தமிழ்நாட்டின் பல்கலைகழகங்களில் வேந்தராகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

பல்கலை. மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கிய நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு பல்கலைக்கழகங்களில் வேந்தராகிறார் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் ஆளும் திமுக அரசுக்கும் தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது. இதற்கிடையே,  தமிழ்நாடு அரசு சார்பில் அனுப்பப்பட்டுள்ள மசோதாக்களைக் கிடப்பில் வைத்திருக்கும் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியின் செயல்பாட்டிற்கு எதிராகவும், கிடப்பில் வைத்திருக்கும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு உடனே உத்தரவிடக் கோரியும் உச்சநீதிமன்றத்தில் கடந்த 2023ம் ஆண்டு தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இம்மனுவின் மீதான விசாரணை நடைபெற்று முடிந்த நிலையில் இன்று நீதிபதிகள் ஜெ.பி.பர்திவாலா, ஆர்.மகாதேவன்அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது. அதில் நீதிபதிகள் தெரிவித்ததாவது.

“ அரசியல் சாசன பிரிவு 200ன் படி ஆளுநருக்கு எந்த மாதிரியான முடிவெடுக்கும் அதிகாரம் உள்ளது என்பது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்க உள்ளோம். ஆளுநர் ஒப்புதலை நிறுத்தி வைத்தால், அவர் பிரிவு 200ன் முதல் நிபந்தனையில் குறிப்பிடப்பட்டுள்ள நடவடிக்கையை வெகு விரைவாக பின்பற்ற வேண்டும்.

முழுமையான வீட்டோ” அல்லது “பாக்கெட் வீட்டோ” என்ற கருத்து அரசியலமைப்பில் இடம் பெறவில்லை. மசோதா ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்படும் போதெல்லாம், அவர் பிரிவு 200 இல் வழங்கப்பட்ட நடவடிக்கைகளில் ஒன்றைப் பின்பற்ற வேண்டும் அது அவரது கடமை.

மாநில அரசின் ஆலோசனைக்கு மாறாக மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப நிறுத்தி வைத்தால், ஆளுநர் அதிகபட்சம் மூன்று மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும். *ஆனால் பொது விதியாக, ஆளுநர் ஒரு மாநில அரசின் ஆலோசனையின்படி செயல்பட வேண்டும். Governor under the 1935 became unavailable on the implementation of the Constitution.

10 மசோதாக்கள் கிடப்பில் போட்ட ஆளுநர் செயல்பாடு சரியானது அல்ல. அரசியலமைப்பு 200ன் கீழ் ஆளுநரின் முடிவு என்பது நீநிமன்ற ஆய்வுக்கு உட்பட்டதே. மாநில சட்டமன்றத்தால் மறுபரிசீலனை செய்யப்பட்டு அனுப்பிய 10 மசோதாக்களை குடியரசு தலைவர் பரிசீலிக்க ஒதுக்குவது சட்டவிரோதமானது. மாநில அரசின் செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாக ஆளுநர் இருக்கக்கூடாது.

ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் தாமதப்படுத்தியதைக் கருத்தில் கொண்டு 10 மசோதாக்களும் ஆளுநருக்கு அனுப்பப்பட்டபோதே சட்டமாக நடைமுறைக்கு வந்துவிட்டன  இந்த விவகாரத்தில் பிரிவு 142 இன் கீழ் உச்சநீதிமன்ற அதிகாரத்தைப் பயன்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை எனவும் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

உச்சநீதிமன்ற ஒப்புதல் வழங்கிய 10 மசோதாக்கள் :

தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் திருத்த மசோதா, 2020

தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழக திருத்த மசோதா, 2020

தமிழ்நாடு பல்கலைக்கழக சட்டங்கள் திருத்த மசோதா, 2022

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் திருத்த மசோதா, 2022

தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம், சென்னை திருத்த மசோதா, 2022

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் திருத்த மசோதா, 2022

தமிழ்நாடு பல்கலைக்கழகச் சட்டங்கள் (இரண்டாவது திருத்தம்) மசோதா, 2022

தமிழ்நாடு பல்கலைக்கழகம் (இரண்டாவது திருத்தம்) மசோதா, 2022

தமிழ்நாடு மீன்வளப் பல்கலைக்கழகம் (திருத்தம்) மசோதா, 2023

தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம் (திருத்தம்) மசோதா, 2023

தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாக்களுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளதால் இனி தமிழ்நாட்டில் உள்ள அரசு பல்கலைகழங்களில் இனி வேந்தராக தமிழ்நாடு முதலமைச்சரே செயல்படுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பல்கலை. தொடர்பான மசோதாவுக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் வழங்கிய நிலையில் வேந்தர் பொறுப்பிலிருந்து ஆளுநர் விடுவிக்கப்படுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!