போரூரில் கனவுத் தொழிற்சாலை!

சென்னையில், எழுத்தாளர் மடிப்பாக்கம் வெங்கட் வசிக்கும் ஏரியா எதுன்னு சரியா சொல்லுங்க, பார்க்கலாம்!

மடிப்பாக்கமா…? அதான் இல்லே. அவர் வசிப்பது கோவிலம்பாக்கத்தில்.

பாம்பே ஜெயஸ்ரீ சென்னைக்கே வந்து செட்டிலானாலும், கல்கத்தா போய் செட்டிலானாலும் அல்லது வெளிநாட்டுக்கே போய் செட்டிலானாலும் அவங்க எப்பவும் ‘பாம்பே’ ஜெயஸ்ரீதான். பாம்பே மும்பையானாலும் அவங்க இப்பவும் ‘பாம்பே ஜெயஸ்ரீ’தான்.

அது மாதிரிதான் வெங்கட் எங்கே வசித்தாலும், அவர் எப்போதும் போல் மடிப்பாக்கம் வெங்கட்டாகத்தான் இருக்கிறார். பெயரில் மட்டுமல்ல, குணத்திலும் பழகும் தன்மையிலும் அவர் அன்றைக்கு எப்படி எல்லோர்க்கும் இனியவராக இருந்தாரோ, அப்படியேதான் இன்றைக்கும் இருக்கிறார்.

அவரின் ‘கனவு தொழிற்சாலை’ புத்தக வெளியீட்டு விழாவுக்கு என்னையும் பேச அழைத்திருந்தார்.

சிரிப்பையே ‘ஸிரப்’பாகப் பிரிஸ்கிரிப்ஷனில் எழுதித் தரும் எழுத்தாள டாக்டர் பாஸ்கரன் ஜெயராமனுடன் (பொதுவாக டாக்டர்களின் எழுத்து நன்றாக இருக்காது என்று சொல்வதுண்டு. ஆனால், டாக்டர் பாஸ்கரன் விதிவிலக்கு. அவரின் எழுத்தும் அழகு; எழுத்து நடையும் ஓஹோ!) அவரின் காரில் தொற்றிக்கொண்டு (வழியில் இணைந்துகொண்டார் ‘நகைச்சுவைத் திலகம்’ நாடகாசிரியர் கல்லிடை எஸ்.எல்.நாணு.) விழா நடக்கும் போரூர் ஃபோம்ரா ஹவுஸுக்குச் சென்று இறங்கினேன்.

இந்தப் புத்தகம் பற்றி நகைச்சுவைத் தேன் கலந்து சிறப்புரையாற்றிய டாக்டர் பாஸ்கரன் ஜெயராமன், புத்தகத்தை எம்.ஆர்.ஐ. ஸ்கேன் செய்து, முழுமையாக டயக்னோஸ் செய்து, அதன் சிறப்புகளைப் புட்டுப்புட்டு வைத்து, முழு ஆரோக்கியமாக இருப்பதாக சர்ட்டிஃபிகேட் தந்துவிட்டார்.

அதன்பின் பேசிய சப்தரிஷி, தனது அனுபவங்களை இந்தப் புத்தகத்தில் உள்ள மடிப்பாக்கத்தாரின் அனுபவங்களோடு பின்னிப் பிணைந்து பேசியது வித்தியாசமாகவும் சுவாரஸ்யமாகவும் இருந்தது.

நான் என் பேச்சினிடையே, புத்தகத் தலைப்பில் ‘த்’ விட்டுப் போனது பற்றிக் குறிப்பிட, ‘த்’தைத் தவிர்(த்)தது ஏன் என்பதற்கு அழகான விளக்கம் சொன்னார் ‘கவிச்சுடர்’ தயாளன் வெங்கடாசலம்.

நாப்பது, அம்பது வருஷங்களுக்கு முன்னால நடந்ததையெல்லாம் எப்படி இவ்வளவு துல்லியமாக ஞாபகம் வெச்சுக்கிட்டு எழுதியிருக்கார் மடிப்பாக்கம் வெங்கட்டுனு எனக்கு ஆச்சரியமா இருக்கு. பழைய திருவல்லிக்கேணி, பார்த்தசாரதி கோயில், மீசை வைத்த பெருமாள், ரங்கநாதன் ஸ்ட்ரீட், மாம்பலம் ரயில்வே ஸ்டேஷன், கூடுவாஞ்சேரி, அதுக்குப் போறதுக்கான டிரெயின், பஸ் ரூட்டுனு அந்தக் காலத்து விஷயங்களையெல்லாம் ஏதோ நேத்துப் பார்த்த மாதிரி, விலாவாரியா நுணுக்கமா எழுதிட்டுப் போறார். இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது, டைம் மெஷின்ல ஏறி அந்தக் காலத்துக்கே போயி, கொஞ்ச காலம் வாழ்ந்துட்டு வந்த மாதிரி ஒரு ஃபீலிங்!

முழுக்க முழுக்க ஒரு தொழிற்சாலையில் அவர் வேலை செய்த அனுபவங்களைத்தான் எழுதியிருக்கார். பொதுவா, தொழிற்சாலைன்னாலே எனக்கு அது ஒரு டிரை சப்ஜெக்டாகத்தான் தோணும். மெஷின்கள் ஓடுற சத்தம், அந்தச் சத்தத்துல மத்தவங்க பேசுறது கேக்காது. அதுக்காகவே எல்லாரும் கத்திக் கத்திப் பேசுவாங்க; அந்த இரைச்சல், தூசி, கிரீஸ், கெரசின் நெடி… யப்பா! ஆனா, இந்தப் புத்தகத்தைப் படிச்சப்போ, நானும் கொஞ்ச நாள் போய் ஒரு தொழிற்சாலையில் வேலை பார்த்திருக்கலாமோ, அந்த அற்புதமான அனுபவத்தை மிஸ் பண்ணிட்டோமோனு இப்போ வருத்தமா இருக்கு; ஆத்தாமையா இருக்கு. அவ்வளவு ஆசை ஆசையா அனுபவிச்சு எழுதியிருக்கார் மனுஷன்!

‘மகிழ்ச்சியாக இருக்கிறது எளிமையானது; ஆனா, எளிமையா இருக்கிறது எளிமையானது இல்லை; அது ரொம்பக் கடினமானது’ன்னு சொல்லுவார் ரவீந்திரநாத் தாகூர். அதே போல, இயல்பாக நடக்கற விஷயங்களை, அந்த இயல்புத் தன்மை மாறாம, அதே இயல்பான நடையில எழுதறதும் சுலபமில்லை. எழுதிப் பார்த்தவங்களுக்கு நான் சொல்றதில் உள்ள உண்மை புரியும். ஆனா, வெங்கட் இதுல ஜெயிச்சுட்டார். ஒவ்வொரு அனுபவத்தையும் ரொம்ப யதார்த்தமாக எழுதிட்டே போயிருக்கார்.

பெரியவர் என்.ஆர்.சம்பத் பேசியதுதான் ஹைலைட்! தனக்கும் மடிப்பாக்கத்தாருக்கும் உள்ள நட்பைச் சிரிக்கச் சிரிக்கச் சொல்லி, அந்த ஹாலையே 8 ரிக்டர் அளவுக்கு அதிரச் செய்துவிட்டார். சிரித்துச் சிரித்து வயிற்று வலியே வந்துவிட்டது. அவ்வளவு முதிய வயதிலும் கொஞ்சம்கூடச் சளைக்காமல், தடுமாறாமல், அவர் கலகலப்பாகப் பேசியது நிச்சயம் ஒரு சாதனைதான்! பெரியவர் சம்பத்தின் பேச்சாற்றலுக்கு பிரமிப்போடு தலைவணங்குகிறேன்.

இந்தப் புத்தக வெளியீட்டு விழாவில் லா.ச.ரா.சப்தரிஷி, ‘திடீர் சர்ப்ரைஸ் விசிட்’ வேதா கோபாலன், ‘நட்பின் இலக்கணம்’ என்.சி.மோகன்தாஸ், ‘பால்யூ’வின் அன்பு மகன் கணேஷ், ஆர்.சி.நடராஜன், ‘கவிச்சுடர்’ தயாளன் வெங்கடாசலம், ‘மலர்வனம்’ ராம்கி, ‘நவீன சிவசங்கரி’ லதா சரவணன், அகிலா ஜ்வாலா, இந்த நிகழ்ச்சியை அழகிய மாலை போல் தொடுத்து, தொகுத்து வழங்கிய கீத்மாலா ராகவன், நன்றியுரையைப் புதுமையான முறையில், கம்பீரமான குரலில் முழங்கிய… ஸாரி, வழங்கிய டி.என்.ராதாகிருஷ்ணன் என அனைவரையும் சந்தித்துப் பேசியது மனசுக்கு நிறைவு தந்த விஷயம்.

இந்த நாள் இன்னொரு விதத்திலும் இனிய நாள்; புண்ணிய நாள். ஆம். ஸ்ரீராம நவமியன்றுதான் இந்தப் புத்தக வெளியீட்டு விழா நடந்தது. பானகம் கொடுத்து வரவேற்றிருக்கிறார்கள். நான்தான் பானகத்தை மிஸ் செய்துவிட்டேன். செவிக்குணவு எடுத்துக்கொண்டு திருப்தியுற்ற தருணத்தில், வயிற்றுக்கும் ரசனையான சிற்றுண்டி வழங்கப்பட்டது. இதன் முத்தாய்ப்பாகவும் சுவையான பாதாம் பால் வழங்கப்பட்டதாம்! போச்சு… அதையும் நான் கோட்டை விட்டுவிட்டேன்.

ஆனால், இன்னொரு சிறப்பான விஷயத்தை நான் மிஸ் பண்ணவில்லை என்பது சந்தோஷம். அன்றைய தினம் ஸ்ரீராம நவமி என்பதை மனதில் கொண்டு, வெங்கட்டின் ‘வீட்டம்மா’ முன்யோசனையோடு ஒரு யோசனையை முன்வைக்க, அதை கப்பென்று பிடித்துக்கொண்டு நிறைவேற்றியிருக்கிறார் வெங்கட்.

ஸ்ரீராமபிரானின் அன்புத் தூதனான அனுமனுக்கு அருகில் உள்ள கோயிலில் பூஜை செய்து, வடை மாலை சார்த்தி, அந்தப் பிரசாதங்களைக் கொண்டு வந்து, அனைவருக்கும் விநியோகித்தார் வெங்கட்.

யோசனை சொன்ன திருமதி வெங்கட்டுக்கு நெகிழ்வுடனும், அதைச் சிரமேற்கொண்டு அக்கறையுடன் செயல்படுத்திய வெங்கட்டுக்கு மகிழ்வுடனும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

‘நல்லாரைக் காண்பதுவும் நன்றே, நலமிக்க

நல்லார்சொல் கேட்பதுவும் நன்றே

நல்லார் குணங்கள் உரைப்பதுவும் நன்றே

அவரோடு இணங்கி இருப்பதுவும் நன்று’ – என்னும் ஔவையின் வாக்கை அனுபவபூர்வமாக உணர்ந்து மகிழ்ந்த தினம் ஏப்ரல் 6.

இந்த கட்டுரை எழுதியது உங்கள் ரசிகன் ரவிபிரகாஷ் அவர்கள் கவிதை எழுதியது கவிச்சுடர் தயாளன் ​அவர்கள்

வாழ்த்துக் கவி​தை

எண்பதுகளிலேயே எண்ண சோர்வை நீக்கும் நகைச்சுவையை எழுத்துக்களில் நமக்களித்தார்.

படம் பார்க்கும் பாமரனாய் இருந்தாலும், பட்டம் படித்த படிப்பாளியாக இருந்தாலும் பத்திரிகைகள் தான் அனைவரின் பொழுது போக்காக இருந்தது.

வரிசை கட்டிய பத்திரிக்கைகள் அனைத்திலும் வளமான எழுத்துக்களால் வகை வகையான தலைப்புகளில் எழுதி மகிழ்வித்துக் கொண்டிருக்கும் என் அன்பு நட்பை வாழ்த்தி மகிழ்கின்றேன்.

பார்த்த முதல் நாளும் பேசிய முதல் வார்த்தையும் நட்பினை சொல்லும் நெஞ்சத்தினில் நீங்கா நினைவுகளாய் நீள்கிறது.

எங்கோ மலர்ந்த மலரின் வாசத்தை கடத்தும் காற்றினைப் போல எங்கோ வங்கி அதிகாரியாக இருந்த என்னை வாசகனாய் அறிமுகப்படுத்தி எழுத்தாளனாக அரியணை ஏற்றிய  பெருமைமிகு பேரன்பாளர்

கடலின் அலைகளோ கரையில் கரைகிறது. நீரில் அலைகளோ காற்றில் கலைகிறது நெஞ்சின் நினைவலைகளோ காலத்தால் அழியாத காவியம் ஆகிறது. மடிப்பாக்கம் வெங்கட் அவர்களின் மகத்தான நினைவலைகளோ மரகத வீணையாய் மெல்லிசை மீட்டுகிறது.

வெளியிடும் புத்தகத்தின் அட்டை படத்தில் ஏனோ மனம் லயிக்கிறது. உள்ளேடுகளில் உள்ளதை உணர்வுகளாய் உணர்த்துவது அட்டைப்படம் அன்றோ

கர்ணனின் கவச குண்டலம் போல தோளில் சுமந்த பையுடன் தொலைதூரப் பார்வை

முதுகின் பின்னாலும் தெரிகிறது தொலைந்த கனவுகளின் ஏக்கப்பார்வை.

மூலப் பொருளை முடிவுற்றதாய் மாற்றுவது தானே தொழிற்சாலை.

ஆழ்மன எண்ணங்கள் கனவுகளாய் விரிவடைந்து செயல்களாய் முடிவதுதான் கனவு தொழிற்சாலை சிறு முதலீடுகள் தொழிற்சாலைகள் ஆவதில்லை.

மடிப்பாக்கம் வெங்கட் அவர்களின் சிந்தனைகள் என்னும் பெரு முதலீட்டில் உருவான கனவு தொழிற்சாலையில் அனுபவங்களும் ஆச்சரியங்களும் உற்பத்தி ஆகின்றன.

வாழ்த்துரைக்க காத்திருப்போர் பட்டியல் நீள்வதால் வாழ்த்துரைத்த நான் வாழ்த்துரைத்த வார்த்தைகளுக்கு அணை போட்டு அன்பின் பெருவெள்ளமாய் நன்றியினை கூறுகிறேன்.

4 thoughts on “போரூரில் கனவுத் தொழிற்சாலை!

  1. மடிப்பாக்கத்தாருக்கு சாப்பாட்டில் மட்டும் ரசனை இல்லை; எழுத்திலும் நல்ல ரசனை என்பதை அவரின் “கனவு தொழிற்சாலை” புத்தகம் நிரூபித்திருக்கிறது. அதன் வெளியீட்டு விழாவின் விவரணையை திருமதி லதா சரவணன் மிகவும் அழகாக படம்பிடித்துக் காட்டியிருக்கிறார். பாராட்டுக்கள்!

  2. அழகாக அமைந்த விழா. பேசியவர் அனைவரும் இதயத்திலிருந்து பேசினர். வாழ்த்துக்கள் வெங்கட்ஜி!💐

  3. இந்த நிகழ்வைப் பற்றிய செய்தியைப் பகிர்ந்தமைக்கு பாராட்டுகள். பலருக்கும் இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். உங்கள் முயற்சிக்கு என் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். தொடர்ந்து இதுபோன்ற பயனுள்ள தகவல்களைப் பகிர என் முன்வாழ்த்துக்கள்!

  4. ஏப்ரல் 6ஆம் தேதி ராமநவமியன்று மடிப்பாக்கம் வெங்கட் சாரின் கனவு தொழிற்சாலை புத்தக வெளியீடு நடந்தது.புத்தக வெளியீட்டிற்காக வந்த பிரபலங்கள் அனைவரையும் , மின் புத்தகங்களில் அழகாக வரிசைப்படுத்தி விட்டார்கள்.அவர்கள் அனைவரும் வெங்கட் சாரின் “கனவு தொழிற்சாலை”புத்தகம் பற்றி தங்களது மேன்மையான விமர்சனங்களை பன்னீர் மரங்கள் பூச்சொரிந்து நாலாம் புறமும் வாசனையை தூவி மனதிற்கு இதம் தருவது போல் தந்துவிட்டார்கள்.

    நான் மத்யமர் தளத்தில் பதிவுகள் செய்துவருகிறேன்.என்போல் பலரும் இந்த புத்தகம் வெளியீட்டில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.ஞாயிற்றுகிழமை பல்வேறு நடவடிக்கைகளை அனைவரும் வைத்திருந்தாலும், வெங்கட் சாரின் மீது கொண்ட பாசத்தால் அனைவரும் வந்திருந்ததே உண்மை.

    கனவு தொழிற்சாலை புத்தகத்தை பற்றி கூற வேண்டும் என்றால் வெங்கட் சாரின் வாழ்வின் பயணத்தை அப்படியே படம் பிடித்து காட்டியுள்ளார்.திருவல்லிக்கேணியில் ஆரம்பித்து காட்டாங்குளத்தூர் வரையிலான தன்பணிக்குச் செல்லும் அனுபவங்களை மட்டும் அல்ல,அதில் இடையே சந்திக்கும் மனிதர்கள், நிகழ்வுகள், எல்லாவற்றையும் 40வருடத்திற்கு பின்னோக்கி சென்று அழகாக வடித்துள்ளார்.
    நடுத்தர வர்க்கத்தின் சாமானியனின் அன்றாட அலுவல்களை எப்படி எல்லாம் சாமாளித்து தன் பணியைத் தக்க வைக்கிறான் என்பதையும்,தன் தாய், தந்தையர்கள் பிள்ளைகளை கள்ளம்கபடமின்றி பராமரித்த விதத்தையும், தொழிற்சாலையில் இரவு நேரப் பணியாளர்கள் செய்யும் வேலைகளின் தன்மையையும்,அந்த வேலையைத் தக்க வைக்க அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் படம்பிடித்து காட்டியுள்ளார்.காட்சிகளின் விரிவையும் நம் கண்முன்னே கொண்டு வந்துள்ளது மிகவும் சிறப்பு.சில பக்கங்கள் தான் படித்துள்ளேன்.மிகவும் சுவராஸ்யமான தகவல்களை தந்துள்ளார்.

    திரைப்படங்களுக்கு , பொழுதுபோக்கு அம்சங்களுக்கும் செலவழிக்கும் நாம் நல்ல நூல்களை தேடி ஓடுவதில்லை.எழுத்தாளர்கள் அதிகம் வெளியே தெரிவதில்லை.அவர்கள் படைப்புகளுக்கும் மரியாதை செய்வது மிகவும் அவசியம்.நல்ல நூல்கள் நல்ல நண்பர்களுக்கு சமமானவை.

    மடிப்பாக்கம் வெங்கட் சாரின் கனவு தொழிற்சாலை புத்தகம் வாங்கி பயன்பெறுங்கள்.அக்கால சென்னையை தனக்கு உரிய பாணியில் எழுதியுள்ளார்.படிக்கும் போதே நாமும் அந்தந்த இடங்களுக்கு சென்று வருவோம் என்பதே பேருண்மை.துணுக்குகள், ஜோக்ஸ் எழுதிய வெங்கட் சார் புத்தகம் வெளியிட்டிருப்பது அருமை.வாசகர்கள் உங்கள் ஆதரவினை தொடர்ந்து அளித்தால் எழுத்தாளர்கள் இன்னும் மேன்மை பெறுவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!