குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு – சுற்றுலா பயணிகள் குளிக்க தடை!
குற்றால அருவிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு தண்ணீர்வரத்து அதிகம் இருப்பதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவிகளில் குளிப்பதற்கு போலீசார் தடைவித்துள்ளனர்.
வடகிழக்கு பருவமழையின் தீவிரத்தின் காரணமாக, தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது. கனமழையின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள பல்வேறு நீர்நிலைகள் மற்றும் அருவிகளில் தண்ணீரானது ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது.
குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள குற்றாலம் பகுதிகளில் உள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, சிற்றருவி உள்ளிட்ட அருவிகளில் தற்போது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள சூழலில், குற்றாலம் மெயின் அருவியில் அபாய வளைவைத் தாண்டி தண்ணீரானது கொட்டி வருகிறது.
மேலும், நேற்று இரவு காட்டாற்று வெள்ளம் ஏற்பட்ட நிலையில், குற்றாலம் மெயின் அருவிக்கு செல்லும் வழித்தடங்களில் இலை, தளைகளுடன் சேறும் சகதிமாய் காணப்பட்டு வரும் நிலையில், நேற்று இரவு முதல் தற்போது வரை குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி, பழையகுற்றால அருவி உள்ளிட்ட அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், தற்போது வரை வெள்ளமானது குறையாமல் குற்றாலம் அருவியில் தண்ணீரானது ஆர்ப்பரித்துக் கொட்டி வருகிறது. இந்த சூழலில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மழையானது தற்போது குறைந்துள்ள சூழலில் தண்ணீரும் குறையும் பட்சத்தில் சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க அனுமதி வழங்கப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.