பாரம்பரியமான பழைய பயண நிறுவனம் திவாலானது
உலகின் மிகவும் பழமையான தாமஸ் குக் என்ற பிரிட்டன் பயண நிறுவனம் திவாலானது. அந்த நிறுவனத்தின் மூலம் வெளிநாடுகளுக்குச் சென்ற ஒன்றரை லட்சத்துக்கும் மேற்பட்டோரை திரும்ப அழைத்து வரும் நடவடிக்கையை அந்நாட்டு அரசு துரிதப்படுத்தியுள்ளது.
1841 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட தாமஸ் குக் என்ற பயண நிறுவனத்தில், 21 ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர்.
தாமஸ் குக் நிறுவனத்திற்குச் சொந்தமாக 16 நாடுகளில் உணவகங்கள், விடுதிகள் உள்ளன. ஓராண்டில் சராசரியாக ஒரு கோடியே 90 லட்சம் வாடிக்கையாளர்களை, விமானங்கள் மூலம் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா அழைத்துச் சென்ற பெருமையை பெற்றது தாமஸ் குக். அந்த நிறுவனத்தின் கடன் சுமை 15 ஆயிரம் கோடி ரூபாயாக அதிகரிக்கவே, நெருக்கடியும் அதிகரித்தது.
கடன் கொடுத்த நிறுவனங்கள் நெருக்கடி கொடுக்கவே தனது பங்குதாரரான சீனாவின் Fosun நிறுவனத்தை தாமஸ் குக் நாடியது. சுமார் 8,000 கோடி ரூபாய் நிதி உதவி அளிக்க அந்த நிறுவனமும் ஒப்புக் கொண்டது. ஆனால் கடைசி நேரத்தில் மேலும் ஆயிரத்து 700 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என கடன் கொடுத்த நிறுவனங்கள் வற்புறுத்தவே, வேறு வழியின்றி தவித்த தாமஸ் குக், திவால் என அறிவித்தது.
இதுதொடர்பாக பேசிய அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி பீட்டர் ஃபேங்கவுசர், தங்களது லட்சக்கணக்கான வாடிக்கையாளர்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார். இது தாமஸ் குக் நிறுவனத்தின் சோக நாள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். தாமஸ் குக் நிறுவனம் திவாலானதால், 21 ஆயிரம் ஊழியர்களின் வேலை வாய்ப்பு கேள்விக்குள்ளாகியுள்ளது.
மேலும் அந்நிறுவனத்தின் மூலம் வெளிநாடுகளுக்குச் சுற்றுலா சென்ற லட்சக்கணக்கானோர் தவித்து வருகின்றனர். வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்றவர்களில் ஒன்றரை லட்சம் பேர் பிரிட்டன் குடிமக்கள் ஆவர். அவர்களை, மீட்டு தாயகம் அழைத்து வருவதற்கான நடவடிக்கையில் பிரிட்டன் அரசு இறங்கியது.
பயணத் திட்டம் ஏதும் வகுக்கப்படாத சார்ட்டர் ரக விமானங்கள் தயார் நிலையில் உள்ளதாகவும் அடுத்த இரு வாரங்களில், தாமஸ் குக் மூலம் வெளிநாடு சென்ற குடிமக்கள் மீட்டு அழைத்து வரப்படுவர் என்றும் பிரிட்டன் போக்குவரத்து அமைச்சகமும், விமானப் போக்குவரத்து ஆணையமும் தெரிவித்துள்ளது.
தாமஸ் குக் நிறுவனம் திவாலாகி விட்டதால், அதன் போட்டி நிறுவனங்களான ரயன் ஏர் (Ryanair), ஈசி ஜெட்டின் பங்குகளின் விலை ஏற்றம் கண்டது. ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக தொடக்கத்தில் ரயன் ஏரின் பங்குகளின் விலை 2 விழுக்காடு அளவுக்கும், ஈசி ஜெட்டின் பங்குகளின் விலை 5 விழுக்காடு அளவுக்கும் உயர்ந்தன. ஜெர்மனியின் TUI நிறுவனத்தின் பங்குகளின் விலையும் 6 விழுக்காடு அளவுக்கு உயர்ந்தது.
தாமஸ் குக் நிறுவன வாடிக்கையாளர்கள் 8 லட்சம் பேர் வெளிநாடுகளில் உள்ளதால், அவர்களை மீட்டு தாயகம் அழைத்து வரும் விமானங்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஸ்பெயினின் மெனோர்கா விமான நிலையத்தில் (Menorca, Spain) கூட்டம் அலைமோதுகிறது. விமானங்களுக்கு பற்றாக்குறை நிலவுவதால் பிரிட்டனின் ஜெட் 2 நிறுவனத்தின் விமான டிக்கெட் விலை ராக்கெட் வேகத்தில் அதிகரித்துள்ளது.
விமானங்களின் இருப்பு, தேவையைப் பொறுத்து டிக்கெட் விலை மேலும் உயரக் கூடும் என அந்நிறுவனம் கூறியுள்ளது. விமானப் பற்றாக்குறை காரணமாக, மாற்று வழிகள் குறைவாக உள்ள இடங்களில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என பிரிட்டன் வெளியுறவுத்துறை கூறியுள்ளது. தாமஸ் குக் நிறுவனத்தின் உபசரிப்புக்காக முன் பதிவு செய்திருந்த லிவர்பூல் கால்பந்து கிளப் அணி ஏமாற்றம் அடைந்துள்ளது.
எந்த அளவுக்கு தங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்பது தொடர்பாக ஆராய்ந்து வருவதாக அந்த அணி கூறியுள்ளது. தாமஸ் குக் நிறுவனம் வீழ்ந்ததற்கு அரசின் குறுகிய பார்வையே காரணம் என்று தொழிலாளர் கட்சி எம்.பி.யான ரெபெக்கா லாங் பெய்லி குற்றம்சாட்டியுள்ளார்.
பிரிட்டனில் வேலைவாய்ப்பும், வணிகமும் சரிவை சந்தித்து வருகிறது என்பதற்கு மேலும் ஒரு சாட்சி தான் தாமஸ் குக் திவால் என்று அவர் புகார் கூறியுள்ளார். அரசு நினைத்திருந்தால் இதை தவிர்த்திருக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இது ஒருபுறமிருக்க, பிரிட்டனின் தாமஸ் குக் நிறுவனத்திற்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்று இந்தியாவில் செயல்படும் அதே பெயர் கொண்ட நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. கனடாவின் ஃபேர்பேக்ஸ் நிறுவனத்தின் 77 விழுக்காடு பங்குகளுடன் தங்கள் நிறுவனம் செயல்பட்டு வருவதாக தாமஸ் குக் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது