வான் சிறப்பு
வான் சிறப்பு
சோழநாட்டில் வாழ்ந்த சிலம்பி என்ற பெண், கம்பர் வாயால் தான் புகழப்பட வேண்டும் என்று, கம்பருக்கு 500 பொன் அளித்து, தன்னை வாழ்த்தும்படியான ஒர் பாடலை பாட வேண்டும் என்று கேட்டுக் கொண்டாள். பொன்னைப் பெற்ற கம்பர்,
“தண்ணீரும் காவிரியே, தார்வேந்தனும் சோழனே
மண்ணாவதும் சோழ மண்டலமே”
என்று வாழ்த்தினார். அவ்வாழ்த்தைக் கேட்ட அவள், “என்னை வாழ்த்தும்படியாகத் தங்களை வேண்டிக் கொண்டதற்குத் தாங்கள் தண்ணீரை வாழ்த்துகிறீர்களே.” என்றாள்.
அப்போது கம்பர், “தண்ணீரை மட்டும் வாழ்த்தவில்லை. தண்ணீரைத் தரும் மேகத்தையும் உட்பொருளாக வாழ்த்தினேன். மேகம் மழை பெய்யாவிட்டால் தண்ணீர் இல்லை. தண்ணீர் இல்லாவிட்டால் விளைபொருள் இல்லை. இவை இல்லாவிட்டால் உலகின் எந்த உயிரும் பிழைத்திருக்க முடியாது. நீ உயிருடன் பிழைத்திருப்பதற்குக் காரணம் உணவல்லவா? அவ்வுணவு தண்ணீர் இல்லாவிட்டால் எவ்விதம் உண்டாகும்? மேலும் உனக்குப் பசியை நீக்கும் விளைப்பொருளை உண்டாக்கித் தருவதோடு தாகம் எடுக்கும் போது அந்நீரே உணவாகக் குடித்துக் களைப்பு நீங்குவதற்குப் பயன்படுகிறதல்லவா? ஆகையால் தண்ணீரைத் தரும் மேகத்தை உட்பபொருளாக அமைத்து நீரை வாழ்த்தினேன்.” என்றார்.
இதைக் கேட்ட சிலம்பி, “என் பசியை நீக்கும் விளைப் பொருள்களை உண்டாக்கி உதவுவதோடு தானும் உணவாகத் தாகத்தை நீக்கி உதவி செய்யும் தண்ணீரை வாழ்த்தியதைக் குறை கூறினோமோ? என்று வருந்தி, தாங்கள் இவ்விதம் காக்கும் மேகம் தரும் தண்ணீரை வாழ்த்தியதை அறியாமல் குறையாச் சொல்லிவிட்டேன்.” என்று புலவரிடம் மன்னிப்பு வேண்டினாள்.
இதையே வள்ளுவரும் நல்ல உணவுப்பொருளை உண்டாக்குவதோடு தானும் உணவாக உண்ண உதவுவது மழைநீரே ஆகும் என்று நீரின் உதவியைச் சிறப்பித்துள்ளார்.
துப்பார்க்குத் துப்பாயத் துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாயத் தூஉம் மழை.
துப்பார்க்குத் = உண்பவர்க்கு
துப்பு ஆய = நன்மை ஆகிய
துப்பு = உணவுகளை
ஆக்கி = உண்டாக்கி
துப்பார்க்கு = உண்பவர்க்கு
துப்பு ஆயதும் = தானும் உணவாய் இருப்பதும்
மழை = மழை நீரே ஆகும்.
கருத்து:
மழை மக்கள் உண்ண உணவைத் தருவதோடு தானும் உணவாக உண்ண உதவுகிறது.