குற்றப் பரம்பரை
குற்றப் பரம்பரை
நமக்கு ஒன்று பிடிப்பதற்கு எதாவது காரணம் இருக்கும், அதுபோல இந்த நாவலை படிப்பதற்கான முதல் காரணத் தூண்டுதல்
“பேரன்பும் பெருங்கோபமும் கொண்டவன்”
என்றநூலின் பின் அட்டையில் வாசித்த வாக்கியம் தான்.
ஒரு நூலாசிரியன் தன்னையும் மற்றும் வேயன்னாவையும் பேரன்பும் பெருங்கோபமும் கொண்டவர்கள் என்று நிலைநிறுத்தி எழுதுகிறார் என்றால் கண்டிப்பாக அந்த எழுத்தில் உண்மையும் யதார்த்த நிலையும் கண்டிப்பாக இருக்கும் என்ற ஆசையில் தான் இதை படிக்க எடுத்தேன். நான்கு நாட்களில் படித்து முடித்த முதல் புத்தகம்.
நேர்மை. வீரம். தீண்டாமை எதிர்ப்பு. களவு. கொலைகள். இதற்குள்தான் கதை.
ஒரு தனி மனிதனின் தூண்டுதலின் பேரில் ஒரு ஊரே களவு செய்து பிழைப்பு நடத்துகிறது. அந்த தனிமனிதன்தான் அந்த களவின் மூலம் பெறும் நேரடி பயன்களை அடைகின்றான், பதிலுக்கு சில தவசம் நெல்மணிகளையும், தானியங்களையும் கொடுக்கின்றான். இப்போது யோசித்தால் தெரியும் யார் திருடன் என்று. அந்த களவு செய்யும் மக்கள் வசதி வாய்ப்புடன் வாழவில்லை. அவர்களுக்கு பொருளின் மதிப்பும் தெரியவில்லை. கஞ்சிக்காக திருடுகிறார்கள். அவர்களுக்கு வேறு எதுவும் தெரியாது.
வேயன்னா. கதையில் எனக்கு மிகவும் பிடித்தவர். எல்லோருக்கும்தான். வேயன்னாவை பற்றி ஆசிரியர் விளக்கும்போது நான் சின்ன வயதில் பார்த்த பாட்டையா நினைவுக்கு வந்தார். அவரை மீசை பாட்டையா என்று அழைப்போம். உயரமான ஆள், தேக்கு மரக்கட்டை தோள், பெரிய அடர்த்தியான மீசை, திடமான உடல், மரக்கட்டையில் செய்த செருப்பில் சத்தியமங்கலத்தில் இருந்து யானை போல கம்பீரமாக வருவார். அவருடைய பேச்சும் அப்படித்தான் சிங்கத்தின் கர்ஜனைப்போல் இருக்கும். வேயன்னாவை பிடிக்க பல காரணங்கள் இந்த புத்தகத்தினுள் புதைந்திருக்கிறது. உண்மை. நேர்மை. வீரம். தொழிலுக்கும் மனிதர்களுக்கும் என்ன சம்பந்தம் ? இந்த களவு கூட்டம் நல்லவர்கள் நிறைந்த கூட்டம்.
வேயன்னாவிற்கு குழந்தை மனத்துடன் விளையாடவும் தெரியும். வளரி எறிந்து ஒருவரை சாய்க்கவும் முடியும். சிங்கத்தின் கர்ஜனைபோல் பூமி பிளக்க பேசவும் தெரியும் கண்ணீர் விட்டு அழவும் தெரியும்.
ஆங்கிலேயே காலத்தில் நடக்கும் கதை. தீண்டாமை பற்றியும். கிணற்றில் ஓலைப்பட்டை போட்டு கீழ்சாதிப்பெண் தன் குழந்தைக்காக தாகத்திற்காக தண்ணீர் இறைத்ததற்கு ஆரம்பிக்கின்றது பிரச்சினை. அதிலிருந்து பல காலகட்டங்களில் பல ஆங்கிலேயே சர்ஜென்டுகள் அந்த கூட்டத்தை கருவறுக்க திட்டமிடுகிறது. ஆனால், வேயன்னாவின் கூட்டம் மதயானைக்கூட்டம். அவர்கள் ஊரில் பெண்களும் ஆயுதம் சுழற்றுவார்கள். இறுதியில் ஒரு இள இன்ஸ்பெக்டர் வருகிறான். களவு செய்யக்கூடாது என்று சத்தியம் வாங்குகிறான். சத்தியத்தை மீறாமல் இருக்க…. சிலரின் சூதால், அவர்கள் களவை நிறுத்திய பின்னும் கூட களவுசெய்தவர்கள் வேயன்னா கூட்டம் என்று குற்றம்சாட்டப்பட்டு குண்டடி பட்டு வேயன்ன இறக்கிறார். கடைசிவரை வேயன்னா அந்த இள போலீசுக்கு செய்து கொடுத்த சத்தியத்தை கடைபிடித்தாரா ? அவர்கள் களவு மூலம் தனம் அடைந்தவன் என்னவானான் …. போன்ற பல திருப்பங்கள் கொண்டதுதான் கதை.
பிடித்த பல வரிகளில் சில வரிகள் ….
அந்த வேயன்னாவின் நடையை நீ பார்க்க வேண்டும்… சிங்கம் தோற்றுப்போகும். கழுத்தில் விழும் பூ மாலைக்கு கூட, தலைகுனிய மறுக்கும் மாவீரன்.
இவர்கள் வேறு யாரோடும் இசைந்து வாழ மாட்டார்கள். காரணம், இங்குள்ள மற்றவர்கள் பெரும்பாலோர் சமூக குற்றவாளிகள். சுயநலக்காரர்கள். தீண்டாமையைப் போற்றுபவர்கள். முதுகில் குத்துபவர்கள். சுமூகத்தை சந்தை ஆக்குபவர்கள். இந்தக் குணங்கள் எதுவுமாற்றவர்கள் கொம்பூதிக்காரர்கள். நம்பியவர்களுக்கு உயிரைக் கொடுக்கிறார்கள். நம்பிக்கைத் துரோகிகளைக் கொலை செய்கிறார்கள். வேட்டைச் சமூகத்தின் மிச்ச சொச்சங்கள் இவர்கள்.
முன்னுரையிலிருந்து…
என் பேரன்பு எவர் பால் ? பெருங்கோபம் எவர் பால் ? என்பதை என் எழுத்தைத் தொடர்பவர் அறிவர். தாட்சண்யமின்றி சாட்டை சுழற்றியவன் என்பதே என் எழுத்தின் பலம். பிற இனங்களுக்குள் நடந்தால் கைகலப்பு என்றும், இந்த இரு சாதியினர் மோதினால் இனப்பெயரையும் குறித்து, சாதிக் கலவரம் என்றும் அக்னி வளர்க்கும், தர்மம் கெட்ட சில பத்திரிக்கைகளின் சூது, எவன் கண்ணையாவது உறுத்தியது உண்டா ? சாதிப் பயிர்களுக்கு சாணி, உரம் இடுபவன்தானே, பெரியார் பெயர் சொல்லி தொடர்ந்து கொடியேற்றுகிறான் ? சில சலுகைகளுக்காக மண்டியிடும் சான்றோர், ஆன்றோர்களின் திருக்கு மீசைகளில் ஒரு வண்டி மண் ஒட்டி இருக்கிறதே.
_வேல ராமமூர்த்தி