஷன் விருது
ஆவணப்படங்கள்
- எல்லைகளை விஸ்தரித்த எழுத்து கலைஞன்’ – ரவி சுப்ரமணியன்
- ஜெயகாந்தன் ஆவணப்படம் – சா.கந்தசாமி (சாகித்ய அகாதமிக்காக)
ஆய்வுகள்
- எம். வேதசகாயகுமார் ’ புதுமைப்பித்தனும் ஜெயகாந்தனும் ஓர் ஒப்பாய்வு’
- ஜெயகாந்தன் இலக்கியத்தடம், ப.கிருஷ்ணசாமி,
- ஜெயகாந்தன் ஒரு பார்வை எஸ்.சுப்ரமணியன்
- ஜெயகாந்தனின் பர்ணசாலை – நவபாரதி
- ஜெயகாந்தன் ஒரு மனிதன் ஒரு உலகம்- தொகுப்பு மணா
- ஜெயகாந்தனும் நானும்- தேவிபாரதி
- ஜெயகாந்தன் கே.எஸ்.சுப்ரமணியன். இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசை
மனிதர்களை, இந்தியாவை, தமிழை நேசித்தவர். பிரிவினைகளை, பகைமைகளை, சிறுமைகளை தொடர்ந்துச் சாடியவர். கலாச்சாரம், மொழி என்று எந்த ரூபத்திலும் பாஸிஸத்தை எதிர்த்தவர். காந்தியை, பாரதியை, நேருவை, கம்பனை நேசித்த கம்யூனிஸ்ட். ஜெயமோகனின் வார்த்தைகளில் சொல்வதென்றால், ஜெயகாந்தன், வரும் தலைமுறைகளுக்கு, “ஆல் அமர்ந்த ஆசிரியன்”.