தமிழுக்குப் பெருமை சேர்த்த கவிஞர் தஞ்சைவாணன் || காலச்சக்கரம் சுழல்கிறது – 26

 தமிழுக்குப் பெருமை சேர்த்த கவிஞர் தஞ்சைவாணன் || காலச்சக்கரம் சுழல்கிறது – 26

நாடகம், சினிமா எனப் பயணித்துக்கொண்டிருக்கும் பழம்பெரும் நடிகர் பி.ஆர்.துரை தன் நாடக, சினிமா அனுபவத்தோடு தொடர்புடைய இலக்கிய ஆளுமைகளைப் பற்றியும், சினிமா பழம்பெரும் வரலாறு பற்றியும் இங்கே பதிவு செய்கிறார்.

கோவிந்த ராமானுஜம் எனும் புனைப்பெயர் கொண்ட  தஞ்சைவாணன். 2-04-1937ஆம் ஆண்டு புன்னைநல்லூர், தஞ்சை ஜில்லாவில் பிறந்தார்.

B.A. Statistics and Mathematics. M.A. Tamil Literature படித்த இவர் கலியபெருமாள், ஆண்டாள் தம்பதிக்கு கடைக்குட்டி பிறந்தார்.  

தமிழ் மண்ணில் கவிஞராக, காங்கிரஸ் கட்சியின் முதன்மைப் பேச்சாளராக, 1963ஆம் ஆண்டில் வள்ளல் பச்சையப்பன் பற்றிய தகவல்களை நாடகமாக்கம் செய்து அதனை அரங்கேற்றிய சாதனையாளர். இ.வி.கே. சம்பத் அவர்களின் தமிழ் தேசியக் கட்சியின் முதன்மைக் கவிஞர். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பற்றி இவர் எழுதிய ‘நடிகர் திலகம்’ எனும் நூலை கர்மவீரர் காமராஜர் வெளியிட்டுப் பாராட்டிய ஒரு பண்பாளர்

‘சாந்தி’ எனும் திரைப்படத்தில் நடிகர் திலகம் நடித்த ஒரு சில காட்சிகளுக்கு உரையாடல் எழுதிய உன்னதமான எழுத்தாளர். 1961ஆம் ஆண்டு பெரியார் இயக்கம் பச்சையப்பன் கல்லூரி நாடகப் போட்டியில் எம்.ஜி.ஆர். சுழற் கோப்பையை வென்ற வீர்ர். 

இவர் ஹைதராபாத்தில் AIR, CBSல் வர்த்தக சேவை ஒளிபரப்பு தொடங்கிய குழு உறுப்பினராக, மும்பை தூர்தர்சனுக்காக நடிகர் திலகம் சிவாஜி நடித்த சத்ரபதி சிவாஜி எனும் ஆவணப்படத்தை எடுத்த இணையற்ற ஒரு எழுத்தாளராகவும், இயக்குநராகவும் கலை உலகில் வளம் வந்த வற்றாத ஒரு ஜீவ நதியாகத் திகழ்ந்தவர்தான் கோவிந்த ராமானுஜம் என்ற தஞ்சைவாணன்.

இவர், பெற்ற தாய் தந்தையையும், பெருமையுடைய தமிழ் மொழியையும் சமமாக நேசித்தவர். இவரது எழுத்திற்கும், பேச்சிற்கும் எப்போதும் பேதம் இருக்காது. இவர் பேச்சில் எப்போதும் உண்மையே உயர்ந்து நிற்கும்.

கல்லூரியில் படித்த காலங்களில் பலரது கவிதைகளையும், படைப்புகளையும் புகழ்ந்து பாராட்டிய பெருமைக்குரியவராகத் திகழ்ந்த இவர், கவிதை எழுதும்போது கவிச்சக்கரவர்த்தி கம்பரையும், நாடகம் எழுதும்போது, ஷேக்ஸ்பியரையும் நமக்கு நினைவுபடுத்தியவர்.

1963ஆம் ஆண்டு இவரை எனக்கு அறிமுகப்படுத்தியவர் தேசியக் கவிஞர் S.D சுந்தரம் அவர்கள். இவர்தான் ‘கப்பலோட்டிய தமிழன்’ திரைப்படத்திற்கு வசனம் எழுதியவர். அவர் எழுதிய ‘சிங்கநாதம் கேட்குது’ எனும் ஓரங்க நாடகத்தில் நான் நடித்ததைப் பார்த்து வியந்த தஞ்சைவாணன் அவர்கள் அன்று முதல் என்னோடு நட்பு தொடங்கி அவர் மறையும் வரை அது நீடித்தது, இன்றும் மனதளவில் அது நீடிக்கிறது.

எனக்குத் தெரிந்து இவர் எவருக்கும் தீங்கு நினைத்ததில்லை, மாறாக நன்மையே செய்தவர். சென்னை தொலைக்காட்சியில் இவர்தான் என்னை நடிகனாக அங்கீகரித்து ஆடிஷனில் தேர்வு செய்தவர்.

சென்னை தொலைக்காட்சியில் இவர் தயாரித்த குடும்ப பட்ஜெட் எனும் ஒரு நாடகத்தில்தான் நான் முதன்முதலாக நடித்தேன். இதுவரை D.D.யில் நூறு நாடகங்களுக்கு மேல் நடித்துள்ளேன்.

மறக்கமுடியாத நாடகம் மூத்த கவிஞர் முகவை ராஜமாணிக்கம் அவர்கள் எழுதிய ‘முரசுக் கட்டில்’.  தொலைக்காட்சித் தயாரிப்பாளரான கவிஞர் தஞ்சைவாணன் அவர்கள் தயாரித்த நாடகம். அதில் ஒரு காட்சி. முகவையின் தமிழை நீங்களும் படித்து ரசியுங்கள்..

மோசிகீரனார் : சேர மன்னா, உன்னுடைய பூஜைக்குரிய பொருளான முரசுக் கட்டிலில் நான் அயர்ந்து தூங்கிவிட்டேன். என்னை மன்னித்துவிடு. சங்க நூலால் பதிற்றுப்பத்தின் எட்டாம் பத்தின் தலைவனான அதியமான் ஆண்ட தகடூர் படையெடுப்பில் வெற்றி கண்ட சேரமான்.

தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை மன்னா, நீ வாழ்க! நின்னரும் தந்தை செல்வக்கடுங்கோ எனது முன்னையோன், புலவர் கபிலர் பெருமானுக்குப் பதிற்றுப்பத்து பாடியதற்காகப் பத்தோடு பத்தாயிரம் பொன் பரிசளித்தான்.

ஆனால் நீயோ ஊழிக் காலம் வாழும் பதிற்றுப்பத்தில் எட்டாம் பத்தி பாடியதற்காக ஒன்பது நூறாயிரம் பொன் பரிசளித்து ஒன்பது மடங்கு தமிழ்ச்சுவை உண்டவன் நீ என்பதை நான் அறிவேன்.

பாவலர்க்கு நீ பமரம், புலவர்களுக்கு நீ  தோழன், தமிழ் அறிந்தாரைப் போற்றிப் புறக்கும் வள்ளலன்றோ நீ.

பைந்தமிழோடு பல்லூழி காலம் வாழி! புலவர்களைப் போற்றிப் புகழ் பெற நீ வாழி!

முகவை எழுதிய தமிழைப் பேச முடியாமல் பல நடிகர்கள் திணற தஞ்சைவாணன் அவர்கள் சகஸ்ரநாமம் அவர்களுக்கு போனில் தொடர்பு கொண்டு பேசி, உடனே துரையை டி.வி. ஸ்டேஷனுக்கு அனுப்பி வைக்கும்படி சொல்ல, நான் தஞ்சைவாணன் அவர்களைச் சந்தித்து பேசும் போது, மோசிகீரனார் எனும் நாடகத்தின் ஸ்கிரிப்டை என்னிடம் தந்து “இது ஒரு இலக்கிய படைப்பு. படித்துப் பார். நாளை இது லைவ் டெலிகாஸ்ட் ஆக ஒளிபரப்பப்படுகிறது. உன்னால் முடியும் என்றால் சொல்” என்றார்.

நான் அதைப் படித்துப் பார்த்த பின், “சரி சார், இலக்கியம் எனக்கு வெல்லம். நீங்கள் லைவ் டெலிகாஸ்ட்டை நாளை வைத்துக் கொள்ளலாம்” என்றேன். 

நாடகத்தில் புலவர் மோசிகீரனராக நானும், சேர மன்னனாக பி.யு.சின்னப்பாவின் மகன் ராஜா பகதூரும், எம்.எல்.ஏ. தங்கராஜ் மோசிகீரனாரின் சீடனாகவும், கமலா ஜெயராமன் மோசிகீரனாரின் மனைவியாகவும், T.K.S. கருப்பையா காவலாளியாகவும், நடித்த அந்த நாடகத்திற்கு எஸ்.எம்.சுப்பையா நாயுடு இசையமைக்க, தீபன் சக்கரவர்த்தி எனக்குப் பின்னணி பாட, நாடகத்தை இயக்கித் தயாரித்து டி.வி.யில்  ஒளிபரப்பி இலக்கிய உலகிற்குப் பெருமை சேர்த்தவர் கவிஞர் தஞ்சைவாணன்.

‘கொஞ்சம் நில்லுங்கள்’ எனும் பெயரில் 15 நிமிட நாடகத்தைத் தயாரிக்கும் பொறுப்பில் இருந்து அவர் நூற்றுக்கணக்கான தொழில் நடிகர்களுக்கு வாய்ப்பளித்து அவர்களுக்கு வருமானத்தையும் ஏற்படுத்திக் கொடுத்த மிகப்பெரிய மாமனிதர்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களின் நாடக மன்றத்திற்கு ‘களம் கண்ட கவிஞன்’ எனும் நாடகத்தை எழுதிய பெருமைக்குரியவர்.

இவரது மனைவி பெயர் பத்மா. இவரது மூத்த மகள் சித்ரா திருச்சி வானொலி நிலையத்தில் தயாரிப்பாளராக இருப்பவர். இவர் கொடுத்த தகவலின் பேரில்தான் இந்தக் கட்டுரையை நான் எழுத முடிந்தது. இரண்டாவது மகள் ஜான்சி ராணி.

1978ஆம் ஆண்டிலிருந்து நாடக நடிகர்களின் வறுமையைப் போக்க இவர் தயாரித்த அனைத்து நாடகங்களிலும் பல்வேறு நடிகர்களுக்கு வாய்ப்பளித்து, வருமானத்தையும் ஏற்படுத்திக் கொடுத்த ஒரு நல்ல மனிதர் கவிஞர் தஞ்சைவாணன் என்று சொல்வதில் நான் மிகவும் பெருமை கொள்கிறேன்.  நான் என்றென்றும் நேசிப்பது கவிஞர் தஞ்சைவாணன் அவர்களைத்தான்.

(தொடரும்)

மூலவன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...