மறைந்து வரும் மங்கல இசை

 மறைந்து வரும் மங்கல இசை

மறைந்து வரும் மங்கல இசை – வழங்குபவர் சிவராமகிருஷ்ணன்

மிழகர்களுக்கு தனித்துவம் மற்றும் சிறப்புமிக்க பாரம்பரியம், பண்பாடுகள், நாகரீகங்கள், அடையாளங்களும் உண்டு என்பதில் ஐயமில்லை.

ஆலய வழிபாடு தொடங்கி, ஆடல் பாடல் கலைகள், ஆடை அணிகலன்கள், இலக்கணம்-இலக்கியம் என எதை எடுத்தாலும் அதில் தமிழர்களின் தனித்தன்மை தெரியும் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

அவ்வகையில் தமிழர்களுடைய அடிப்படை அடையாளங்களில் ஒன்று மங்கல இசை.

ஸ்ருதியும் லயமும் மிகச்சிறந்த வகையில் ஒருங்கிணைந்து சுகமான ஒரு இசையைத் தருவதில் மங்கல இசைக் கருவிகள் என்றழைக்கப்படும் நாகஸ்வரம் மற்றும் தவிலுக்கு தனி இடமுண்டு.
ஆலயமும் இசையும்

ஆலயங்களை ஒட்டி வளர்ந்த தமிழர்களின் வாழ்க்கை முறையில், மங்கல இசைக்கு ஒரு முக்கிய இடம் என்றுமே இருந்துவந்துள்ளது.

அது ஆலயத் திருவிழாக்களாக இருந்தாலும் சரி இல்லத் திருவிழாக்களாக இருந்தாலும் சரி அல்லது எவ்விதமான மங்கலச் செயல்பாடுகளிலும் சரி நாகஸ்வரம் தவில் இல்லாமல் அந்த நிகழ்வு முழுமை பெறாது என்பது உண்மை.

சிறப்பான சொற்கட்டுகள், கற்பனைச் ஸ்வரங்கள், வாசிப்பதில் ஒரு தனிச் சிறப்பு, சவால்கள், ஈர்ப்பு போன்ற பல பெருமைகள் நாகஸ்வரம் தவிலுக்கு உண்டு.

ஆனால் பல நூற்றாண்டு காலமாக, தமிழர் கலாச்சாரத்திலும் சமூக வாழ்விலும், பெரும்பங்கு வகித்த நாகஸ்வரம் மற்றும் தவில் இசையின் தற்போதைய நிலை என்ன? எதிர்காலம் எப்படியுள்ளது போன்றவற்றை ஆராய்கிறது பிபிசி தமிழோசை.

இத்தொடரின் முதல் பகுதியில் இந்தக் கலையின் எதிர்காலம், மற்றும் வாத்தியத் தயாரிப்பாளர்கள், இசை ஆர்வலர்கள் ஆகியோரில் சில கருத்துக்களைக் கேட்கலாம்.

இந்தியா சுதந்திரம் அடைந்து நேரு பிரதமராகப் பதவியேற்ற சமயம் முதலில் வாசிக்கப்பட்ட மங்கல இசை நாகஸ்வரம்.

தமிழர்களின் மங்கல இசையான நாகஸ்வரம் மற்றும் தவில் பல நூற்றாண்டுகள் நீடித்து வாழும் இசைக் கருவிகள்.

சங்க இலக்கியம் முதற்கொண்டு சிலப்பதிகாரம் வரை, இந்த மங்கல இசைக் கருவிகள் தொடர்பான சான்றுகள் பதியப்பட்டுள்ளன என்கிறார்கள் தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில் பல ஆண்டுகள் ஆய்வு செய்துள்ள குடவாயில் பாலசுப்ரமணியம் மற்றும், மதுரை இசை ஆர்வலரும் ஆய்வாளருமான நா.மம்மது ஆகியோர்.

காலவோட்டத்தில் வடிவமைப்பில் பல மாறுதல்களை கண்டிருந்தாலும், அடிப்படை அமைப்பில் நாகஸ்வரம் உருமாறவில்லை எனக் கூறும் மூத்த இசை அறிஞரும், மங்கல இசை மன்னர்கள் எனும் நூலை எழுதியவருமான பி.எம்.சுந்தரம் அவரகள், நாதஸ்வரமா அல்லது நாகஸ்வரமா எனும் கேள்விக்கு இந்த நிகழ்ச்சியில் பதிலளிக்கிறார்.

 

இந்தியாவில் பெரும்பாலும் ஆலயங்களை ஒட்டியே வளர்ந்த மங்கல இசைக்கு சாதிகளைக் கடந்து தமிழ் சமூகத்தில் முக்கியமானதொரு இடமுள்ளது என்பதற்கு பல சான்றுகள் உள்ளன.

மங்கல இசை மரபு மற்றும் கலாச்சாரம் தமிழகத்தில் மட்டுமன்றி இந்தியா முழுவதும் எல்லைகளைக் கடந்து பல்வேறு வகைகளிலும் வடிவங்களிலும் வியாபித்துள்ளன.

இந்து மதத்தில் பல வாத்தியங்கள் பல தெய்வங்களுடன் தொடர்புபடுத்தப்பட்டுள்ளன. உதாரணமாக கலைமகளுடன் வீணையும், கிருஷ்ணருடன் புல்லாங்குழலும் பொருத்திப் பார்க்கப்படுகின்றன.

ஆனால் அந்த தெய்வங்களுக்கான ஆலயங்களில் வீணையோ, புல்லாங்குழலோ ஆலய நிகழ்வுகளில் இசைக்கப்படுவதில்லை. மாறாக எந்த தெய்வத்துக்குரிய ஆலயமாக இருந்தாலும் மங்கல இசை என்பது அந்த ஆலய நிகழ்வுகளுடன் நெருங்கியத் தொடர்பு கொண்டதாகவுள்ளது.

வேறெந்த இசைக் கருவிகளுக்கும் இல்லாத தனிச் சிறப்பு தென் இந்தியாவில் மங்கலை இசை வாத்தியங்களான நாகஸ்வரம் மற்றும் தவிலுக்கும், வட இந்தியாவில் ஷெஹனாய் மற்றும் தபலாவுக்கும் உள்ளன என்று பல ஆய்வுகள் கூறுகின்றன.

கருவிகளின் வகைகள்

இந்தியாவில் இசைக் கருவிகள் மூன்று பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளன என்று ஆய்வுகளும் சான்றுகளும் காட்டுகின்றன.

மங்கல நிகழ்வுகள், அமங்கல நிகழ்வுகள் மற்றும் போர்க்களத்தில் வீர உணர்வுகளை ஏற்படுத்தக் கூடிய இசைக் கருவிகள் என அவை பிரிக்கப்பட்டுள்ளன.

நாகஸ்வரத்தின் வடிவமைப்பும் தொடர்ச்சியாக பல மாறுதல்களைக் கண்டுள்ளன.

மங்கல இசை என்பது பேசக்கூடிய சங்கீதம் என வல்லுநர்கள் கூறுகிறார்கள். இசை நூல்களும் இதற்கு சான்றாக உள்ளன.

தமிழிசையின் ஒரு மிக முக்கிய அங்கமாக உள்ள ஆலாபனையின் தாய் என்று மங்கல வாத்தியங்களான நாகஸ்வரம் மற்றும் தவில் இசை கருதப்படுகிறது.

மங்கல இசை ஆலயங்களுடன் மிகவும் நெருக்கமான தொடர்புகளைக் கொண்டிருந்தாலும், ஆலயத்தின் உள்ளே வாசிக்கப்படுவதைவிட வெளியேயே அதிகமாக வாசிக்கப்படுகிறது.

ஆலயங்களை ஒட்டி பெருமளவில் வளர்ந்த மங்கல இசையை கோவிலின் உற்சவ காலங்களில் வாசிப்பதற்கு என சில முறைகள் வகுக்கப்பட்டிருந்தன. இன்று மிகக் குறைவான ஆலயங்களிலேயே இந்த மரபு பின்பற்றப்படுகிறது.

நாகஸ்வரம் மற்றும் தவில் என்பது வெகுஜன மக்களுக்கான ஒரு வாத்தியமாகவே நீண்டகாலமாக இருந்து வந்துள்ளது. மங்கல இசைப் பாரம்பரியம் என்பது மிகவும் புனிதமானதாகவும் கருதப்படுகிறது.

நாகஸ்வரம் மற்றும் தவில் இசைக்கென தனியான இலக்கணங்களும் வாசிப்பு முறைகளும் உள்ளன.

ரக்தி வாசிப்பு, மல்லாரி போன்றவை நாகஸ்வர இசைக்கு மட்டுமே உரியவை என தமிழிசை அறிஞர்கள் கூறுகிறார்கள்.

மங்கல இசையை பயிற்றுவிப்பதற்கும், பயிலுவதற்கும் மிகவும் பெரிய அளவிலான ஆர்வமும், பொறுமையும் தேவை என்பது வல்லுநர்களின் கருத்து.

மிகப்பெரிய பாரம்பரியமும், ஆதரவும் பெற்றிருந்த இந்த உன்னதக் கலையின் இன்றைய நிலை மிகவும் கவலையளிக்கக் கூடிய நிலையில் உள்ளது என பலக் கலைஞர்கள் வருந்துகின்றனர்.

admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...